ஆப்பிள் போன்களில் “இப்போது” சமூகத் தகவல் செயலி

2
1068

மக்களே சுதந்திரமாக தகவல்களை வெளிப்படுத்தவும், தகவல்களை நடவடிக்கைக்கு உட்படுத்தவும் உதவும் செல்பேசிச் செயலிதான் (Mobile App) ”இப்போது”. இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை முதல் இந்தச் செயலியை ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இதற்கான சுட்டி: https://itunes.apple.com/us/app/ippodhu/id979193464?Is=1&mt=8

“இப்போது” சமூகத் தகவல் செயலி அமெரிக்க அரசு நடத்திய உலகளாவிய புதுமையான எண்ணங்களுக்கான போட்டியில் பரிசு வென்றது. சென்னை கோட்டூர் மாநகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியை கல்பனா கண்ணன், சென்னை பெரம்பூர் ஜமாலியாவிலுள்ள ஹைதர் கார்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வர் தஸ்லீம், சென்னை மீனம்பாக்கம் கேந்த்ரிய வித்யாலயாவின் முன்னணி ஆசிரியை கலாவதி கிருபானந்தம், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஞ்சித், ஆனந்த விகடன் முதன்மை ஆசிரியர் தேவன் சார்லஸ், செய்தியாளர் பீர் முகமது, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரி சமூகப் பணித் துறையின் முன்னாள் பேராசிரியை ரமா காஷ்யப் ஆகியோர் கொண்ட குழு இந்தச் செயலியை வடிவமைக்கும் குழுவில் இருக்கிறார்கள்.

ஆப்பிள் செயலி வடிவமைப்பாளர் ஆஷிஃப் உதவியுடன் இந்தச் செயலி ஆப்பிள் போன்களை வந்தடைந்திருக்கிறது. ஆக்கப்பூர்வமான, செயல்படத்தக்க செயலியாக இந்தச் செயலி அமைந்திருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களில் நூற்றுக்கணக்கானோர் இதனைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். https://play.google.com/store/apps/details?id=com.ippodhu

இந்தச் செயலியில் யார் வேண்டுமானாலும் தங்களைப் பதிவு செய்துகொண்டு ஒரு தகவலைப் பதிவிடலாம். தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னர் தகவல் வெளியாகும். அரசாங்கம், காவல் துறை, தன்னார்வ அமைப்புகள், அக்கறையுள்ள தனிநபர்கள், ஊடகங்கள் ஆகியோர் தலையிட்டு தீர்வு காணத்தக்க தகவல்கள் என்றால் அந்தத் தொடர்பு விவரங்கள் தகவலைப் பதிவிடுபவருக்குச் செயலியால் வழங்கப்படும்.

கூகுள் ப்ளே ஸ்டோரிலும் ஆப் ஸ்டோரிலும் IPPODHU என்று தேடுங்கள்; நீங்களும் விரும்பியதை சுதந்திரமாக உலகிற்குச் சொல்லுங்கள்.

2 கருத்துகள்

ஒரு பதிலை விடவும்