திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையின் பணியிடங்களில் வட மாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றுவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. கிட்டத்தட்ட 3800 பணியாளர்களில் 1200 பேர் வடமாநிலத்தவர்கள் எனக் கூறப்பட்டது.

மேலும் தொழில் பழகுனருக்கான தேர்வில் மொத்தம் 1,765 பணியிடங்கள் உள்ளன. இதற்கான  குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு. இதில் 1,600 இடங்களை வட மாநில இளைஞர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் 10 சதவீதத்திற்கும் குறைவாக வெறும் 165 இடங்களை மட்டுமே தமிழக இளைஞர்கள் தக்க வைத்துள்ளனர் என்றும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், தமிழக இளைஞர்கள், நன்கு படித்திருந்தும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுச் செய்தும், வேலையில்லாத அவல நிலையில் உள்ளனர். இது பெரிய அளவில் சர்ச்சையை உண்டாக்கியது. ஆனால் ஆந்திர அரசு அம்மாநில இளைஞர்களுக்கான எதிர்காலத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது.

நேற்று(திங்கள்கிழமை) ஆந்திர சட்டமன்றத்தில் இதற்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் என்ன சொல்கிறது என்றால்,  தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 75% பணியிடங்களை ஆந்திர மாநிலத்தவர்க்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் நிறுவனங்கள் அனைத்துமே, மொத்தப் பணியிடங்களில் 75% இடங்களை ஆந்திர மாநிலத்தவர்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும். இது அனைத்து வித பணிகளுக்கும் பொருந்தும் என்று அச்சட்டத்தின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தகுதியான நபர்கள் கிடைக்கவில்லையெனில் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து உள்ளூர் மக்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைப்‌ பணியில் அமர்த்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதற்கான நடமுறைகள் அனைத்தையும் முடித்து, ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆந்திராவின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். இதேபோல் ஒரு சட்டத்தை தமிழக அரசும் நிறைவேற்ற வேண்டும் என்றும், சட்டத்தை தனியார் நிறுவனங்களோடு மட்டும் நிறுத்திவிடாமல் மத்திய அரசுப் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தவர்க்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அந்தந்த மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here