ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர் 4’சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டன. ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நேற்றுத் தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

வங்கதேச பேட்ஸ்மென்கள் இந்திய பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்கள். ஒரு கட்டத்தில் அந்த அணி 101 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின் களமிறங்கிய மோர்டசாவும், மெஹிதி ஹசனும் நிதானமாக ஆடினர்.

49.1 ஓவரில், வங்காளதேசம் அணி 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்களும், மோர்டசா 26 ரன்களும் எடுத்தனர்.

இந்திய பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

அணியின் எண்ணிக்கை 61ஆக இருந்தபோது தவான், 47 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனி 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில், இந்திய அணி 36.2 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன், ரூபல் ஹூசைய்ன் மற்றும் மோர்டாசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here