ஆர்.கே.நகரில் யார் ஜெயிச்சா நமக்கென்ன?

சோணகிரியின் அரசியல் உலகம்

0
2506
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அம்மா சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன்.

“கொளுத்தும் வெயிலைவிட அதிக சூட்டுடன் ஆர். கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடக்குது. இதோட சூட்சுமம்தான் என்ன? போட்டியில இருக்கற எவனோ, எவளோ இந்த ஒரே ஒரு சீட்டுல ஜெயிச்சாலும் முதல்வர் பதவி கிடையாதே! எதுக்கு எல்லோரும் இவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு எனக்குப் புரியல்ல!”

டிஸ்கஷனை மனைவி “போண்டா-டீ” துவக்கி, ஒரு உண்டை பொங்கலை வாயின் உள்ளே தள்ளினாள்.

வீடுகளிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும் நாட்டுநடப்பு அலசப்படுவது இயல்பு. உண்ணும் வேளையில் எங்கள் வீட்டின் வட்டமேஜை பாராளுமன்றமாகிவிடும்.

“இதுகூடவா தெரியல்ல? யார் ஜெயிக்கறாங்களோ, அவங்கதான் வருங்கால அ. இ. அ. தி. மு. க தலைமை ஏற்க வேண்டி இருக்கும்,” என்றான் ஆதி, டீயைச் சிப்பியபடி.

“அதிகப்பிரசங்கி” ஆதி, , “சீறுவாய்” சரசு, “அடங்காப்பிடாரி” அகிலாண்டம் மற்றும் ‘மௌன மூர்த்தி’ மஹாவிஷ்ணு ஆகியோர் முறையே எனது மகன், மருமகள், மகள் மற்றும் மாப்பிள்ளை என்ற உறவினர்கள். எங்கள் வீட்டின் அரசியல் அவை அங்கத்தினர்கள்.

இதையும் பாருங்கள்: செல்ஃபோனால் நாம் தொலைத்தவை

இதையும் பாருங்கள்: ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மலேசிய பிரதமர்

கூச்சல், குழப்பம், “பைட் ஜாயியே” என்ற ‘கட்டளை/கெஞ்சல்’, கெட்ட வார்த்தை பரிமாற்றம், தோஷங்கள் நிறைந்த கோஷ அட்டைகள் காண்பித்தல், கை கலப்பு, மைக் உடைப்பு, மேஜைக் கவிழ்ப்பு, சட்டைக் கிழிப்பு, குறுமிளகு ரசத்தை அரசியல் எதிரிகள் மீது பீய்ச்சி அடித்தல், கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தல் போன்ற எந்த ஜனநாயக மரபு நிகழ்வையும் எங்கள் வீட்டு அவையில் காண முடியாது.

“குடுகுடுப்பை! அ. இ. அ. தி. மு. க வாக்குகள் நான்கு மூலை, ஐந்து முடுக்குன்னு சிதற எல்லா வழி வகைகளையும் பண்ணினதுக்கப்புறம் ஆளற, ஆளப்போறதாச் சொல்லிக்கற எந்தக் கழிசடைக் கட்சியும் ஜெயிக்காது. தி. மு. க வேட்பாளர் பித்துக்குளி முருகதாஸ்தான்-“

என் மருமகள் சீறுவாய் சரசுவின் சொற்பொழிவை, நான் அருந்திக்கொண்டிருந்த சரக்கரை இல்லாத காப்பிக் கோப்பையைக் கீழே வைத்தபடி, இடைமறித்தேன்.

“பித்துக்குளி முருகதாஸ்ங்கறவரு, 2015ல, தன்னோட 95-ஆவது வயசுல மறைஞ்ச, ஒரு பக்திப் பாடகர். அங்கே போட்டியிடற தி மு க வேட்பாளர் பெயர் மருது கணேஷ்,” என்றேன்.

“பேரு மருது கணேஷ்ங்கற பித்துக்குளின்னே இருக்கட்டுமே! இப்ப அதுவா முக்கியம்?” என்றாள் சரசு சளைக்காமல்.

இதையும் பாருங்கள்: யாராவது உங்களிடம் பொஸஸிவாக இருக்கிறார்களா? இப்படிச் செய்யுங்கள்

இதையும் பாருங்கள்: ஊடக சுதந்திரத்தை எப்படிப் பாதுகாப்பது?

“நிச்சயமா முக்கியம். முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பொறக்கறப்ப வைக்கப்பட்ட பேரு தட்சிணாமூர்த்தி. அந்தப் பெயரச் சொல்லி, அதுதான் கலைஞர்னு இன்றைக்கு எத்தினி பேருக்குப் புரியவைக்க முடியும்? அவருக்கு குறைஞ்சபட்சம் ஏழு டாக்டர் பட்டமாவது வழங்கப்பட்டிருக்கு. பல டாக்டர்கள் உள்ள ஒரே இடத்தை நாம மருத்துவமனைன்னுதான் சொல்லுவோம். அதுக்காக டாக்டர் கலைஞர்-ங்கற பெயருக்குப் பதிலா ஆஸ்பத்திரி தட்சிணாமூர்த்தின்னு சொன்னா அது காமெடியோட உச்சகட்டம்! போட்டி போடறவர் பெயர் மருது கணேஷ். அதை ஒழுங்காச் சொல்லணும். தவிர, மருது கணேஷ் ஒரு வழக்கறிஞர். அவரைப் பித்துக்குளின்னு சொல்லறது சரியில்ல,” வக்கீல் படிப்பை முடித்துள்ள மகள் அடங்காப்பிடாரி அகிலாண்டம் பொரிந்து தள்ளிவிட்டாள்.

நிஜமான சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள் ஆகியவற்றில் நிகழ்வது போல, எங்கள் வீட்டு அவையில் உறுப்பினர்களுக்கு வாய்க்கு ருசியான உணவும், இனிக்கும் டிகிரிக்காப்பியும் இலவசமாக கிடைப்பதுண்டு. வேறு பல சலுகைகளும் சகாய விலைகூடக் கொடுக்காமல் கிடைக்கும். இவற்றை எல்லாம் ஊரான் வீட்டு நெய் போல வாரி வழங்கி தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருக்கும் சாமர்த்தியசாலியான என் போண்டாட்டி தான் எங்கள் வீட்டில் கோலோச்சுகிறாள். மேற்படி குடும்ப அங்கத்தினர்களுக்கு எங்கள் வீடு கூவத்தூர் லாட்ஜ். அதன் செலவுகளை எனது சம்பாத்தியம் வாயிலாக ஏற்றுள்ள என்னைப் பொறுத்தவரை – அதே இடம் – கூவம் நதிக்கரை.

“அவர் தி. மு. க கட்சி சார்புல போட்டி போடறாரு. கலைஞர் குடும்ப உறுப்பினர்களைத் தவிர அந்த அமைப்புல உள்ள மத்த எல்லாருமே அந்தக் குடும்பம் சம்பாதிக்க உதவும் அசல் ஊத்துக்குளி வெண்ணைப் பித்துக்குளி ரகங்கள்தான். ஒரு பேச்சுக்கு ஜெயிக்கப்போறது பித்துக்குளி மருது கணேஷ்னே வெச்சுப்போம்…”

இதையும் பாருங்கள்: சரணாலய நகரங்கள் என்றால் என்ன?

அகிலாண்டம் வாய், மாங்காய் ஆகியவற்றின் புளிப்பால் பாதிப்படையாத பிராணி. நான் அப்படி அல்ல.

“பிரச்சாரம் ஓயாத நேரத்தில் இப்படி எல்லாம் சொல்லக்கூடாது. அது தேர்தல் விதிமுறைகளுக்கு விரோதமான போக்கு…” மீண்டும் இடைமறித்தேன்.

எனது உடலிலுள்ள டயபட்டீஸ் என்ற சர்க்கரை ஆலை, அதை அவ்வப்போது ஸ்தம்பிக்கச்செய்யும் இரத்தக் கொதிப்பு என்ற இயந்திரக் கோளாறுகள் காரணமாக, மேற்படி “வாய்க்கு ருசியான உட்கொள்ளும் சொகுசு சௌகர்யங்கள்” எனக்கு மறுக்கப்படுபவை. அடியேன் பெயரளவிலும், செயல் முறையிலும் சம்பாதித்துக் கொட்டும் வீட்டின் ஏமாளி சோணகிரி. ஆனால், எங்கள் வீட்டின் அவையில் அவ்வப்போது கலந்து கொண்டு பேசும் உரிமை எனக்கு உண்டு.

“ஒரு பாயின்ட் ஆஃப் ஆர்டர்! ஜெயிக்கப்போறது மருதுதான்னு எந்தக் கிளி ஜோஸ்யனும் ஆரூடம் சொல்லல்ல. அப்படியே சொல்லியிருந்தாலும், அதை எப்படி ஒத்துக்கறதாம்? ஆளாளுக்கு ஆர். கே. நகரில் பணத்தை வாரி இறைக்கிறாங்கன்னு புகார்கள் உள்ளன. ஏதோ பத்திரிக்கையில ரூ.2000க்கு ஆர். கே. நகர்ல எவனோ சில்லறை மாத்தப்போனதாகவும், அதுக்கு கடைக்காரர் – ‘இப்போ ரூ.2000 யே இங்கே சில்லறைதான் டோய்!”ன்னு சொன்னதாகவும் ஜோக்கே போட்டாங்க. தொகுதியில பணம் செலவு பண்ணறவங்க எல்லாம் தொங்கட்டான் ரக பிஸ்கோத்துக்களா என்ன? ஆகவே, யார் வெல்வார்கள் என்ற ஆரூடத்தனமான வார்த்தைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்!”

வழக்கம்போல எனது புத்திசாலி மாப்பிள்ளை மஹாவிஷ்ணு ஒரு போடு போட்டு, மகள் “அகில்ஸ்”இன் நன்மதிப்பைப் பெற்று விட்டார். இன்று இரவு அவரது பெட்ரூம் காட்டில் “மழை” நிச்சயம்!

உலகின் ஒரே பேசும் திறன் கொண்ட மனிதகுல-நட்பு மாணிக்கம், நான்கு-பாத ராஜபாளைய வம்ச திலகரான மாண்புமிகு சுவானேசுவரர்தான் எங்கள் வீட்டு அவையை நடத்தும் சபாநாயகர். அவர் லொள்-லொள் என்ற ஓசையை எழுப்பி தான் பேச விரும்புவதைத் தெரியப்படுத்தினார்.

இதையும் பாருங்கள்: ஜெல்லி ஐஸ் க்ரீம் பிரியரா நீங்கள்? இதைப் பார்க்காதீர்கள்

இதைப் படியுங்கள்: ஆன்மாவோடு பேசலாம்

“நாட்டின் நிஜமான ஆட்சியை அதிகாரிகள் நடத்துவதுபோல நடித்து சம்பாதிக்கிறார்கள். அது நடக்க அனுமதித்து ஒத்துழைக்கும் அரசியல்வாதிகள் சம்பாதிக்க அவர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கு தொழிலதிபர்களும் வியாபாரிகளும் உதவுகிறார்கள். சட்டமன்றங்களில் கருத்துக்களைச் சொல்ல உறுப்பினர்களுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால், அவற்றுக்கும், ஆட்சி நடக்கும் முறைக்கும் எந்த சம்பந்தமும் நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி, காக்காய்க் குளியல் அளவுக்குக்கூட கிடையவே கிடையாது. வீட்டிலும் நாட்டிலும் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது என்பதை உணர்த்த கருத்துப் பரிமாற்றப் பிதற்றல் வைபோகச் சடங்கை அரங்கேற்றுகிறோம் என்பதை உணர்ந்து அவை உறுப்பினர்கள் தத்தம் கருத்துக்களைக் கூறலாம். தகாத வார்த்தைகள் போன்ற அசம்பாவித நிகழ்வுகளின்போது மட்டும்தான் அவைக் குறிப்பிலிருந்து ஏதேனும் நீக்கப்படவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் நிலை உருவாகும். நமது அவையை சில மாநில சட்டசபைகளின் தாழ்ந்த தரத்திற்கு இறக்க வேண்டாம் என அவை உறுப்பினர்களை விண்ணப்பித்துக் கொள்கிறேன்,” என்றார் “நாய்-அகர்” சுவானர்.

பத்துப்பாத்திரம் தேய்த்து, வீட்டைக் கூட்டி, மொழுகி, துணி தேய்த்து, காய்கறி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, மளிகை சாமான், வார இதழ்கள், அயர்ன் செய்ய அளித்த துணிமணிகள் ஆகியவற்றை வெளியே சென்று – கொடுத்து-வாங்கி வந்து தொண்டு செய்கிற மூதாட்டி குருவம்மாவுக்கு மக்களின் பிரச்சனைகளின் உண்மை நிலையை அவையில் விளக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

“ஆர். கே. நகருல ஆரு கெலிச்சாலும் தோத்தாலும், மடுவாங்கரக் குழாயில எப்பவும் போல தண்ணி வராது, காத்துதான் வரும்! வெயிலு காலத்துல திடீர்ன கரண்டு புட்டுக்கும். ஃபோனப் போட்டா ஈபியில எவனும் எடுக்க மாட்டான். இதெல்லாம் அல்லாத் தொகுதிக்கும் பொதுவு. அதுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிங்க. ஆச்சியோட காச்சி மாறினாலும் மாறாட்டியும் வயசுக்கு வந்த என் பேத்தி முத்துப்பேச்சிக்கு இன்னா லாபம்? அத்த ஸொல்லுங்க!”

குருவம்மாவின் நெத்தியடி மற்ற எல்லார் வாய்களையும் அடைத்துவிட்டது. ஆனால் எங்கள் அவையின் “நன்றிவேந்தர்” அதற்கும் எதிர்க் கருத்து வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன?: வீரமான பெண் பதிவின் முழு விவரம்

இதையும் படியுங்கள்: சீமைக் கருவேல மரங்களை நம்பி வாழும் மக்கள் என்ன செய்வார்கள்?

“நடப்பது நடந்தே தீரும் நம் விதி என்பதில்லை அடுத்தவர் சுற்றுச்சூழல் ஆக்கிய தாக்கம் கண்ணா. நடந்தது தீமையானால் இடுக்கிடும் கவலை தீர எண்ணிடும் “சாக்கு” அறிய முயல்வதே உண்மை கண்ணா, என்பது தமிழறிஞர் பொதுவன் அடிகளின் கருத்து. நா குருவம்மா பாணியிலயே இனி பேசறேன். இந்த அவையில் இன்றைக்கு எடுத்துகிட்ட ஜப்ஜெக்டு மேட்டர் இன்னா? வீட்டு அம்மா எளுப்பின ஜிம்பிளு கேள்வி: ஆரு ஜெயிச்சாலும் முதல்வர் பதவிக்கு வர முடியாதே! அப்படி இருக்க ஸொல்லோ, எதுக்கு வீணா அவ்ளோ பேரும் இவ்வளவு ஜ்ட்ரெயின் பண்ணிக்கறாங்க? இத்தத் தானே அம்மா நீங்க கேட்டீங்க?”

கேள்வியை எழுப்பியபோது, முன்கால்களால் நாய்-அகர் இரு முறை மேஜையைத் தட்டினார்.

“அப்பாடா… இந்த வீட்டு மனுஷனுங்க மறந்தாலும், நீயாவது நான் கேட்ட விஷயத்தை எல்லோருக்கும் நினைவூட்டினியே,” என்றவாறு போண்டா பெருமூச்சு விட்டாள்.

“ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் போட்டியிலிருப்பது 62 நபர்கள். போட்டி அ. இ. அ. தி. மு. க கட்சியின் அடுத்த வாரிசு யார் என்பதற்கான பலப்பரீட்சை என்று தொளவாய் தளவாய் பத்திரிக்கையாளர்கள் சிந்திக்காமல் உளறுகிறார்கள், எழுதுகிறார்கள்,” என்று துவங்கினார் சுவானேசுவரர்.

“ஜெயிக்கப்போறது யார்னு வாக்கு எண்ணிக்கைக்கு அப்புறமாத்தானே தெரியவரும்? அதுதானே ஆளும் அ. இ. அ. தி. மு. கவோட தலை எழுத்தை நிர்ணயம் பண்ணும்?”

என் கேள்வி எரிச்சலுடன் வந்தது.

“மனிதன் மாறி விட்டான், மரத்தில் ஏறிவிட்டான்,” அப்படீன்னு கண்ணதாசன் பாவமன்னிப்பு படத்துக்காக எழுதின பாடலை திருத்திப் பாடவேண்டியது தான். 2016ல நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால், ஆர் கே நகர் தொகுதியில ஜெயலலிதா 97,218 வாக்குகள் வாங்கி ஜெயிச்சாங்க. தோத்தவங்கள்ள அதிக வோட்டுக்கள் [மொத்தம்: 57, 673] ஷிம்லா முத்துச்சோழனுக்குச் சென்றன. நடக்கவிருக்கும் இடைத் தேர்தல்களில் அ. இ. அ. தி. மு. க என்ற கட்சியும், அதன் இரட்டை இலைச் சின்னமும் போட்டியில் இல்லை. அ. இ. அ. தி. மு. க வாக்குகளை டி டி வி தினகரன், இ.மதுசூதனன் மற்றும் தீபா ஆகியோர் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள். யார் அதிக வாக்குகள் பெற்றாலும் வாக்குகள் சிதறும். இது அனைவருக்கும் தெரியும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ. இ. அ. தி. மு. க பெயரை யார் எப்படி ரிப்பேராக்கினார்கள் என்பது பற்றி பட்டிமன்றம் மட்டும்தான் நடத்த முடியும். கட்சியை நடத்த முடியாது. தோற்ற மூன்று முக்கியஸ்தர்களும் ஒன்று சேர்ந்து தி. மு. கவைத் தோற்கடிப்பது என்பது முடியாத காரியம் – ஏனென்றால், அ. இ. அ. தி. மு. க வாக்குகள் ஒரே ஒருவருக்கு என்று விழாது. அந்தத் தகுதியுள்ள ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இனி யாருக்கும் கிடையாது. அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், வெற்றிபெறப்போகும் மருது கணேஷ் தி. மு. கவின் புதிய தலைமையை ஏற்றுள்ள ஸ்டாலினின் பிஸ்கோத்துத்தனமான பகடைக்காய். அந்த ஆளை ஊத்துக்குளி வெண்ணைத்தனமான பித்துக்குளின்னு சொன்னதுல தப்பே இல்ல! தோத்துப் போறது உறுதின்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா, அ. இ. அ. தி. மு. க என்ற கட்சி சார்பில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க எவரும் ஒரு ரூபாய்கூட செலவழிக்கப் போவதில்லை. “பசை” உள்ளவர்கள் செல்லப்போவது தி. மு. கவுக்கா, பா. ஜ. கவிற்கா என்ற கேள்வி மட்டும் தான் மிச்சம். ஆர். கே. நகரைப் பொறுத்த மட்டில் இரண்டு முறை அ. இ. அ. தி. மு. க சார்பில் ஜெயித்த சேகர் பாபு தி. மு. கவுக்குச் சென்றுவிட்டார். அதற்கு முன்பு வென்ற மதுசூதனன் இந்த முறை தோற்ற பிறகு எங்கு செல்வார் என யாருக்கும் தெரியாது. ஓ. பி. எஸ்ஸுக்கு கஞ்சப் பிசினாரின்னு ஏற்கனவே ரொம்ப நல்ல பெயர். பெரியகுளத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டோ, டீக்கடை நடத்தியோ தன்னை எல்லோரும் எப்படி எல்லாம் ஏமாற்றினார்கள் என்ற புத்தகத்தை ஓ. பி. எஸ் எழுதலாம். அது ஒன்றுதான் போணியாகும் விஷயம். தோற்றதற்குப் பிறகு அமலாக்கப்பிரிவு தொடுத்துள்ள வழக்குகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தினகரன் இடத்தில் நான் இருந்தால், சிங்கப்பூர் பிரஜை தகுதியைப் புதுப்பித்து, வெளி நாட்டில் செட்டிலாகி, சிறை செல்லாமல் தப்பிக்க வழி தேடுவதில் மட்டுமே என் கவனம் இருக்கும். இதுவரை தீபாவை அ. இ. அ. தி. மு. க கட்சி ஏற்காத நிலையில் இனி ஏற்க வேண்டும் என்றால், ஜெயலலிதா பெற்ற வாக்குகள் அளவுக்கு செல்வாக்கு உள்ள நிலை அவருக்கு வர வேண்டும். அது வரும்வரை மற்றவர்களது கைகள் பூப்பறித்துக் கொண்டு இருக்காது. சுருக்கமாக, ஆர். கே. நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அ. இ. அ. தி. மு. க என்ற கட்சிக்கு விலாசம் இருக்காது. வில்லங்கங்கள் மட்டுமே இருக்கும். மற்றபடி, தே. மு. தி. க, பா. ஜ. க, ஸி. பி. எம் ஆகிய கட்சிகள் வாக்குகளைச் சிதறச் செய்யும், அவ்வளவே!”

நாய் அகர் ஒரு நீண்ட சொற்பொழிவை நடத்தி, தன் முன் ஸாஸரில் உள்ள பாலை நக்கிக்குடிக்க ஆரம்பித்தார்.

இதையும் பாருங்கள்: சாம்சங் எஸ்8இல் என்ன விசேஷம்?

இதையும் படியுங்கள்: ஜெயலலிதாவின் மூன்று மந்திரங்கள்

எனக்குக் கோபம் வந்தது.

“நீ மனுஷன்லியே சேர்த்தி இல்லை. அதுனால நீ சொல்லற தீர்ப்புக்கு வேல்யூவே கிடையாது. ஆனாலும், நீ சொல்லறதுல நியாயம் இருக்கோன்ற சந்தேகம் மட்டும் எனக்குள்ற நல்லாவே இருக்கு. ஆனா இது எல்லாம்தான் எல்லாருக்குமே தெரிஞ்சிருக்குமே. அப்படியும் ஏன்…”

“நல்லதை நினைத்து, அதைச் சுருட்டி பாழும் கிணற்றில் போடவும் என்று ஹிந்தியில் ஒரு பழமொழி உண்டு. தமிழகத்தின் ஆர். கே. நகர் தொகுதியின் கதை என்னவென்றால் – நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகு, அங்குள்ள அத்தனைக் கிணறுகளிலும் உள்ள நீர் வற்றி, அவை பாழ் குழிகளாகும் அபாயத்தை அடையும். ஆர். கே. நகரை சிங்கப்பூர் மாதிரி ஆக்குவேன் என்று முன்பு ஜெயலலிதா கூறியதாக நினைவு. தினகரன் சிங்கப்பூர் ஓடவேண்டி வந்தால், அந்தச் சூளுரையின் ஒரு பகுதியாவது நிறைவேறிற்று என்று சொல்லிக்கொள்ளலாம். மற்றபடி, அங்குள்ள தொழிற்கூடங்களில் உள்ள தொழிற்சங்கங்களை வலுப்படுத்த ஸி. பி. எம் இதன் பிறகு முயலும், வருங்காலத்தில் பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் என நிரூபிக்க பா. ஜ. க முயலும், தே. மு. தி. க உடைய மேலும் காரணங்கள் உருவாகும், சுருக்கமா, எல்லாமே வேஸ்டு!”

ஸ்வானேசர் இறங்க முற்பட்டதால், அதன் விசேஷ நாற்காலியை நகர்த்த உதவினேன்.

“விழுந்து விழுந்து பத்திரிக்கையாளர்களும், அரசியல்வாதிகளும், கட்சிகளும், அதிகாரிகளும் ஆர். கே. நகரில் உழைப்பது எல்லாமே வீணான செயலா?”

எல்லோரும் ஒருமித்தக் குரலில் கேட்டோம்.

“பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக, பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக,”ன்னு ஒரு பழைய எம் ஜி ஆர் படப் பாட்டு இந்த நேரத்துல நினைவுக்கு வருது. படத்தோட பெயர் பணக்காரக் குடும்பம்! மனுஷங்களுக்கு எம். ஜி. ஆர்கிட்ட நல்லதும் நடந்தது, கெட்டதும் நடந்தது. ஆனா, மிருகங்களை எம். ஜி. ஆர் நல்லா மட்டும்தான் நடத்தினாரு. அவரு உருவாக்கின கட்சியோட நிலையை மேற்படிப் பாட்டோட வரிகள் உணர்த்துது. அவருக்கும், அவருக்குப் பிறகு கட்சியை வளர்த்த ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பணக்காரக் குடும்பத்தோட ரகசிய கல்லாப்பெட்டிக்குள்ள அ. இ. அ. தி. மு. கவுக்கு கல்லறைன்னு நினைக்கறப்ப, மனசை என்னவோ பண்ணுது. அவையை ஒத்தி வைத்து மனதைத் தேற்றிக்கொள்ள வெளியே கொஞ்ச தூரம் நடந்துட்டு வர்றேன்,” என்று கூறி யாரது பதிலுக்கும் காத்திராமல் நாய் அகர் வீட்டிற்கு வெளியே சென்றார்.

இதையும் பாருங்கள்: மக்கள் முதல்வர்

(விளக்கம்: இதைப் போன்ற விசேஷ பத்திகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளுக்கு எழுத்தாளர்களே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்; அவற்றை இப்போது டாட் காமின் கருத்துகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்; இப்போது டாட் காம் தமிழ்நாட்டில் சுதந்திரமான ஊடகவியலை வலுப்படுத்தும் சாதனம்; உங்களது கருத்துகளை editor@ippodhu.comக்கு எழுதுங்கள்.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்