இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பகுதி நேர (அதிகாரப்பூர்வமற்ற) இயக்குநராக ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சதீஷ் காசிநாத் மராத்தே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று ஆதரவு தெரிவித்தவர் குருமூர்த்தி. இவர் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் தொழிலதிபர் சதீஷ் காசிநாத் மராத்தே ஆகியோரை இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பகுதி நேர (அதிகாரப்பூர்வமற்ற) இயக்குநர்களாக நியமித்துள்ளது.

அவர்கள் இருவரும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பார்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்.குருமூர்த்தி

இப்போதுதான் முதல்முறையாக இயக்குநர் பொறுப்பை ஏற்கிறேன். இதுவரை எந்த ஒரு பொதுத் துறை நிறுவனம் அல்லது தனியார் நிறுவனத்தில் பொறுப்பை ஏற்றது இல்லை. எந்த நிறுவனத்தின் கணக்குகளை சமர்ப்பிக்கும் பணியையும் ஏற்றது இல்லை. கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம் என்பதால் இதுவரை எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் இருந்தேன். நான் மக்கள் நலனுக்காக சில பணிகளை செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்பிஐ இயக்குநர்கள் குழுவில் அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்கள் உள்ளனர். ஆர்பிஐ ஆளுநர் மற்றும் நான்கு துணை ஆளுநர்களும் அதிகாரப்பூர்வ இயக்குநர்கள் ஆவர். அவர்கள் தவிர 10 அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்களை நியமிக்க ஆர்பிஐ விதிகளில் இடம் உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்