ஆன்லைன் மருந்து விற்பனை குழுமமான ‘நெட்மெட்ஸ்’ நிறுவனத்தின், 60% பங்குகளை ரூ.620 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ்.
இந்தியாவில் ஆன்லைன் மருந்து வணிகத்தை, சில தினங்களுக்கு முன் அமேசான் நிறுவனம் துவங்கியது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமும் தற்போது ஆன்லைன் மருந்து விற்பனை சந்தையில் கால்பதிக்கவுள்ளது. அதற்காக, நெட்மெட்ஸ் குழுமத்தில் முக்கிய பங்குதாரரான விட்டலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், 60 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் கைப்பற்றி நெட்மெட்ஸ் நிறுவனத்தின் நேரடி உரிமையாளராக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட நெட்மெட்ஸ், உரிமம் பெற்ற இ-பார்மசி போர்ட்டல் என தெரிகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கும், இந்தியாவில் உள்ள மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் வினியோகம் செய்து வருகிறது.
ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு, இன்னமும் இறுதி செய்யாத சூழலில், ஆன்லைனில் மருந்துகளை விற்பது, மருந்துகளை சரிபார்க்காமல் விற்பனை செய்ய வழிவகுக்கும்’ என, மருந்தக உரிமையாளர்கள் எதிர்ப்புக் கொடி காட்டி வருகின்றனர்.