ஆர்.எஸ். பாரதி வழக்கில் அரசு ஏன் அதிகம் ஆர்வம் காட்டுகிறது? உயர் நீதிமன்றம் கேள்வி

0
232

மாநில அரசு கவனம் செலுத்த வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் அதிக அக்கறை காட்டுவது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்களின் அடிப்படையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் ஆர்.எஸ.பாரதியை கடந்த மே 23-ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த வழக்கில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி  சரணடைந்த ஆர்.எஸ் பாரதிக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடுமையான நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் ஆர்.எஸ் பாரதிக்கு  அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. கரோனா தொற்று நோய் பரவலை காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது. மேலும் கரோனா நோய்த் தொற்று காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ் பாரதி கூறுவதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி,  மாநில அரசு கவனம் செலுத்த வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பி, விசாரணையை வரும் ஜூன் 19 – ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here