ஆம்பூர் முதல் சிவகாசி வரை சத்தமில்லாமல் சாதனை செய்யும் ”தமிழ்நாடு மாடல்”

0
1781

(ஆகஸ்ட் 29, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

தமிழ்நாட்டுப் பப்படம்தான் பிரிட்டன் பப்களில் சைட் டிஷ்ஷாக கிடைக்கிறது; ஆம்பூரில் செய்யும் ஷூக்களைத்தான் அரிசோனாவில் அமெரிக்கர்கள் அணிகிறார்கள்; சென்னையில் செய்யப்படும் டஸ்டர் கார்தான் ஸ்பெயின் சாலைகளில் ஓடுகிறது; நாமக்கல் முட்டைகளைத்தான் ஆப்ரிக்காவில் சாப்பிடுகிறார்கள்; உலகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கெல்லாம் தமிழ்நாட்டுக்காரர்கள்தான் பிழை திருத்துகிறார்கள்; ஜோஹோ கார்ப்பரேஷனை உருவாக்கிய தமிழர் ஸ்ரீதர் வேம்பு மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸுக்கு கடும்போட்டியாக உயர்ந்து நிற்கிறார். டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் உலக கம்பெனிகளையெல்லாம் விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் தமிழ்நாட்டுத் தொழில் பானைச் சோற்றுக்குப் பதமாக ஒரு சோறுதான்.

தமிழ்நாடு ஆர்ப்பாட்டமில்லாமல் தொழில்களில் சாதித்து வருகிறது என்பதை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது பிரபல வணிகச் செய்தியாளர் சுசீலா ரவீந்திரநாத் எழுதிய “SURGE” என்கிற ஆங்கிலப் புத்தகம்; வெஸ்ட்லேண்ட் வெளியீட்டகம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. ”தமிழ்நாட்டில் அமைதி தவழ்வதற்கு காரணம் இங்குள்ள பொருளாதார, தொழில் வளர்ச்சிதான்” என்று ஒரு முறை என்னிடம் சுசீலா சொன்னார். குஜராத் மாடல் போன்று நாடு முழுக்க விளம்பரம் செய்து பிரபலப்படுத்தப்பட்ட வளர்ச்சி அல்ல இது; தமிழ்நாட்டு மாடல் விளம்பரமில்லாத, சமாதான சகவாழ்வுடன் கூடிய வளர்ச்சி என்பதை நிதானமாக விவரிக்கிறார் பிசினஸ் இந்தியா வணிக இதழில் பதினேழு ஆண்டுகளாக செய்தியாளராக இருந்த சுசீலா. அமார்த்யா சென்னையும் ழான் த்ரேஸையும் மேற்கோள் காட்டி எப்படி தமிழ்நாடு மனித வளர்ச்சிக் குறியீடுகளில் நாட்டில் உயர்ந்து நிற்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார் சுசீலா ரவீந்திரநாத்.

தொழில்கள் மூலதனத்தைப் பற்றியவை அல்ல; உங்களது கனவுகளைப் பற்றியவை; பதினைந்தாயிரம் ரூபாயும் கடும் உழைப்பும்தான் ராம்ராஜ் காட்டன் கே.ஆர்.நாகராஜின் மூலதனம்; டிடிகே குழுமம் பெரும் நெருக்கடியைச் சந்தித்தபோது அதன் துணைத் தலைவர் பத்மா நரசிம்மன்தான் அதனை வழிநடத்தி வெற்றிப்பாதையில் செலுத்தினார்; அவர் இதுவரை எந்த விருதும் வாங்கவில்லை; நூறாண்டுகள் கண்ட முருகப்பா, டிவிஎஸ் குழுமங்கள் சந்தித்த ஏற்ற, இறக்கங்கள் என்ன என்பதை சுசீலா விலாவாரியாக சொல்லிச் செல்கிறார்; தடாலடியாக அரசியல் ஆதரவுடன் பிசினஸ் செய்த இந்தியா சிமெண்ட்ஸ் என்.சீனிவாசன், சன் நெட்வொர்க் கலாநிதி மாறன், ஏர்செல் சிவசங்கரன் என்று எல்லாரையும் ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்; சென்னையில் முடங்கி விடாமல் தோல் தொழிலில் கோலோச்சும் ஆம்பூரிலிருந்து பம்ப்களிலும் கிரைண்டர்களிலும் ஆட்சி செய்யும் கோயம்புத்தூருக்குப் போய் அங்கிருந்து போர்வெல் எந்திரங்கள் செய்யும் திருச்செங்கோட்டுக்குச் சென்று தீப்பெட்டிகளும் டயரிகளும் செய்யும் சிவகாசி வரைக்கும் வாசகர்களை அழைத்துச் செல்கிறது SURGE.

சுசீலாவின் புத்தகத்தைப் படிக்கும் யாருக்கும் 1991இல் ஏற்பட்ட பொருளாதார தாராளமயமாக்கலை தமிழ்நாட்டின் நூறாண்டு கண்ட தொழில்கள் எப்படி எதிர்கொண்டன என்பது விளங்கும்; தாராளமயமாக்கலை எதிர்கொள்ள முடியாமல் காணாமல்போன தொழில்களின் வரலாறுகளும் புரியும். தொழில்முனைவுக்கான டி.என்.ஏ என்பது தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் ஆசைகளோடும் கனவுகளோடும் பிரயாணிப்பதாகும்; இதனை அப்பல்லோவின் பிரதாப் ரெட்டியும் சொல்கிறார்; எச்.வசந்தகுமாரும் சொல்கிறார். பிக் பஜாருக்கு முன்னோடியே ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்தான் என்பதுபோன்ற தகவல்கள் நூற்றுக்கணக்கில் பக்கம் பக்கமாக விரவிக் கிடக்கின்றன; பிசினஸ் மாணவர்களுக்கு பெரும் தரவாக இந்த நூல் இருக்கிறது.

தொலைதொடர்பிலும் உள்கட்டமைப்புத் துறையிலும் பெரும் நிறுவனங்களைத் தமிழ்நாட்டிலிருந்து யாரும் உருவாக்கவில்லை என்கிற கரிசனமான வாக்கியங்களோடு சுசீலா நூலை நிறைவு செய்கிறார்; தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பாராட்டப்படாததாக, அங்கீகரிக்கப்படாததாக இருப்பதாக அவர் நூல் முழுவதும் சொல்லிச் செல்கிறார்; கோபாலகிருஷ்ண காந்தி ஒரு முறை சொன்னதைப்போல தென் இந்தியாவின் ஆன்மா சுய விசாரணையிலேயே தங்கியிருக்கிறது; அதற்குப் படாடோபமும் வீண் பகட்டும் பொருந்தி வருவதில்லை.

இதையும் படியுங்கள்: மக்கள் முதல்வர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்