ஆம்புலன்ஸ் இல்லாததால் பிரசவத்திற்காக 7 கிமீ தூரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற அவலம்

0
399

கேரளாவில் பாலக்காடு பகுதியில் உள்ள அட்டப்பாடி மலைக்கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு 7 கி.மீ தூரம் கர்ப்பிணிப் பெண்ணை தற்காலிக ஸ்ட்ரெச்சரில் நடந்தே சுமந்து சென்ற சம்பவம் கேரளாவில் நேற்று நடந்துள்ளது.

அட்டப்பாடி, அவசரம் ஆபத்துக்கு என்று ஒரு ஆம்புலன்ஸ் வசதி பெறமுடியாத மிகவும் பின்தங்கிய மலைக்கிராமம். மலைக்கைராமத்தில் பாதை இல்லாததால் 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்துவிட்டது .

இதனால் மரக் கிளைகளை வெட்டி அதன்மீது போர்வையை இறுக்கக் கட்டி ஒரு தற்காலிக ஸ்ட்ரெச்சர் படுக்கையை உருவாக்கிக்கொண்டனர். அதன்மீது கர்ப்பிணிப் பெண்ணை படுக்க வைத்துள்ளனர். தற்காலிக ஸ்ட்ரெச்சரில் கர்ப்பிணியை சுமந்துகொண்டு கிட்டத்தட்ட 7 கி.மீ தூரம் மலைப்பாதைகளில் வெறுங்காலோடு நடந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொட்டாதாராவில் இருக்கும் பழங்குடி மக்களுக்கான மருத்துவமனையில் அப்பெண்ணை அவர்கள் கொண்டு சேர்த்தனர். அப்பெண் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

தற்காலிக ஸ்ட்ரெச்சரில் நெடுந்தொலைவு நடந்தே கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் கேரள தொலைக்காட்சிகளில் செய்தியாகியது மற்றும் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.