ஆப்பம் செய்வது எப்படி?

0
1368

தமிழ்நாடு, கேரளா இரு மாநிலங்களிலும் ஆப்பம் மிக பிரசித்தி பெற்ற உணவு. இந்த உணவை விரும்பாதவர்களே கிடையாது. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலும், காய்கறி குருமாவும் பொருத்தமானது. அசைவம் விரும்புகிறவர்கள் கோழி, ஆட்டுக்கறியில் குழம்பு செய்து சாப்பிடலாம். ஆப்ப சோடா, ஈஸ்ட் இல்லாமலே இதைப் புளிக்க வைக்கலாம். ஓரம் முறுகலாகவும் நடுவில் மெத்தென்றும் இருக்கும்; இதன் சுவையே அலாதியானது. எல்லோருக்கும் செய்துகொடுத்து
சுவைக்கவும்.

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி – 1 கிண்ணம்

இட்லி அரிசி – 1 கிண்ணம்

வெள்ளை அவல் – 1/2 கிண்ணம்

உளுந்து – 1/4 கிண்ணம்

வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

சீனி – 1 தேக்கரண்டி

தேங்காய் – 1/2 கிண்ணம்

உப்பு – தேவையான அளவு


செய்முறை

அரிசி, உளுந்து, அவல், வெந்தயம் கலந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்
தேங்காய், சீனி இவற்றுடன் ஊற வைத்ததைக் கிரைண்டரில் போட்டு வெண்ணெய்போல் அரைத்து எடுக்கவும். உப்பு போட்டுக் கலக்கி தோசை மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

அதன் பின் 8லிருந்து 10 மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பம் ஊற்றும்போது தோசைமாவு பதத்தைவிட சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளவும்; அதற்கு தண்ணீரும் ஊற்றலாம்; இல்லையென்றால் இளநீர் ஊற்றியும் கரைத்துக் கொள்ளலாம்; நான் ஸ்டிக் பானில் ஊற்றுவது என்றால் எண்ணெய் தேவையில்லை. வெறும் துணி வைத்து துடைத்தாலே போதும்.

இரும்புச்சட்டியில் பண்ணுவதென்றால் ஒவ்வொரு தடவையும் லேசாக எண்ணெய் தொட்டு வெங்காயம் பாதியாக நறுக்கி வைத்துக் கொண்டு துடைக்கவும். மிகவும் நன்றாக வரும். ஒரு கரண்டி மாவு எடுத்து நடுவில் ஊற்றவும். ஊற்றியதும் கடாயை இரண்டு கையால் பிடித்துச் சுழற்றவும். இரண்டு நிமிடம் மூடிப் போட்டு சிறு தீயில் வேகவைத்து எடுக்கவும். திருப்பிப் போடவேண்டாம்.
இதே போல் எல்லா ஆப்பமும் செய்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்