ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் வெறுப்பு பேச்சுக்களை அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் பத்திரிகையாளரை கைது செய்த டெல்லி காவல்துறை

0
201

உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான AltNews இன் நிறுவனர்களில் ஒருவரான பத்திரிகையாளர் முகமது ஜுபைர், மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.

Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்தனர்.

ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர் என்று ஆல்ட் நியூஸின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், “2020இல் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரை கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை,” என்று கூறியுள்ளார்.

முகமது ஜுபைர் உண்மை சரிபார்ப்பு இணையதளமான Alt News இன் இணை நிறுவனர்களில் ஒருவர். கடந்த சில வருடங்களாக போலிச் செய்திகள் தொடர்பான தகவல்களை ஆதாரங்களுடன் தமது தளத்தில் அவர் பகிர்ந்து வந்தார். பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் காரர்களின் வெறுப்பு பேச்சுக்களை ஆதாரங்களுடன் அம்பலபடுத்தியவர் . 

கடந்த மே மாதம், மூன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு மக்கள் கவனத்தை ஈர்த்த இந்து மத தலைவர்கள் – யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை ‘வெறுக்கத்தக்கவர்கள்’ என்று ஜுபைர் குறிப்பிட்டு ஒரு இடுகையை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்து உணர்வுகளை சீர்குலைத்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் ஜுபைர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜுபைர் குறிப்பிட்டிருந்த இந்துத் தலைவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டுதல் மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர்களாக கருதப்பட்டுவர்கள். அதில் ஒருவரான யதி நரசிங்கானந்தா வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here