ஆளுநரின் அறிக்கை மிரட்டும் தொனியில் இருக்கிறது ; ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் எங்களின் போராட்டமும் தொடரும் : முக ஸ்டாலின்

0
255

ஆளுநரின் ஆய்வு தொடரும் என்றால் மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்க, திமுகவின் போராட்டக் கொடி தொடர்ந்து தீரமுகம் காட்டி உயர்ந்து கொண்டே இருக்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள் “விளக்கம்” என்ற பெயரில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிரட்டல் விடுக்கும் தொனியில், தனது மக்கள் தொடர்பு இணை இயக்குநர் மூலமாகச் செய்தி ஒன்றை வெளியிட்டு, அரசியல் சட்டத்திற்கு அப்பால் அல்லது அரசியல் சட்டத்திற்கு முரணாக, நேரடி அரசியல் செய்ய முயன்றிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்திட மாவட்டங்களுக்குச் செல்லவில்லை என்றும், ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்தான் அவ்வாறு சொல்லப்படுகிறது என்றும் ஆளுநர் சார்பில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. ஒரு மாவட்டத்திற்குச் சென்று அங்கே மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டக் காவல்துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகள் ஆகியோரை எல்லாம் அழைத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டு அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியெல்லாம் விவாதிப்பதற்குப் பெயர் “ஆய்வு” என்பதல்லாமல், வேறு என்ன என்பதற்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், விளக்கமோ விபரமோ ஏதுமில்லை.

ஆளுநரின் இந்த “ஆய்வு” என்பதைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் சொல்லவில்லை- ஆளுநர் அவர்களின் மாவட்டச் சுற்றுப்பயணம் குறித்துச் செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் அனைத்துமே “ஆளுநர் ஆய்வு” என்றுதான் செய்தி வெளியிட்டு வருகின்றன என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்களே ஆங்கில நாளேடுகளில் படித்திருக்கலாம். எனினும் இதுவரை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பத்திரிக்கைக்கும் “ஆய்வு” என்று செய்தி போடக்கூடாது; ஏனெனில் ஆளுநர் செல்வது “ஆய்வு”க்கல்ல என்று விளக்கம் அளித்து இதுவரை தகவல் சென்றதாகத் தெரியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, மாண்புமிகு ஆளுநர் கலந்து கொள்ளச் செல்லும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ, வேந்தர் என்ற முறையில் கலந்து கொள்ளும் பல்கலைக்கழகங்களின் நிகழ்ச்சிகளிலோ கருப்புக் கொடி காட்டவில்லை; ஏன் அலுவலகப் பணியை முன்னிட்டு டெல்லிக்குச் செல்லும் போது விமான நிலையத்தில் கருப்புக் கொடி காட்டவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையிலும் கடமையிலும் அதிகாரத்திலும், அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கும் மரபுகளுக்கும் மாறாகத் தலையிட்டு, மாவட்ட அளவில் அரசு அதிகாரிகளைக் கூட்டி நடத்தும் ஆய்வுக்குத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது; எதிர்ப்பின் அடையாளமாக, அனுமதிக்கப்பட்ட வழக்கத்தின் அடிப்படையில், கருப்புக் கொடியும் காட்டுகிறது.

“கூட்டாட்சித் தத்துவம்” என்பது அரசியல் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அருட்கொடை. அதில் குறுக்கிட்டு, இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கற்பனை செய்து, தனக்கென ஓர் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இரண்டாம் தரத்திற்குத் தள்ளிச் சிறுமைப்படுத்துவதன் மூலமாக ஜனநாயக நெறிகள் இழிவுபடுத்தப் படுவதை, மாநில சுயாட்சிக்காகவும் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் நீண்ட காலமாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது; எதிர்த்துப் போராடாமல் விலகியும் ஓடாது என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உணர வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 பற்றிக் குறிப்பிட்டு ஏழு வருட சிறை தண்டனை பற்றியெல்லாம் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சார்பில் குறிப்பிட்டு, தி.மு.க.வை மிரட்டிப் பார்க்க முயற்சி செய்திருக்கிறார்கள். நான் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டத்தின் 163 ஆவது பிரிவையும், அந்தப் பிரிவின் கீழ் வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் படித்துப் பார்த்தாலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு எந்த அளவுக்கு நியாயமானது சட்டத்திற்குட்பட்டது என்று நன்கு தெரியும். ஏனென்றால் அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள “விருப்ப அதிகாரங்கள்” தவிர, அனைத்து விஷயங்களிலும் மாநில அமைச்சரவையின் அறிவுரையின்படிதான், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நடக்க வேண்டும். இது அரசியல் சட்டத்தின் படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மாண்புமிகு ஆளுநர் அவர்கள் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல- கடமையும் ஆகும். பா.ஜ.க. அரசு நடைபெறும் மாநிலங்களில்- ஏன் வலுவான தலைமை உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட, ஆளுநர்கள் இந்த அரசியல் சட்டக் கடமையிலிருந்து விலகவில்லை.

மத்திய பிரதேசத்திலோ, மேற்கு வங்கத்திலோ ஆளுநர்கள் மாவட்ட ஆய்வுகளை நடத்துவதில்லை. ஏன் தமிழகத்திலேயே கூட இதுவரை இருந்த ஆளுநர்கள் இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்தியதில்லை. ஆனால் இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சார்பில் அறிக்கை விடுத்திருப்பது, அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமற்றது மட்டுமல்ல, கூட்டாட்சி தத்துவத்திற்கே ஆபத்தானது.

தலைமைச் செயலகத்தில் ஓர் அரசாங்கம், ராஜ்பவனில் ஓர் அரசாங்கம் நடத்தி, இரட்டை அரசாங்கம் நடத்துவதற்கு நிச்சயம் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்று பெரிதும் நம்பகிறேன்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று என்ற நிலைப்பாடு உடையது எனினும், அரசியல் சட்டத்தில் ஆளுநர் பதவி இருக்கும் வரை அந்தப் பதவியின் மாண்புகளை மதித்து நடக்கும். அதே நேரத்தில் அப்பதவியில் இருப்பவர்கள் அரசியல் சட்டத்தின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மாறாகச் செயல்பட நினைக்கும் போது, அதை அடிமைத்தனத்துடன் இருக்கும் அதிமுக அரசு வேண்டுமானால் வரவேற்கலாம்; திராவிட முன்னேற்றக் கழகம் பொறுத்துக் கொள்ளாது. ஆகவே, இந்த கருப்புக் கொடி போராட்டத்திற்குக் காரணம் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் எல்லைமீறிய அதிகார வேட்கைதானே தவிர, நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தற்போதைய ஆளுநர் மத்திய பாஜக அரசின் பிரதிநிதியாக இருப்பதால், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் செய்ய வேண்டிய அரசியல் பணிகளை செய்து அரசியல் ரீதியாக உதவிட விரும்புகிறார் என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள். ஆகவே, தி.மு.க.வின் போராட்டம், அரசியல் சட்டத்தைப் போற்றிக் காப்பாற்ற நடப்பது; ஆளுநருக்கு அவரது அதிகார எல்லையை நினைவூட்ட நடப்பது. ஆனால், மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஆய்வு பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அரசியலுக்காக நடப்பது என்ற அடிப்படை உண்மையை தமிழ்நாட்டு மக்களும் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட ஊடகத்தினரும் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இறுதியாக “ஆய்வு தொடரும்” என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அறிவித்துள்ளார். இதை இங்குள்ள முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமியும், அவர் தலைமையில் உள்ள அதிமுக அரசும் எதிர்ப்புத் தெரிவிக்க துணிச்சல் இல்லாமல் இருக்கலாம்; முதுகெலும்பு வளையும் அளவிற்கு ராஜ்பவன் முன்பும் மத்திய பா.ஜ.க. அரசின் முன்பும் குனிந்து தரையைக் கவ்வி நடக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்கும் இயக்கம் அல்ல. இது நெருக்கடி நிலைமை என்ற நெருப்பாற்றிலேயே வெற்றிகரமாக நீந்தி வந்த இயக்கம். ஆகவே, மாண்புமிகு ஆளுநர் அவர்களின் அரசியல் சட்டத்திற்கு எதிரான “ஆய்வு “தொடரும் என்றால், அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தையும், கழகத்தின் கொள்கையான மாநில சுயாட்சியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும் பாதுகாக்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டக் கொடி தொடர்ந்து தீரமுகம் காட்டி உயர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here