ஆயிரம் பூக்கள் மலரட்டும்: எல்லா விவாதங்களும் தடையின்றி நடக்கட்டும்

0
343

விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா… வேண்டாம். முன்கதைச் சுருக்கம் எல்லோருக்கும் தெரியும். நாம் நேராக மேட்டருக்கு வரலாம்.

சமூகத்தில் ஏற்கனவே இருக்கிற ஒரு கருத்தையோ இல்லை மதிப்பீட்டையோ மாற்ற வேண்டும் இல்லை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரேவழி, தொடர்ச்சியான விவாதம். அதைவிட்டு அதுபற்றியே பேசக்கூடாது என்பது ஒருவகை பாசிஸம். அதனால் எந்தப் பிரச்சனையும் தீராது. காயத்தைக் கீறி மருந்திடாமல் மூடி வைத்தால் சீழ் வைத்து நாற்றமடிக்கிற மாதிரி. எப்போதுமில்லாத அளவுக்கு கருத்துச் சுதந்திரம் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிற நேரத்தில், ஒரு விவாதத்துக்குத் தடை என்பது பாசிஸ சக்திகளுக்கே வலுசேர்க்கும்.

தமிழக பெண்ணியவாதிகளின் புரிதலும், அவர்கள் முன் வைக்கிற கருத்துகளும் உணர்ச்சிவசப்பட்ட மனதின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் அமைகிறது. பெண்களுக்கு எதிரான எதையும் ஆணாதிக்கத்தின் முன் நிறுத்துவதையே பெண்ணியச் செயல்பாடாக அவர்கள் நம்புகிறார்கள்.

2001இல் குலுக்கை அமைப்பு ஒரு கவிதைப் பட்டறை நடத்தியது. ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் கட்டுரை வாசித்தார்கள். உடலைக் கொண்டாடுதல் என்று, பெண் உறுப்புகள் குறித்தும், பாலியல் வேட்கை குறித்தும் பெண் கவிஞர்கள் காத்திரமாக கவிதை இயற்றி வந்த காலமென்பதால் அது குறித்தும் பெண் கவிஞர் ஒருவரிடம் கட்டுரை கேட்கப்பட்டது. ‘உடலைக் கொண்டாடுவது என்பதைக் கவிதைக்கு வெளியே எப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்கள்’ என்பது தலைப்பு. கவிஞர் போன் செய்து யார் என்ன என்று விசாரித்தார். ஆனால், கட்டுரை அனுப்பவில்லை. உடலைக் கொண்டாடுதல் என்பதை கவிதைக்கு வெளியே எப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்கள் என்ற தலைப்பைப் படித்து, ‘ஃப்ரீ செக்சுக்கு கூப்ட்றான்’ என்று பாயாமல் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். எழுத்துக்கு வெளியே உடலைக் கொண்டாடுவது என்றால் என்ன?

நடிகை ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில், பள்ளி நாள்களில் தனது தழும்புகள் கொண்ட காலை சக மாணவிகள் கிண்டல் செய்ததையும், இப்போது அதே கால்கள் 7 சர்வதேசப் பொருள்களுக்கு மாடலாக இருப்பதையும் குறிப்பிட்டார். அப்படிச் சொன்னதில் அவருக்குப் பெருமிதம் இருந்தது. ப்ரியங்கா சோப்ரா தனது உடலைக் கொண்டாடுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? பெண்ணைப் போகப் பொருளாக சினிமாவில் காட்டுவது ஆணாதிக்கம். எனில், ப்ரியங்கா சோப்ராவிடம் பெண்ணியவாதிகள் சொல்லக் கூடியது என்னவாக இருக்கும்? இதில் இருப்பது வெறும் ஆணாதிக்கம் மட்டும்தானா?

விரும்பியே முழுச்சுதந்திரத்துடன் நீலப்படத்தில் நடித்தேன் என்று சொல்லும் சன்னி லியோன் இந்தியாவின் ஐகானாக மாறியிருக்கிறார். பல்வேறு நெருக்கடிகளால் அரைகுறை உடைகளில் நடிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஷகிலா, சிந்து, ரோஷிணிகளுக்கு சமூகத்தில் இப்படியொரு அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு வெறும் அழகு மட்டுமே காரணமா? வர்க்கபேதம் இதில் இல்லை என்று சொல்ல முடியுமா?

சினிமாவில் 99 சதவீத நாயகிகள், சமூகம் கட்டமைத்திருக்கும் அழகுக்கு இலக்கணமானவர்கள். அவர்கள் கருப்பான நாயகனைப் பார்த்து, ‘கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்று பாடுவார்கள். கருப்பைப் புகழ்ந்து பாட வேண்டிய வாய்ப்பு நாயகனுக்கு ஒருபோதும் அமைந்ததில்லை. காரணம் நாயகிகள் எப்போதும் வெளுப்பானவர்கள். கபாலி படத்திலும் அப்படித்தான் இருந்தது. நாயகி நாயகனின் கருப்பையெல்லாம் தன் மீது பூசிக்கொள்ள ஆசைப்பட்டதை ஏதோ புரட்சி நடந்தது போல் இணையத்தில் எழுதினார்கள். தமிழ் சினிமாவில் கறுப்பான நாயகனுக்கும் வெளுப்பான பெண்தான் தேவைப்படுகிறாள், அந்த மந்தைப் புத்தியின் விளைவுதான் கபாலியும் என்று, பெண்ணியவாதிகள் விமர்சித்திருக்க வேண்டாமா? செய்யவில்லை. அவர்களில் பலருக்கு ரஞ்சித்தின் தலித் அடையாளத்துக்கு முட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.

‘கற்பு ஒரு விஷயமில்லை, இப்போது தமிழக பெண்கள் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது அதிகரித்துள்ளது’ என்று குஷ்பு கூறிய கருத்துக்கு சில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வழக்கு தொடுத்தாலும், கருத்துச் சுதந்திரம் என்ற நிலையிலும், அவர் பேசியதில் ஓரளவு உண்மையுள்ளது என்ற நிலையிலும் அதனை ஆதரித்தோம். குஷ்பு சொன்னதையே ஒரு ஆண் – திருமணத்துக்கு முன்னால் சில தமிழக பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் – என்று பேசியிருந்தால் என்னவாகியிருக்கும்? ‘ஆமா நீ பார்த்தே. உன் வீட்ல அக்கா தங்கச்சியெல்லாம் அப்படித்தானா’ என்று பாய்ந்திருக்க மாட்டார்கள்? எனில், நீங்கள் பார்ப்பது சொல்லப்படுகிற கருத்தில் இருக்கும் உண்மையையா இல்லை சொல்வது ஆணா, பெண்ணா என்பதையா?

அடிடா அவளை உதைடா அவளை பாடல் வெளியானபோது எத்தனை அமளிகள். இப்போது அழகுப் பிரச்சனையிலும் இந்தப் பாடல் வரியைத் தூக்கிப் போட்டு, பாரு ஆணாதிக்கத் திமிரை என்று விமர்சிக்கிறார்கள். பாடலை மேலோட்டமாகப் பார்த்தால், ஆமாம் ஆண் திமிர்தான். ஆனால் அது மட்டுமா என்றால் இல்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்து சினிமா நிலபிரபுத்துவத்தை முன்வைத்தது. நிலபிரபுத்துவ சமூகத்தில் பெண் என்பவள் ஆணின் உடமை. ஆணின் கௌரவம். தனது உடமையைக் காக்க வேண்டியது அவனது கடமை. அங்கு பெண் தெய்வத்துக்கு சமமானவள். பூஜிக்கப்படுவாள் ஆனால் சுதந்திரம் இல்லை. ஆணின் விருப்பத்தைச் செயல்படுத்தும் கருவி அவள். ஆகவே அங்கு சண்டையில்லை, சச்சரவில்லை.

பெண்கள் படிக்க ஆரம்பித்து சொந்தப் பொருளாதரத்தில் நிற்க ஆரம்பித்தபோது காட்சி மாறியது. வெளிநாட்டில் படித்துவிட்டு திமிர் பிடித்தலையும் நாயகிகளை தமிழ் சினிமா நாயகன் அடக்கி, அவளை அடுப்பூத வைத்தான். முந்தைய தெய்வங்களைவிட இந்த அடுப்பூதும் அடிமை சற்று மேலானவள்.

செல்வராகவன் காலகட்டத்தில் இது மாறியது. பெண்ணை ஆண் பாதுகாப்பதில்லை, அடுப்பூத வைப்பதுமில்லை. அங்கு ஆணும் பெண்ணும் சமம். ‘அடிடா அவளை உதைடா அவளை’ வரிகளில் பெண் ஆணுக்குச் சமமான எதிர்நிலையில் வைக்கப்படுகிறாள். ஜி.முருகனின் குளோப் கதையில் வரும் எலி, தனக்குத் தொல்லை தரும் பூனையைப் பற்றி குறிப்பிடுகையில், ‘சம பலமில்லாதவர்கள் எப்படி எதிரிகளாக இருக்க முடியும்? ஒரு பூனைக்கு எலி எதிரியல்ல, ஒரு பூனைக்கு இன்னொரு பூனைதான் எதிரி’ எனச் சொல்லும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஆண் பூனையென்றால் பெண் எலி. பூனைகள் எலிகளைக் குறித்து புகார் செய்வதில்லை. செல்வராகவன் படங்களில் ஆண் பூனையென்றால் பெண்ணும் பூனைதான். இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தில் தன்னை டீஸ் செய்யும் நாயகனின் நெஞ்சில் ஏறி அமர்ந்து அவன் கன்னத்தில் எச்சில் துப்புவாள் நாயகி. நாயகன் வாழ்க்கையில் உடைந்து போகும்போது நாயகியே அவனை மீட்கிறாள். நிலப்பிரபுத்துவ ஆண், பெண்ணுக்கு இவர்கள் எவ்வளவோ மேல். சரோஜாதேவியால் வாழ்வு பெறும் எம்ஜிஆரை யோசிக்க முடியுமா?

ஆண்களை உய்வடைய வைப்பதுதான் பெண்ணோட வேலையா என்ற விமர்சனம் செல்வராகவன் படங்கள் மீது உண்டு என்றாலும், அடிடா அவளை உதைடா அவளை வரிகளில் வெளிப்படுவது வெறும் ஆணாதிக்கம் மட்டும்தானா?

36 வயதினிலே படம் வெளியான போது பெண்ணியவாதிகள் கூட்டங்கள் நடத்தினர். பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படமாக அது முன் வைக்கப்பட்டது. 36 வயதினிலே ஒரு பாட்ஷா. ஒருகாலத்தில் கல்லூரியை நடுங்க வைத்த பெண் திருமணமாகி, தான் ஒரு பாட்ஷா என்பதை மறந்து கணவன், மகளின் பரிகாசத்துக்கு ஆளான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பெரிய பதவியில் இருக்கும் நாயகியின் முன்னாள் தோழி, நீ மாணிக்கமில்லை பாட்ஷா என்பதை நினைவுப்படுத்த மாடியில் தோட்டம் போட்டு மறுமலர்ச்சி ஏற்படுத்தி ஜனாதிபதி மாளிகையில் விருந்துண்டு, தான் ஒரு பாட்ஷா என்பதைக் கணவன், மகளுக்கு நிரூபிக்கிறாள். வழக்கமான நாயகன் மைய கமர்ஷியல் படங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

36 வயதினிலே படத்தின் நாயகியைப் போல் ஜனாதிபதி மாளிகைவரைப் போனால்தான் ஒரு பெண்ணுக்கு மரியாதையா? அப்படி சாதனை எதுவும் படைக்காத பெண் பரிகாசத்துக்கு உள்ளானவளாகத்தான் இருக்க வேண்டுமா? இந்துவாக இருந்தால் உன் தேசப்பற்றை நிரூபிக்க எதுவும் செய்ய வேண்டியதில்லை. உன் பெயரே போதும். அதுவே முஸ்லிமாக இருந்தால் நான் தேசபக்தன் என்று சொல்ல வேண்டும், மாறுவேட போட்டியில் குழந்தைக்கு கிருஷ்ணர் வேஷம் போட வேண்டும். உலகின் எந்த மூலையில் முஸ்லிம் பெயருள்ளவன் தவறு செய்தாலும் உடனடியாக அதனைக் கண்டிக்க வேண்டும். 36 வயதினிலேயும் அதைத்தான் சொல்கிறது. பெண்ணாகி நீ மரியாதை செய்யப்பட வேண்டுமென்றால் பெரிதாக எதாவது செய்தாக வேண்டும். இந்தப் படத்தை ஒரு பெண் கொண்டாட என்ன இருக்கிறது?

கடைசியாக ஒன்று…

யார் அழகு சர்ச்சையில் பெண்ணியவாதிகள் வைத்த முக்கியமான குற்றச்சாட்டு அழகு குறித்த பார்வை பற்றியது. சிவப்பாக, 36-28-36 அளவில் இருப்பவர்கள்தான் அழகானவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது இல்லாதவர்கள் தாழ்வு மனப்பான்மையில் தள்ளப்படுகிறார்கள். அழகை முன்னிறுத்தி பெண்களை கொச்சைப்படுத்துகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுக்குப் பின்னால் அவர்கள் சில வரையறைகளை முன் வைக்கிறார்கள்.

அழகு என்பது புற அழகு அல்ல, பெண்களின் ஆளுமையே அழகு.

காதல் எனப்படுவது புற அழகை வைத்து வருவதில்லை, அக அழகை கண்டு வருவது.

முதலில் அக அழகைப் பார்ப்போம். ஜப்பானில் பூகம்பம் ஐம்பது பேர் பலி என்பதை பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே டிவியில் பார்ப்போம். அதுவே வீட்டில் வளர்த்த பூனை இறந்தால் நாலு நாள் சோறு தண்ணி இறங்காது. ஐம்பது மனித உயிர்களைவிட ஒரு பூனை பெரியதா? கிடையாது. ஆனால் அந்த மனிதர்களை யார் என்றே நமக்கு தெரியாது. பூனை அப்படியல்ல. வீட்டில் வளர்ந்தது, நம்மோடு பழகியது. இங்க் ஒழுகிற பேனாவாக இருந்தாலும் ராசியான பேனா என்று பரீட்சைக்கு எடுத்துப் போவதில்லையா? பேனாவுக்கே இப்படியென்றால் இரண்டு பேர் பரஸ்பரம் பழகும் போது புற அழகை கடந்து நேசிப்பதில் என்ன ஆச்சரியம்? ஆனால், அது அபூர்வம். பெரும்பான்மை எப்போதும் புற அழகையே நாடுகிறது.

உதாரணமாக புற அழகை முற்றாக நிராகரித்த காதல்கோட்டையைப் பார்ப்போம். அதில் நாயகனும், நாயகியும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். எப்படி இருப்பார்கள் என்பது பரஸ்பரம் தெரியாமலே காதலாகிறார்கள். படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் இந்தத் தூய காதல் கைகூட வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள். கிளைமாக்ஸில் அவர்கள் ஒன்றிணையும் போது தியேட்டர் ஆனந்தக் கண்ணீரால் நிறைகிறது.

இந்தப் படத்திலும் புற அழகே பிரதானமாக சொல்லப்படுகிறது. நாயகன், நாயகி ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லையென்றாலும் அவர்கள் யார் என்பது பார்வையாளர்களுக்கு தெரியும். படம் எடுக்கப்படுவது படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்காக அல்ல, பார்வையாளர்களுக்காக. அவர்களுக்குச் சொல்லப்பட்டுவிட்டது, நாயகனும், நாயகியும் எப்படி இருப்பார்கள் என்று. நாயகனின் இடத்தில் கட்டையும் குட்டையுமாக சொட்டை விழுந்த ஒருவனை வைத்திருந்தால் காதல்கோட்டையை பார்வையாளர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? அதேபோல் நாயகியின் இடத்தில் வத்தலும் தொத்தலுமாக ஒரு பெண்ணை? பாதி படத்தில் ஓடியிருப்பார்கள். இதுதான் யார்த்தம்.

இந்த யதார்த்தம் மோசமானது என்கிறீர்களா? ஒத்துக் கொள்கிறோம். இதனை மாற்ற வேண்டும் என்கிறீர்களா? தாராளமாக. ஆனால், கெட்டிப்பட்டுப்போன இந்த மதிப்பீடுகளை உடைக்க, அனைத்துக்கும் காரணம் ஆணாதிக்கம் என்ற உங்களின் மழுங்கிப்போன உளி உதவாது. அதற்கு தொடர்ச்சியான விவாதங்கள் தேவை, பலதரப்பட்டவர்களின் பங்களிப்புகள் அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக ‘எங்க ஏரியா உள்ளே வராதே’ என்ற பெண்ணிய பொஸசிவ்னெஸிலிருந்து வெளியேற வேண்டும்.

நடக்கிற காரியமா இதெல்லாம்?

பின்குறிப்பு (இது அக்டோபர் 28, 2017 சனிக்கிழமை பிற்பகல் 12.26க்குச் சேர்க்கப்பட்டது) :
இந்தக் கட்டுரை முழுக்க வெளிப்படுவது, ஆண்மையவாத மொழி. சினிமாவில் முற்போக்காக கருதப்படும் சக பத்திரிகையாளரது மொழியே இப்படியிருக்கிறது என்பதை அடையாளப்படுத்தவே இந்த வெளியீடு.

இதையும் படியுங்கள் : ’மோடி அலை மங்கிவிட்டது’

இதையும் படியுங்கள் : ’கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்குமானது; படம் பிடிக்கவில்லையெனில் பார்க்காதீர்கள்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்