தமிழர்கள் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விரிவான விசாரணை செய்யப்பட வேண்டும் என ஜனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.18), ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம் ஒண்டிமேட்டா வனப்பகுதியிலுள்ள ஏரியிலிருந்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டனர். செம்மரம் கடத்தலுக்குச் சென்றவர்கள் தப்பிக்க முயன்றபோது ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர மாநில போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்ட ஐந்து பேரும் சேலம் மாவட்டம் அடியனூர் கிராமம், கீரங்காட்டைச் சேர்ந்த முருகேசன், கருப்பண்ணன், ஜெயராஜ், சின்னபையன், முருகேசன் ஆகியோர் என தெரியவந்தது. இந்த ஐந்து பேரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு பேரவையைச் சேர்ந்த உண்மை அறியும் குழுவினர், சம்பவம் நடந்த இடங்களுக்குச் சென்று விவரங்களைச் சேகரித்ததாகத் தெரிவித்துள்ளனர். அதில், இடுப்பளவு தண்ணீர் மட்டுமே இருந்த ஏரிக்குள், நீச்சல் தெரியாதவர்களும் உயிரிழக்க வாய்ப்பில்லை எனவும், இதனையொட்டிய பகுதியில் ரத்தம் படிந்திருந்ததாகவும், அதனால் தங்களுக்குக் கிடைத்த விவரங்களிலிருந்து தற்கொலை அல்லது விபத்து மூலம் ஐந்து பேரும் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.16) இரவு 7.30 மணிக்கு காவல்துறை ஊர்தியும் இரவு 10. 30 மணிக்கு வனத்துறை ஊர்தியும் அந்தப் பகுதிக்கு வந்து சென்றதாக கிராம மக்கள் தங்களிடம் தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனைக்கு உறவினர்களையோ, பத்திரிகையாளர்களை வெளியாட்களையோ அனுமதிக்கவில்லை எனவும், உறவினர்கள் வந்து அடையாளம் காட்டுவதற்கு முன்பே, இறந்தவர்களின் பெயர் அடையாளங்களை காவல்துறை வெளியிட்டது தெரிய வந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறை, வனத்துறை, அரசியல்வாதிகள், கடத்தல்காரர்கள் ஆகியோரே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்றும், தற்போது பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விரிவான விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், இறந்த ஐந்து பேரின் உடல்களை, தமிழக மருத்துவர்களைக் கொண்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் ஜனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here