பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசை திருப்பவே ஆளுநர் மூலம் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நக்கீரன் ஆசிரியர் கோபால் திடீரென கைது செய்யப்பட்டு, அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆளுநர் கொடுத்த புகாரின் பேரிலேயே கோபால் மீது சட்டவிரோதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரி மாணவிகளை பாலியல் விவகாரத்திற்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நிர்மலாதேவி ஆளுநரை நான்கு முறை சந்தித்ததாகக் கூறியிருந்த செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளியானது. அத்தகைய ஒரு செய்தி நக்கீரன் பத்திரிகையிலும் வெளியானதை வைத்தே கோபால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.

பத்திரிகையில் ஒருவரைப் பற்றிய செய்தி வந்தால் அந்தப் பத்திரிகை ஆசிரியரை எப்படிக் கைது செய்ய முடியும்? சட்டவிரோதமாக கோபாலை இதற்காக கைது செய்வது என்றால் குற்றமுள்ள மனது குறுகுறுக்கும் என்பதாலா? நிர்மலாதேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய தமிழக காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்திருக்கிறது.

அதுவும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுநரே புகார் கொடுத்து அதன்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கோபால். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசைத்திருப்பவே இந்தக் கயமைத்தனத்தில் இறங்கியுள்ளார் ஆளுநர்.

தமிழ் மக்களுடைய அரசு தமிழ் மக்களுக்குத் தொடர்பே இல்லாத ஆளுநருக்கான அரசாக அவருக்கு ஏவல் செய்வதை வன்மையாகக் கண்டிப்பதுடன், சட்டவிரோதமாக நக்கீரன் கோபாலை கைது செய்திருப்பதையும் அவர் மீது தேசவிரோத வழக்கு பதியப்பட்டிருப்பதையும் வாபஸ் பெற்று உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும்” என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here