ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

0
165

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:


மத்திய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த உத்தேச திருத்தங்களுக்கு எனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் இணக்கமான சூழலுக்கு இந்தத் திருத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசின் வசம் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும்.


மேலும் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த மத்திய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.


மக்களுக்குத் தேவையான பல்வேறு மத்திய, மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல்படுத்தி வருகிறது. தேசிய பேரிடர்களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாநில அரசுகளுக்கு தேவைப்படுகிறது.


மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கனவே போதுமான எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வுநிலையை ஏற்பட்டுத்திவிடும். 


உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசின் பணிக்கு மாற்றமுடியும் எனும் நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அலுவலர்களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்கும்.


இதனை செயல்படுத்தினால் அகில இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இது தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்ததல்ல.


புதிய சட்டத்திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாக சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர முயற்சிப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானதாகும்.


தாங்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும்.
எனவே, மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களைக் கைவிடுமாறும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து நமது முன்னோர்கள் அளித்துள்ள உயரிய சிந்தனையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல, மாநில அரசுகளோடு கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here