ஆதார் மீறலை வெளிப்படுத்திய பத்திரிகையாளர் விருது பெற தகுதியானவர் என அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் பாராட்டியுள்ளார்.

கடந்த கடந்த ஜன.3ஆம் தேதியன்று, 500 ரூபாய் செலுத்தினால் 10 நிமிடங்களில் மற்றவர்களின் ஆதார் தகவல்கள் கிடைப்பதாக ’தி ட்ரிப்யூன்’ இதழில் செய்தி வெளியாகியிருந்தது. பணம் கொடுத்தால் குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும் எனவும், ஆதார் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தையும் அது எழுப்பியிருந்தது.

இதனையடுத்து தவறான செய்தி வெளியிட்டதாக ’தி ட்ரிப்யூன்’ இதழ் மற்றும் அதன் செய்தியாளர் ரச்சனா கைரா மீது, தேசிய தனிநபர் அடையாள (Unique Identification Authority of India -UIDAI) ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் 420, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல் என்றும் எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து எட்வர்டு ஸ்னோடன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆதார் பாதுகாப்பு தொடர்பான விதிமீறல்களை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் விருது பெற தகுதியானவர்கள் என்றும், மாறாக விசாரணைக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நீதியின் மீது இந்திய அரசுக்கு அக்கறையிருந்தால், கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட ரகசியங்களை அழிக்கும் ஆதார் திட்டத்தினைச் சீர்திருத்தம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தில் உள்ளவர்கள் கைது செய்யத் தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்