இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தங்கள் நலத்திட்டங்களையும், உதவிகளையும் சிறப்பாக இதன் மூலம் செய்ய முடிகிறது. ஆதார் சேவையை மேலும் வலுப்படுத்த ஆதார் எண்ணை பான்கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, சமையல் கியாஸ் வினியோகம் உள்பட பல்வேறு சேவைகளுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் செல்போன் சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் ரகசிய தகவல்கள் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது.

வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதையும், சிம் கார்டுகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் கோர்ட்டு அறிவித்தது. ஆதாரை மற்ற சேவைகளுக்கு கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளை கொண்டு வந்தது. அந்த பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, “அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று திருத்தம் செய்தது.

தற்போது இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

அந்த சட்ட திருத்தத்தில், ஆதார் கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். மேலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here