அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் போட்டியாளர்களை ஒழிக்கும் வகையிலான சலுகைகளை வாரி வழங்குவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் அவற்றுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது.


அந்நிய நேரடி முதலீடைப் பெற்று செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட விதிகளை மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, இந்த நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும். தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது.

ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25 சதவீதத்தை மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும். தங்களிடம் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த விற்பனையாளரையும் ஆன்லைன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. தாங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை செய்கிறோம் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது. கேஷ் பேக் என்ற பெயரில் தள்ளுபடி அளிக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வர இருக்கின்றன.


அந்நிய நேரடி முதலீடு இல்லாமல் உள்நாட்டு நிதியில் செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும், பல்வேறு வர்த்தக அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக அமேசான் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தற்போது தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு சில ஸ்மார்ட்போன் வகைகளை வெளிச்சந்தையில் வர விடாமல் தடுத்து, தங்களிடம் மட்டுமே அது கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்கின்றன. மேலும், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆன்லைனில் அந்த ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு வரச் செய்து அது மிக அரிதான பொருள் என்ற நிலையை ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here