பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும்போது ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் எனத் தெரிவித்தார். பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும்போது ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளின் சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு உதவி தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னையில் ரூ. 15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1,500-ல் இருந்து 3,000-ஆக உயர்த்தியும், ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு வயது மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் முதல்வர் பேரவையில் குறிப்பிட்டார்.

பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளை பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு ஊதியத்தை ரூ.2000-லிருந்து ரூ.4000ஆக உயர்த்தியும், பாலின விகிதங்களை சரிசமமாக கொண்டு வர பணிகளை மேற்கொள்ளும் மாவட்டங்களுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here