ஆட்டோக்காரர்ன்னா இளக்காரமா?

0
883
ஆட்டோக்காரர்கள் சென்னையில் முப்பது சதவீதம் மக்களின் போக்குவரத்துக்குப் பொறுப்பெடுத்திருக்கிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள், விமான நிலையம் தொடங்கி அவர்கள் மீது தொடரும் தீண்டாமையை அம்பலப்படுத்தும் செய்தி வரிசை இது.

உங்களின் ஆட்டோ பயணங்களால்தான், எங்களின் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். காலையில் தொடங்கி இரவுவரை நடுத்தெருவுதான் எங்கள் வீடு. இந்த நாள் இனிய நாளாக, ஒரு நாளும் அமையாத வாழ்க்கை இந்த ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கை. அடித்தட்டு, நடுத்தரம், மேல்தட்டு என எந்த வகை மனிதர்கள் ஆட்டோவில் ஏறினாலும், கையில் சாட்டையை வைத்திருப்பதைப் போலத்தான் நெனப்பு எல்லோருக்கும்.

சவாரி வரும்’ன்னு ஒரே எடத்துல ஆட்டோவ வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருந்தா டைம் போய்டும்., சவாரி கெடைக்குமா’ன்னு நாலு தெருவு சுத்துனா பெட்ரோலு காலியாயிடும்.அப்படியாப்பட்ட பொழப்பு எங்க பொழப்பு, அப்படி சுத்தி திரிஞ்ச ஒரு கடுப்பான ஞாயித்திக்கிழமை மத்தியானம். அடையாறு பஸ் ஸ்டாப்புல ஒருத்தரு என் ஆட்டோவை கைகாட்டி நிறுத்துனாரு. எங்க போகனும்’ன்னு கேட்டேன், ரேஸ் கோர்ஸ் போகனும்னு சொல்லிட்டு, என்ன பார்த்தாரு,நூறு ரூபா கேட்டு,எண்பது ரூபாய்க்கு ஓக்கேயான அவரு,, பட்டன் போடாத சட்டை காத்துல ஒரு பக்கம் பறக்குது.வெள்ள கட்பனியனுக்குள்ள ஒரு உடம்பு,நடிகர் சுருளிராஜன் மாதிரியே இருந்தாரு. கையில ஒரு பிளாஸ்டிக் பொட்டலக் கவரு. தண்ணி பார்ட்டியோன்ற டவுட்டோடத்தான், ஆட்டோவுல ஏத்திகிட்டுப் போனேன்.கொஞ்ச தூரம் போனவுடன, எந்த ஸ்டாண்டுன்னு கேட்டார். லைட் அவுஸ்ன்னு சொன்னேன். பாரீஸ்ல (பூக்கடை) தேவராஜ தெரியுமான்னாரு, தளபதி படத்துல வர்ற தேவராஜுதான் தெரியுன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு, நீங்க சொல்ற தேவராஜ எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். அவரு கூடத்தான் நான் இருந்தேன்னாறு. ’யார்ரா..இவன், தேவராஜே தெரியாதுன்றேன்., அவருக்கூடத்தான் இருந்தியா? நீ யாரு கூட வேன்னா இருன்னு, இதையும் மனசுக்குள்ளதான் சொலிக்கினு வண்டிய ஓட்டிக்கினு போனேன். அடையாறு அம்பிகா அப்பளம் சிக்னல் எனக்காகவே பச்ச லைட்டு எரிஞ்சு வா.. மகனே, வா..ன்னு கூப்புடுது. நானும் முன்னாடி இருந்த ரெண்டு கார ஓவர்டேக் செஞ்சுக்குனு ஸ்பீடா போறேன்..

பின்னாடியிருந்து மா..மே, சீக்கிரம் போ. லெஃப்ட் வா.. மாமே…ன்னு தோள் பட்டைய அழுத்திப் பின்னாடி இருந்துக்குனு என்ன விரட்டுறாரு. ’யேய் யாரடா மாமுன்ன மானங்கெட்டவனே…’’ன்னு சிவாஜி படம் வசனமெல்லாம் பேசியிருக்கலாமோன்னு இப்பத்தான் தோணுது. ஆனா அப்படியெல்லாம் பேசமுடியுமான்னா, அவ்ளதான் பாதியிலயே இறங்கிப் போய்டுவான்…,, இன்னா பண்றது ரோட்டுக்கு வந்துட்டா இதெல்லாம் கேட்டுத்தான் ஆவணும். அத வுடுங்க, அடையாறு கேன்சர் ஆஸ்பிட்டல் பிரிட்ஜ் இறங்கிக்கினு இருக்கேன், மறுபடியும் என் தோள் பட்டையில இடிச்சி, மாமே… சீக்கிரம் போ.. மாமேன்னு, பக்கத்துல வர்ற லாரிய கைகாட்டி ஒரே அலப்பற தாங்கமுடியல. இதுக்கு மேல பொறுக்கமுடியாதுன்னு ரேஸ்கோர்ஸ்ல எங்க போகணும், கிண்டி பிரிட்ஜ் ஏறி லெஃப்ட்ல திரும்பி போகணுமான்னு கேட்டேன். அய்ய்ய , அங்க ஏன் போறே… அது தோத்துப் போற பாதை, இப்படிப் போ… இதான் ஜெயிக்கிற பாதைன்னு, வேளச்சேரி போற ரோட்டுல இருக்கிற ரேஸ்கோர்ஸ் சந்துக்குள்ள போகச்சொன்னாம் பாருங்க., அப்பத்தான் தெரிஞ்சது, ”டேய் நீ ரேஸ் பைத்தியமாடா…,” ”அதான் என்ன இப்படிப் போ, அப்படிப் போ,, வேகமாப் போன்னு வெரட்டினியாடன்னு” வாயடைச்சிபோயி திரும்பிப் பார்க்குறேன். என்னென்னவோ நம்பரெல்லாம் சொல்லிக்கிட்டு, குதிர ரேஸ்ஸோட பேரெல்லாம் சொல்லிகிட்டு பினாத்திக்கினு வரான்.

ரேஸ்கோர்ஸ் கேட்டுக்குள்ள போய் இறங்கிட்டு, நூறு ரூபாய் நோட்டு ஒண்ணக் கொடுத்துட்டு, மீதி சில்லறய நான் தேடறப்போ.. ’’ வச்சுக்க, மாமே.. வச்சுக்க ,, வரட்டான்னு போய்ட்டான். ஒரு இருபது ரூபா துட்டுக்காடா.? என்ன குதிர மாதிரி விரட்டி, நிம்மதியா வண்டியும் ஓட்ட விட்டாம,,ரொம்ப அநியாயண்டா இதெல்லாம்! கோட்டு சூட்டு போட்டவனாயிருந்தாலும், சாதாரண பாட்டாளியா இருந்தாலும், ஆட்டோவுல ஏறி உட்கார்ந்துட்டா..ஆட்டோக்காரன்னா அவுங்க வூட்டு வேலக்காரனாத்தான் நெனைக்கிறாங்க?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்