ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

0
195


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் கொண்டுவரும் மசோதா, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது. 


தகவல் அறியும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2019-ஆனது, தகவல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள், அவர்களின் பதவிக்காலம், அவர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயிப்பதற்கு அதிகாரமளிக்க வகை செய்கிறது. 


மக்களவையில் அந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசியதாவது: 


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தற்போது கொண்டுவர முனையும் திருத்தங்களின் மூலம், சுதந்திர அதிகாரம் படைத்த தகவல் ஆணையர்களை மத்திய அரசால் நியமனம், பணிநீக்கம் செய்யவும் முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டமானது நாட்டின் ஜனநாயகத்தின் முக்கியத்துவமிக்க சாதனையாகும். இது, அரசின் சுயநல நடவடிக்கைகளுக்கு சவாலளிக்க வல்லது. 


அதில் திருத்தம் செய்யும் சட்ட மசோதா பொதுமக்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் ஏன் கொண்டுவரப்படுகிறது? அதைக் கொண்டுவர மத்திய அரசு ஏன் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கிறது? பிரதமரின் கல்வித் தகுதி விவரங்கள் தொடர்பாக மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவுகள் பிறப்பித்ததாலா? 


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், தகவல் ஆணையங்களின் அதிகாரத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாக வேண்டுமென்றே இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் தகவல் ஆணையத்தையும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் போல் அதிகாரமற்ற ஒன்றாக மாற்ற முயற்சிக்கப்படுகிறது என்று சசி தரூர் பேசினார். 


திமுக எம்.பி.யான ஆ.ராசா பேசுகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவர முனையும் திருத்தங்களால், தகவல் ஆணையர் மத்திய அரசின் வீட்டுப் பணியாளர் போலச் செயல்படும் நிலை ஏற்படும் என்றார். 


எதிர்க்கட்சிகளின் வாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: 


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவே சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அதிகாரத்தை ஒழுங்குமுறைப்படுத்தவும், அதிலுள்ள குறைகளைக் களையவும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்று ஜிதேந்திர சிங் பேசினார். 


நிராகரியுங்கள்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு கொண்டுவரும் மசோதாவை நிராகரிக்குமாறு முன்னாள் மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு எம்.பி.க்களை வலியுறுத்தியிருந்தார். பல்வேறு முக்கிய வழக்குகளில் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்து பெயர்பெற்ற இவர், இந்த சட்டத்திருத்தம் மத்திய தகவல் ஆணையத்துக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்.


 


dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here