கொரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்க அனுமதி அளித்த நிலையில் தற்போது அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் மத்திய அரசு அனுமதி தந்தாலும் ஆன்லைன் விற்பனை விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளின் முடிவே இறுதியானது என மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உணவுப் பொருட்கள், மருந்து, மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கு மறுநாள், இந்த நிறுவனங்கள் 20-ந் தேதி முதல் செல்போன், டி.வி., லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டி, ஆயத்த ஆடைகள் போன்றவற்றையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை விற்பனை செய்வதற்கான ஆர்டர்களையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற தொடங்கின.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் அனைத்து வகை பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here