உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
2014 ம் ஆண்டில் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பில் இருந்து காலி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார். ஆர்டர்லி முறையை நிறுத்துவது குறித்தும் அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் கூட்டங்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.
மேலும், காவலர் குடியுருப்புகளில் யார் யார் அனுமதியை மீறி குடியிருக்கிறார்கள் என்பதை கண்டறிய டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45,000 ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும்.
படித்தொகையை பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம். ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆர்டர்லிக்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்தார். அரசியல்வாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படுவது அழிவுக்கு கொண்டு செல்லும் என்றும் அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும் எனவும் தெரிவித்தார்.
வாகனங்களில் இருந்த கருப்பு ஸ்டிக்கரை அகற்றும் நடவடிக்கை எடுத்துவிட்டு, தற்போது காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் ஒட்டியிருப்பது குறித்தும் அதிருப்தி தெரிவித்தார். பின்னர், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு அளித்த விளக்கம் திருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.