ஆபத்தில் கூட்டுறவு வங்கித்துறை

0
209

இந்திய வங்கித் துறையில் குறிப்பாக கூட்டுறவு வங்கித் துறையில் பரபரப்பான பேசுபொருளாக மாறியிருக்கிறது பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரம் கூட்டுறவு (பி.எம்.சி.) வங்கி. 51,601 உறுப்பினர்கள், ரூ.11,390 கோடி விற்றுமுதல் கொண்ட பிஎம்சி வங்கியின் வாராக்கடன் திடீரென 3.76 சதவீதத்தில் இருந்து 77 சதவீதமாக  உயர்ந்துவிட்டது. இதனால் வங்கி முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  

இதற்கு காரணம் என்ன? மொத்தக் கடன் தொகையில் 10 சதவீதம் மட்டும் முதலீட்டுத் தொகை இருந்தால் வங்கி சிறப்பாக இருப்பதாக கொள்ளலாம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் விதி.  ஆனால், பிஎம்சி வங்கியின் முதலீட்டுத் தொகை மொத்தக் கடன் தொகையில் 12 சதவீதமாக இருந்தது. ஆனால், மும்பையை சேர்ந்த வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டிருந் எச்.டி.ஐ.எல். என்ற நிறுவனத்திற்கு மட்டும் ரூ.6500 கோடி கடனுதவியை வழங்கியதுதான் பிரச்னைக்கு மூலக் காரணமாக அமைந்துவிட்டது.  

8 மாதங்களுக்குமுன்பு எச்.டி.ஐ.எல். நிறுவனம் சீராகச் செயல்படாததால் சிக்கலில் மாட்டிக்கொண்டது.  இதனால் இந் நிறுவனம் கடன் பெற்றிருந்த ஐ.எல்.எஃப்.எஸ்., யெஸ் வங்கி, இந்தியாபுல்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன.  இதன்பின்னரும் பிஎம்சி வங்கி சுதாரித்துக்கொள்ளாததால், சிக்கலில் மாட்டிக்கொண்டது. எச்.டி.ஐ.எல்.நிறுவனம் கடனை திரும்பச் செலுத்த தவறியதால், பிஎம்சி வங்கியின் வாராக்கடன் விகிதம் அதிகரித்து விட்டது. பிஎம்சி வங்கியில் கடன் மோசடி நடந்திருப்பதால், கூட்டுறவு வங்கிகள் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகியுள்ளது.

பிஎம்சி வங்கியில் நடந்த  மோசடி ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் போனது எப்படி?  வங்கியின் இயக்குநர்கள், பிஎம்சி வங்கியின் கணக்கு தணிக்கையாளர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்து,  ஆண்டறிக்கைகளைத் தயாரித்துள்ளதால்,  எச்டிஐஎல் நிறுவனத்திற்கு மட்டும் அதிகப்படியான கடன் வழங்கப்பட்டுள்ளது தெரியாமல் போனதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. 

பெங்களூரில் செயல்பட்டுவரும் தனாபிவிருத்தி கடன் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனத் தலைவரும், நிதியியல் அறிஞருமான எஸ்.சுந்தரவேலு, இதுகுறித்து கூறியதாவது: கூட்டுறவு முறையில் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, அவர்களிடம் திரட்டிய  மூலதனத்தை அடிப்படை  நிதி ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதே கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளின் கடமையாகும்.  கூட்டுறவு வங்கிகள் அல்லது சங்கங்கள், அதன் உறுப்பினர்களுக்குச் சொந்தமானது. 

இதில் அரசின் முதலீடு எதுவும் இருப்பதில்லை. கிராமங்கள், நகரங்களில் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டி  மக்களுக்கு கடனுதவி மூலம் பொருளாதார ஏற்றங்களை வழங்குவதே இதன் அடிப்படைநோக்கமாகும். வணிக வங்கிகளைப் போல,  கூட்டுறவு வங்கிகளும் உறுப்பினர்களிடம் இருந்து வைப்புத்தொகையைப் பெற்று, கடனளித்து வங்கிச் சேவைகளில் ஈடுபட்டுவருகின்றன.  

எனவே, கூட்டுறவு வங்கியின் அடிப்படை நோக்கத்தை யாரும் சந்தேகிக்கக் கூடாது.  மாறாக, அதை முன்னின்று நடத்துபவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது அவசியமாகும். 

இன்றைக்கு பெரிய வங்கிகளாகக் கருதப்பட்டு,  மக்கள் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் கரூர் வைஸ்யா வங்கி,  சிட்டி யூனியன் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி போன்ற பல வங்கிகள் ஆரம்பத்தில் கூட்டுறவு வங்கிகளாக இருந்தவைதான். 

மகாராஷ்டிரத்தில் ஒரு லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.  அதேபோல, குஜராத்தில் 80 ஆயிரம், கர்நாடகத்தில் 42 ஆயிரம் சங்கங்கள் உள்ளன.  இவை தான் முதலீடு பெருகியதும் கூட்டுறவு வங்கிகளாக மாறுகின்றன. வணிக வங்கிகளால் செல்ல முடியாத கிராமப்புறங்களில், அங்குள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பாக விளங்குவது கூட்டுறவு வங்கிகள் தான்.

இந்தியாவில் செயல்பட்டுவரும் கூட்டுறவு வங்கிகள் அல்லது சங்கங்களில் 2 சதவீதத்தில் மட்டும்தான் சிக்கல்கள் காணப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினரான 4 வாரங்களில் ரூ.25 ஆயிரம் வரைகடன்பெற முடியும்.  

இது தேசிய வங்கியில் சாத்தியமில்லை.  அதனால் தான் மக்கள் இன்றைக்கும் கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளை நம்பி தொழில் செய்துவருகிறார்கள். எனவே, பிஎம்சி வங்கி மோசடியை வைத்துக்கொண்டு நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளின் செயல்பாட்டைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. 

கூட்டுறவு வங்கியின் விற்றுமுதல் ரூ.300 கோடியாக உயர்ந்தவுடன் ரிசர்வ் வங்கியின் கணக்கு தணிக்கை கட்டாயமாகிறது.  அப்படியிருக்கையில்,  ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு விற்றுமுதல் கொண்ட பிஎம்சி வங்கியில் மோசடி நடப்பதை ரிசர்வ் வங்கியால் தடுக்கமுடியாமல் போனது ஏன்?  என்று புரியவில்லை. இனிமேலாவது இது போன்ற மோசடிகள், முறைகேடுகள் நடக்காதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்க வேண்டும்.

வங்கியின் கணக்கு தணிக்கை அறிக்கையை உறுப்பினர்கள் தீவிரமாக ஆய்வுசெய்ய வேண்டும்.  தங்களது வைப்புத்தொகைக்கு ஏதாவது ஆபத்து என்று கருதினால்,  அதுகுறித்து வங்கித் தலைவரை நேரடியாக சந்தித்துக் கேட்க வேண்டும். இங்கு சரியான பதில் கிடைக்காவிட்டால், மாவட்ட பதிவு அதிகாரியை சந்தித்து முறையிடலாம். அங்கும் தீர்வுகிடைக்காவிட்டால், நீதிமன்றத்தை அணுகலாம். 

யார்யாருக்கு கடன் கொடுத்திருக்கிறார்கள்? யார் யாரின் பங்குகள் உள்ளன?  சேமிப்புக் கணக்கு விவரங்கள், வைப்புத்தொகை, வங்கியின் லாபம் உள்ளிட்ட விவரங்களை உறுப்பினர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும். கூட்டுறவு சங்கம் அல்லது வங்கியின் பொதுக்குழுக் கூட்டங்களைத் தவற விடாதீர்கள்.  மேலும்,  வங்கியின் இயக்குநர்கள் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும் பணத்தை முதலீடு செய்யுங்கள்.  ஒரு தவறை முன்வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த கூட்டுறவு கட்டமைப்பையும் சந்தேகப்படக் கூடாது.

காலத்திற்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகள் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளன.  புதிய மென்பொருளைப் பயன்படுத்தி வங்கி நடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறோம். இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளின் தேவை இருந்து கொண்டே இருக்கும். 

கிராமங்களை இதயங்களாகக் கொண்டிருக்கும் இந்தியாவில் கூட்டுறவு வங்கிகளின் முக்கியத்துவம் குறைய வாய்ப்பே இல்லை. கூட்டுறவு வங்கிகளை அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால்,  கூட்டுறவே நாட்டுயர்வு என்பது பொய்யாகாது என்றார் அவர். 

ந.முத்துமணி

http://dinamani.com


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here