ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், கடந்த வாரத்தில் மட்டும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக திமுக எம்.பி கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார். பழைய நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் நித்யா, சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார். அவர், கடந்த 25ம் தேதி ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்று அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து விரக்தியடைந்த மாணவி நித்யஶ்ரீ, தற்கொலைக்கு முயன்று எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகன் விக்கிரபாண்டி (16), திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.  விக்கிரபாண்டி ஆன்லைன் வகுப்பில் படிக்காமல் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அதுபற்றி கேட்ட அப்பாவிடம் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கோவன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விக்கிரபாண்டி நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பெற்றோர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விக்கிரபாண்டி உயிரிழந்தார். இந்நிலையில், மாணவர்கள் உயிரிழப்புக்கு கனிமொழி எம்.பி. வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்து வருகிறது. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here