14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர் 4’சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் நுழையப்போகும் அணி யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி நேற்று(புதன்கிழமை) அபுதாபியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதிக்கொண்டன.

டாஸ் வென்று வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. வங்கதேசம் களமிறங்கி சற்று நேரத்திலேயே 12 ரன்களில் முதல் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பின்னர் 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் ஜோடி சிறப்பாக விளையாடி 144 ரன்கள் எடுத்து வங்கதேச அணியை மீட்டனர்.

முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிகுர் ரஹிம் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில்,வங்கதேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் 4 விக்கெட்டுகளும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது பாகிஸ்தான். அந்த அணியின் பகர் சமான் 1 ரன்னிலும், பாபர் ஆசம் 9 ரன்களிலும் வெளியேறினர்.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக் அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்து ஆசிப் அலி 31 ரன்னும், சோயப் மாலிக் 30 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் மிகச் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் 202 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றியது.

வங்காளதேசம் அணி சார்பில் முஸ்தபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளும், மெஹித் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்குள் மூன்றாவது முறையாக நுழைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் அணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்