ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்றம், ஜனவரி 31ஆம் தேதிக்குள் விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உரிமம் பெறாத, பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மருந்துச்சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால்,

காலாவதியான,போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இது பொதுமக்களின் உயிர் மற்றும் உடல்நலத்திற்கு அபாயகரமானது எனவும் மனுவில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமம் பெறாத, பதிவு செய்யாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய ஏற்கெனவே தடை விதித்தது. மருந்துகள் கட்டுப்பாட்டு சட்டம், மத்திய அரசின் சட்டம் என்பதால், ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே இருப்பதாகவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்ட பின் சட்டமாக இயற்றப்படும் என்று மத்திய அரசும் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, இன்று தீர்ப்பளித்தார். ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதை அரசிதழில் வெளியிடுமாறும் ஆணையிட்டார். அதிலிருந்து 2 மாதங்களுக்குள் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து விதிமுறைகளின் அடிப்படையில், ஆன்லன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அதுவரை, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது எனவும் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here