ஆன்லைனில் உங்கள் தயாரிப்புகளை விற்பது எப்படி?

2
1544

வீட்டில் இருந்தபடியே இல்லத்தரசிகள் மற்றும் கைவினைஞர்கள் தங்களுடைய கைத்திறமைகளால் விதவிதமான பலதரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவற்றை மார்க்கெட்டிங் செய்யும் நுட்பம் அவர்களுக்குக் கைவருவதில்லை. சாதாரணமாக தான் உற்பத்தி செய்த ஒரு பொருளை விற்க ஒரு கடை அவசியம். கடை என்று போனால் நிறைய பேர் நடமாடக்கூடிய இடமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்துக்கு முன்பணமாக லட்சங்களைத் தர வேண்டியிருக்கும். அடுத்து மாதமாதம் வாடகை, கடையைப் பார்த்துக் கொள்ள ஆட்கள், அவர்களுக்கு சம்பளம். இன்னபிற செலவுகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்! இதற்கொரு தீர்வாக இருக்கிறது இணைய வழி வணிகம். இந்தியாவில் இணையத்தில் பொருட்கள் வாங்கும் சந்தை ஆண்டுக்கு 15 சதவீதம் அதிகரித்து வருவதாக தொழில் வர்த்தக அமைப்பான அசோசெம்மும் இணைய ஆய்வு நிறுவனமான காம்ஸ்கோரும் தெரிவித்துள்ளன. மேலும் மாதத்துக்கு 5 கோடியே 34 லட்சம் பேர் இணையத்தில் பொருட்களை பார்வையிடுவதாகவும் இந்நிறுவனங்களின் ஆய்வு தெரிவிக்கிறது. தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் ஆன் லைன் வர்த்தகம் 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. கடைக்கோடி கிராமத்தில் உள்ளவரும் தன்னுடைய பொருளை ஆன்லைனில் விற்று வருமானம் ஈட்டலாம் என்கிற செய்தியைத்தான் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சொல்வது எளிதாகத்தான் இருக்கிறது, ஆனால் செயல்படுத்த முடியுமா என்பதற்கான வழிகாட்டல் இதோ…

முதல் படி

எந்தவொரு தொழிலுக்கு பெயரிடுதல் மிகவும் முக்கியமான ஒன்று. ஆன் லைனில் பொருள் விற்க முனையும் முன் ஒரு பெயரின் கீழ் உங்கள் தயாரிப்புகளைக் கொண்டுவாருங்கள். பெயரிடுவது ஒரு கலை. மக்களைப் போய்ச் சேரும் பெயராக அது இருப்பது மிக்க நலம். ஏற்கனவே ஒரு பெயரின் கீழ் நீங்கள் பொருட்களை விற்பனை செய்து வந்தாலும், உலக மக்களின் பார்வைக்கு உங்கள் பொருள் செல்ல இருப்பதால், எல்லோருக்குமான ஒரு பெயரைத் தேர்ந்தெடுங்கள்.

இரண்டாம் படி

ஆன்லைனில் பொருட்களை விற்க விரும்புவோர் முதலில் செய்ய வேண்டியது மதிப்பு கூட்டு வரி(VAT)யை அல்லது மத்திய விற்பனை வரி (CST)முதலில் பதிவு செய்ய வேண்டும். இதை பதிவு செய்வதற்கு அருகில் உள்ள ஆடிட்டரை நாடலாம். வியாபாரம் செய்பவர்களுக்கான விற்பனை வரியே வாட். அழைக்கப்படும். ஒரு வியாபாரி தன்னுடைய பொருளை விற்பனை செய்யும்போது விற்பனை வரியையும் சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார். மத்திய விற்பனை வரி என்பது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பொருள்கள் வாங்க அல்லது விற்க தேவைப்படும் சான்றிதழ்.

மூன்றாம் படி

ஆன் லைனில் வர்த்தகம் செய்ய நிச்சயம் ஓரளவுக்காவது தொழிற்நுட்ப அறிவு தேவை. ஒரு மாத காலம் இணைய பயன்பாடு குறித்து படிப்பது நலம். தொழிற்நுட்ப முதலீடாக கணினியும் இணைய இணைப்பும் இருப்பது அவசியம். இணையத்தின் வழியாகத்தான் நீங்கள் வாடிக்கையாளர்களைப் பார்க்கப் போகிறீர்கள்.

நான்காம் படி

ஆன் லைனில் என்னென்ன பொருட்கள் விற்பது என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக மருந்துப் பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், உயிருள்ள பொருட்கள் இவற்றை விற்பது குற்றம். இவை தவிர, நீங்கள் உற்பத்தி செய்த அல்லது பிறர் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கி ஆன்லைனில் விற்கலாம்.

சென்னையைச் சேர்ந்த தேவி சாந்த் என்பவரின் இணைய கடையிலிருந்து...
சென்னையைச் சேர்ந்த தேவி சாந்த் என்பவரின் இணைய கடையிலிருந்து…

ஐந்தாம் படி

உங்கள் பொருட்களை பிரத்யேகமாக விற்க விரும்பினால் தனியே ஒரு இணைய தளம் தொடங்கி விற்பனை செய்யலாம். இதற்கு நல்லதொரு தொழிற்நுட்ப வல்லுநரின் ஆலோசனை அவசியம். அல்லது ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற இணைய பெரு வணிக நிறுவனங்கள் மூலமும் பொருட்களை விற்பனை செய்யலாம். இந்த நிறுவனங்களின் இணைய தளத்திலேயே இதற்குரிய வழிகாட்டுதல்களைப் பெறலாம். அவர்களை அணுகினாலே மற்ற விஷயங்களை சொல்லித் தருவார்கள். இவை இரண்டும் இந்தியாவில் விற்பதற்கான வழிமுறைகள்.

‘என்னுடைய பொருளை வெளிநாடுகளில் விற்க விரும்புகிறேன்’ என்பவர்களுக்கும் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் கைக் கொடுக்கின்றன. etsy.com என்ற நிறுவனம், வீட்டிலிருந்தே பொருட்களை உற்பத்தி செய்யும் சாமானியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தளம். இன்று இது மிகப் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. உலகின் தீவு நாடுகளைச் சேர்ந்த சாமானியர்களும்கூட இதில் பொருட்களை விற்கிறார்கள். ஆன் லைன் பொருள் விற்பனை செய்யும் ஆர்வத்தை மட்டுமே வைத்திருப்பவரைக் கூட இந்தத் தளம் தொழில் முனைவோராக மாற்றக்கூடிய வகையில் ஏராளமான வழிகாட்டுதல்களைச் செய்கிறது.

ஆறாம் படி

எந்தவொரு தொழிலிலும் தனித்திருப்பதே வெற்றியைத் தீர்மானிக்கும். பொருட்களின் தரத்திலும் செய்நேர்த்தியிலும் அதிக கவனம் செலுத்துங்கள். ஆன் லைன் வர்த்தகம் மெதுவாகத்தான் சூடுபிடிக்கும். எனவே, அதுவரை காத்திருங்கள்.

ஓர் அனுபவம்:

வேலூர் அருகே குடியாத்தம் பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் திருமலா டிரேடர்ஸ் என்ற பெயரில் மரச்சாமான்களை செய்து வருபவர் ரமேஷ். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து, அப்பாவின் தொழிலையே எடுத்து நடத்துகிறார். இவர் தன்னுடைய பொருட்களை ஆன் லைனில்தான் அதிக விற்பதாகத் தெரிவிக்கிறார்
“நான் தொழிலை இன்னும் விரிவுப்படுத்தலான்னு நினைச்சேன். ஆன்லைன்ல விற்கலாமேன்னு தோணுச்சு. உடனே இண்டியாமார்ட், ஓஎல்எக்ஸ், டிரேட் இண்டியா, எல்லோ பேஜஸ் போன்ற நிறுவனங்களை நாடினேன். அந்த ஆபிஸ்லாம் எப்படி இருக்குதுன்னு இதுவரை போய் பார்த்தது இல்ல, மொபைல் மூலமா அந்தந்த கம்பெனி இணையதளத்துல லாகிங் பண்ணுவேன். அந்த ஆபிஸ்லேந்து போன் பண்ணாங்க, தகவல் கேட்டாங்க, சில பேர் நேரா வந்து பொருட்களை சரிபார்த்துட்டு போனாங்க. இதுல ஓஎல்எக்ஸ் மூலமா ஆன்லைன்ல வியாபாரம் அதிகமாபோகுது. தற்போது வியாபாரம் நடுத்தரமா நல்ல அளவில போயிட்டு இருக்கு” என்கிறார் ரமேஷ்.

2 கருத்துகள்

ஒரு பதிலை விடவும்