ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாதவர் பிரதமர் வேட்பாளராக இருந்தால் ஏற்போம் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் மகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தியே அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் பிரமுகர்கள் சிலர், ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாதவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ஆதரிக்க தயார் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த சூழல் தற்போது இல்லை. தெலுங்கு தேசம் கட்சியும், சிவசேனையும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இதன்காரணமாக, அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமானால் 280 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் பாஜக மகா கூட்டணி அமைத்தால் வெற்றி பெற ஓரளவு வாய்ப்புள்ளது. ஆனால், அது நடைபெறாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளும், பிகாரில் 40 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில், உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவை இடங்கள் 22 சதவீதமாகும். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரில் ஒருவர் எதிர்க்கட்சிகள் சார்பில் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்