ஆளுநரின் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு சிறை: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

0
156

தமிழகம் முழுவதும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் சுற்றுப் பயணம் தொடரும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் ஆளுநரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க சட்டத்தில் வழி உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநிலத்தின் எந்தவொரு பகுதிக்குச் செல்லவும், அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தவும் ஆளுநருக்கு முழுச் சுதந்திரம் உள்ளது என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

விளக்கம் ஏன்?: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆளுநர் செல்லும் மாவட்டங்கள் அனைத்திலும் திமுகவினர் கருப்புக் கொடி காண்பித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் போராட்டம்: இந்த நிலையில் அண்மையில் நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்ற ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து போராட்டம் நடத்திய திமுகவினர், ஆளுநர் கார் மீதும் கருப்புக் கொடியைத் தூக்கி வீசினர். இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்டாலின் தலைமையில் முற்றுகைப் போராட்டம்: இதைக் கண்டித்தும், ஆளுநர் தொடர்ந்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்வதைக் கண்டித்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சனிக்கிழமை சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்தப் போராட்டத்தின்போது, தனது அதிகார வரம்பை மீறி மாவட்ட வாரியாக ஆளுநர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். இது நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆளுநர் மாளிகை விளக்கம்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக ஆளுநர் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநிலத்தின் எந்தவொரு பகுதிக்குச் செல்லவும் ஆளுநருக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. அவ்வாறு ஆளுநர் செல்லும்போது, தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் அவரை வரவேற்று, அவருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அத்துடன் மாநில நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில், மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கும், ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

இக்கட்டான காலகட்டங்களில்… : இதே போன்று மாவட்டங்கள் குறித்த பல்வேறு தகவல்களையும், மக்கள் பிரச்னைகளையும் ஆளுநர் அறிந்திருந்தால் மட்டுமே, மாநிலத்தின் இக்கட்டான கால கட்டங்களில் சரியான முடிவை அவரால் எடுக்க முடியும் என்பதோடு, குடியரசுத் தலைவருக்கும் சரியான அறிக்கையைச் சமர்ப்பிக்க முடியும்.
மேலும், மாவட்டங்களுக்கு ஆளுநர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது, மாவட்ட அதிகாரிகள் தாங்களாக முன்வந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆளுநரிடம் எடுத்துரைக்கின்றனர். மாறாக, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை விமர்சித்தோ அல்லது அதிகாரிகளுக்கு எந்தவொரு உத்தரவையோ ஆளுநர் இதுவரை பிறப்பிக்கவில்லை.

ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், மாவட்டங்களில் ஆளுநர் “ஆய்வு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். மேலும் சட்டத்தை மதிக்காமல் அவர் நடந்துகொள்வதுடன், ஆளுநர் மாளிகைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்லும் சாலைகளைத் தடை செய்யவும் முயற்சிக்கிறார்.

தடை ஏற்படுத்துவது குற்றம்: ஆளுநர் மாளிகை என்பது இந்திய தண்டனைச் சட்டம் 124-ஆவது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்தச் சட்டப் பிரிவின்படி, குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரை பணி செய்ய விடாமல் அல்லது இது போன்ற தடைகளை ஏற்படுத்துவது குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படவும், அபராதம் விதிக்கவும் வழி உள்ளது.

மேலும், ஆளுநருக்கான இந்த சுதந்திரம் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஆளுநர் மாளிகைக்கே வரவழைத்து ஆளுநர் எடுத்துரைத்துள்ளார். அதோடு, இந்த சட்ட வழிமுறைகளை அவர்கள் புரிந்துகொள்ளவும், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு சட்டப்படி நடக்கவும் போதிய கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகும், சட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவிப்பது சட்டத்தை மீறிய செயலாகவே கருதப்படும்.

ஆளுநரின் இந்த மாவட்ட வாரியான சுற்றுப் பயணத்தின் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். வரும் மாதங்களிலும் இதுபோன்ற ஆளுநரின் சுற்றுப் பயணம் தொடரும் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here