இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் சுமார் 650 மில்லியன் மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துகிறார்கள்.

இந்தியாவில், குறைந்த அளவிலான ஐபோன் பயன்பாட்டாளர்களைத் தவிர அனைத்து ஸ்மார்ட்போன்களும் பயன்படுத்தும் இயங்குதளம் ஆண்ட்ராய்டு. கூகுகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆண்ட்ராய்டு, ஓபன் சோர்ஸ் என்பதால் பல்வேறு செல்போன் நிறுவனங்களும் அதை தமது மொபைல் போன்களை இயக்கப் பயன்படுத்துகின்றன.

செல்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக உலக செல்போன் சந்தையில் இரண்டாமிடத்தில் இருக்கும் சீனாவின் ஹிவாவே நிறுவன போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. 

தற்போது ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக ஹார்மனி என்ற இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஹிவாவே. ஆண்ட்ராய்டை போலவே இதுவும் ஓபன் சோர்ஸ் என்பதால் தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் அனைத்து செல்போன்களிலும் இதனைப் பயன்படுத்த முடியும். 

வரும் காலங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட இருக்கும் IOT (Internet of things) எனப்படும் பொருட்களின் இணையம் என்ற தொழில்நுட்பத்தைக் கருத்தில் கொண்டு இந்த இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இயந்திர மொழி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள ஹார்மனி ஓஎஸ், மைக்ரோ கெர்னலை அடிப்படையாக கொண்டது. இதுவே ஆண்ட்ராய்டில் இருந்து இதை வேறுபடுத்தும் அம்சமாக சொல்லப்படுகிறது. 

இதனால் ஆண்ட்ராய்டை விட ஹார்மனி வேகமாக இயங்கும் என ஹிவாவே கூறுகிறது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கடிகாரம், ஸ்மார்ட் டிவி மற்றும் வாகனங்கள் என அனைத்து விதமான ஸ்மார்ட் கேஜ்ஜெட்டுகளிலும் இதை பயன்படுத்த முடியும். தற்போது ஆண்ட்ராய்டை பயன்படுத்துவோர் எளிதில் ஹார்மனி இயங்குதளத்திற்கு மாறலாம்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் சீன தயாரிப்பான ஹார்மனி இயங்குதளத்துக்கு மாறினால் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தனது செல்வாக்கை இழக்கும். ஹார்மனியின் செல்வாக்கு பெருகும். இருநிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய வசதிகளை அளிக்கும் என்பதால் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டாளர்களுக்கு புதியதொழில்நுட்பங்களின் பயன்பாடு மிகவேகமாக அவர்களின் கைக்கு வந்து சேரும், இது நன்மையில் முடியும் என்றே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here