நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய சிறுமி ஆருஷி கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அச்சிறுமியின் தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோரை விடுவித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று நொய்டாவில், மருத்துவர்களான ராஜேஷ் – நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் 14 வயது சிறுமி ஆருஷி, கழுத்தறுக்கப்பட்டநிலையில் வீட்டின் படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டார். அதேபோன்று, அடுத்த நாளனன்று, அவரது வேலைக்காரர் ஹேம்ராஜ் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார்.

arushi1

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் இந்த வழக்கில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்பதால், வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், இந்தக் கொலை வழக்கில் ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோரைக் கைது செய்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு, காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாரைக் குற்றவாளிகள் என அறிவித்து, ஆயுள் தண்டனையும் விதித்தது. இதனை எதிர்த்து ராஜேஷ் மற்றும் நுபுர் தரப்பில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

allahabad

இந்த வழக்கினை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏகே மிஸ்ரா மற்றும் பிகே நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, வியாழக்கிழமை (இன்று) தீர்ப்பு வழங்கியது. அதில், ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், வழக்கில் சந்தேகத்தின் பலனை இருவருக்கும் அளித்து விடுதலை செய்வதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்