தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தில் மாற்றங்கள் செய்வது, மக்களின் கண்காணிப்பில் இருந்து ஊழல் அதிகாரிகள் தப்புவதற்கே வழிவகுக்கும்’ என்று மத்திய தகவல் ஆணையர்களில் ஒருவரான ஸ்ரீதர் ஆச்சார்யலு கவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் வகையில், ஆர்டிஐ சட்டத்தின் 8 (1) (ஜே) பிரிவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரைகளின் அடிப்படையில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு வரைவு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

தற்போதுள்ள ஆர்டிஐ சட்டத்தின் 8 (1) (ஜே) பிரிவானது, அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள், அவை பொது நலனுக்கு தொடர்பில்லாத பட்சத்தில், அவற்றை வெளியிடுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கிறது. அதேவேளையில், பொது நலனுக்கு தொடர்பிருப்பதாக மத்திய பொது தகவல் அதிகாரியோ, மாநில பொது தகவல் அதிகாரியோ கருதினால், அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட அந்தப் பிரிவு அனுமதிக்கிறது.

இந்நிலையில், அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட மேலும் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும் வகையில் மேற்கண்ட சட்டப் பிரிவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஸ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்த திருத்தம் ஊழல் அதிகாரிகள் மக்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க வழிவகுத்துவிடும் என்று தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூருக்கும், இதர தகவல் ஆணையர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ஆர்டிஐ சட்டத்தில் எத்தகைய திருத்தங்கள் உத்தேசிக்கப்பட்டாலும், பொதுமக்கள், தகவல் ஆணையர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விரிவான ஆலோசனை நடத்திய பிறகே அவை முன்னெடுக்கப்பட வேண்டும். ஸ்ரீகிருஷ்ணா குழுவின் பரிந்துரைகள் குறித்து விரிவான விவாதங்கள் தேவைப்படுகின்றன. மக்களின் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீகிருஷ்ணா குழுவின் அறிக்கையில், “தனிப்பட்ட விவரம்’ என்பதற்கான விளக்கம் தெளிவற்றதாகவும், குறிப்பிட்ட வரையறை இல்லாமலும் இருப்பதாக ஆச்சார்யலு குற்றம்சாட்டியுள்ளார். தற்போதுள்ள ஆர்டிஐ சட்டத்தில், அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட உரிமையும், மக்களின் நலன் சார்ந்த விஷயங்களும் முறையாக சமன்படுத்தப்பட்டுள்ளதால், அதில் எவ்வித திருத்தங்களும் அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆர்டிஐ சட்டத்தில் மத்திய அரசு உத்தேசித்துள்ள திருத்தங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here