ஆணாதிக்கமும் தவறு.. பெண்ணாதிக்கமும் தவறு – இயக்குனர் தாமிரா பேட்டி

0
71

பாலசந்தர், பாரதிராஜா இருவரையும் வைத்து ரெட்டச்சுழி படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ஆண் தேவதை. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் ஆண் தேவதை வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் தாமிரா.

பெண்கள் தான் தேவதையாக சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில் ஆண் தேவதை வித்தியாசமாகப்படுகிறதே..?

தேவதை என்பது சிறப்பியல்பு கொண்ட ஒரு கேரக்டர். அதற்கு ஆண் பெண் என பாகுபாடு இல்லை. பெண்களை ஏமாற்றுவதற்காகவே பெண் தேவதை என தவறாக கற்பிதம் செய்து வைத்திருக்கிறார்கள். நல்லியல்புகள் கொண்ட எல்லோரும் தேவதையே. எல்லாம் சரியாக இருக்கிற, குறைகள் பெரிதும் இல்லாத ஆணும் ஒரு தேவதை தான்.

ஆண்களை தேவதையாக்கும் முயற்சியில் இறங்கியது ஏன்..?

எல்லோருக்குள்ளும் ஒரு நல்ல தன்மை இருக்கிறது. ஆனால் நமக்குள் இருக்கும் நல்லது எது, கெட்டது எது என யோசிக்கவிடாமல் காலம் நம்மை ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது. ஒருகாலத்தில் நாமாக ஆசைப்பட்டது போய், இன்று ஆசைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. இன்றைய நுகர்பொருள் கலாச்சாரத்தில் அதைநோக்கி நாம் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்வதற்காக வேலை செய்கிறோமா..? இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா..டூ இந்த புள்ளியில் இருந்துதான் கதை துவங்குகிறது.

சமுத்திரக்கனி எப்படி இதற்குள் வந்தார்..டூ

அது யதேச்சையாக அமைந்தது. சமுத்திரக்கனியை பார்க்க சென்றிருந்தபோது, இந்த கதைபற்றி சொல்லி, நானே தயாரிக்கிறேன் என்று சொன்னதும் சரி நான் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார்.

குழந்தை வளர்ப்பு இதில் பிரதானமாக சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்லியிருந்தது எந்த அடிப்படையில்..?

பெண் வளர்க்கும் குழந்தை ஆண் வளர்ப்பில் வளரும் குழந்தை என பகுத்துப் பார்க்காமல் அன்பால் வளர்க்கின்ற குழந்தை எப்படி வளர்கிறது. பொருளாதாரத்தால் வளர்க்கப்படும் குழந்தை எப்படி வளர்கிறது இதற்கான வித்தியாசத்தைத்தான் சொல்கிறோம். வீட்டில் எடுக்கும் முடிவுகளில் குழந்தைகளின் கருத்தையும் கேட்கவேண்டும். அதை இதில் அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.

படத்தலைப்பை பார்க்கும்போது பெண்களை விட ஆண்களை உயர்த்திப்பிடிப்பது போலத் தெரிகிறதே..?

நிச்சயமாக இல்லை. ஒரு தலைப்பு என்பது குறியீடு தானே தவிர மொத்தப் படத்தையும் அது அடையாளப்படுத்த வேண்டும் என்பதில்லையே. ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. அதனால் ஆணாதிக்கமும் தவறு, பெண்ணாதிக்கமும் தவறு. ஆண், பெண் இருவரும் சமம் என்கிறபோது, இதில் ஆளுமை என்பதே தேவையில்லாதது.

இதையும் படியுங்கள் : ’மத்திய அரசு எதுக்கு இருக்கிறது?’; எங்களைக் கொலை செய்து விட்டீர்கள்’: ஆளுநரிடம் ஆவேசப்பட்ட மீனவர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்