ஆங்கிலத்தில் சரளமாக எழுதுவது எப்படி?

0
450

உலகில் இதுவரை அதிகம் படிக்கப்படும் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

உலகம் முழுக்க 1.5 பில்லியன் பேர் ஆங்கிலம் கற்கிறார்கள்- 2020 ஆம் ஆண்டு வாக்கில் இது 2 பில்லியன்களாக (பிரிட்டிஷ் கவுன்சில் எதிர்பார்ப்பு) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முன்னணி காப்பி எடிட்டர் பெஞ்சமின் டிரேயர் கூற்றுப்படி “மிகவும் ஒழுங்கற்ற மொழி ஆங்கிலம்” என்றிருப்பதால், இதைக் கற்பவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

இருந்தாலும், இது கடினமாக இருப்பதால் பலரும் தள்ளிப் போய்விடவில்லை: நவீன காலத்தின் பொதுவான மொழியாக ஆங்கிலம் மாறியுள்ளது. உலக அளவில் பதிப்பித்தல், இன்டர்நெட், அறிவியல், கலை, நிதி, விளையாட்டு, அரசியல் மற்றும் சர்வதேசப் பயணங்கள் என பல துறைகளிலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது.

`வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள் பொதுவாகப் பேசும் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது” என்று பிரான்ஸ் பிரதமர் எட்வர்டு பிலிப்பே கூறியபோது, அது மிகைப்படுத்தியதாக இருக்கவில்லை.

சுமார் 400 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தங்களுடைய முதல் மொழியாகப் பேசுகிறார்கள் என்று மொழியியல் நிபுணர் டேவிட் கிரிஸ்டர் மதிப்பிட்டிருக்கிறார். தாய்மொழிக்கு அடுத்ததாக, தங்கள் நாட்டில் (இந்தியா அல்லது நைஜீரியா போன்ற நாடுகளில்) கற்பிக்கப்படுவதால் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்று 700 முதல் 800 மில்லியன் பேர் பேசுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர ஆங்கிலத்தை வெளிநாட்டு மொழியாக பல மில்லியன் பேர் – சிலி முதல் ரஷ்யா வரை – பேசுகிறார்கள். தங்கள் நாட்டில் பேசப்படும் மொழியாக இல்லாவிட்டாலும் நீங்கள் கற்றுக் கொள்வது வெளிநாட்டு மொழி என கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.

இப்போது ஆங்கிலத்தை எப்படி எழுதுவது அல்லது குறைந்தபட்சம் நன்றாக எப்படி எழுதுவது என்பது சிறிய விஷயம் மட்டுமே.

பெஞ்சமின் டிரேயர் எழுதிய “Dreyer’s English” என்ற புத்தகம், ஆங்கில எழுத்து நடை மற்றும் இலக்கணங்களை கற்பிக்கும் வகையில் இருக்கிறது.

எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அமெரிக்காவில் ரேண்டம் ஹவுஸ் என்ற வெளியீட்டு நிறுவனத்தில் இருபதாண்டு காலம் காப்பி எடிட்டராகப் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், ஆங்கில மொழியில் தெளிவும் நல்ல நடையும் எப்படிப் பெறுவது என்பது குறித்த நடைமுறை சிந்தனை அவருக்குக் கிடைத்திருக்கிறது.

யார் பொறுப்பு?

யாருமே கிடையாது: ஒரு மொழி என்ற வகையில் ஆங்கிலம் என்பது மொழி பாரம்பரியம் என்ற அளவில் உயிர்ப்புடன் உள்ளது. அது எப்போதும் ஒழுங்குபடுத்தப் பட்டதில்லை, அதற்கு எஜமானர் யாரும் கிடையாது.

மொழி பரிணாம வளர்ச்சியைக் காக்க வேண்டிய கல்வி ரீதியிலான பொறுப்பு உள்ள – பிரெஞ்ச் அல்லது ஸ்பானிய மொழியைப் போல அல்லாமல் – ஆங்கிலம் பயன்படுத்தும் அனைவரும் பின்பற்ற வேண்டிய உலகளாவிய இலக்கண விதிகளை வரையறுக்கும் அமைப்பு எதுவும் ஆங்கிலத்துக்குக் கிடையாது.

அதனால்தான் “ஆங்கிலம் பேசுபவர்கள் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை அறிந்திருப்பதைவிட, நவீன கால பிரெஞ்ச் வாசகர்கள் மொலியரேவின் படைப்புகளை அதிகம் அறிந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது” என்று டிரேயர் கூறியுள்ளார்.

பொதுவான வரையறை ஏதும் இல்லாமல் வளரும் மொழி என்பதால் வார்த்தைகளுக்கான எழுத்துகள் எவை என்பது கடினமானதாக இருக்கிறது. “ஒவ்வொரு முறை வேறு நாட்டில் இருந்து வரும் போதும் பிற மொழிகளின் பகுதிகளையும் சேர்த்து கொண்டு வரும் போக்கு” ஆங்கிலத்தில் இருப்பதால் இது மோசமாகிவிட்டது.

இதில் சாதகமான அம்சங்களும் இருக்கின்றன: பல்துறை அம்சங்கள் கொண்டதாகவும், புதிய சொற்களுக்கு வரம்பு இல்லாமலும் இருக்கிறது.

பரஸ்பரம் புரிந்து கொள்கிற வரையில், எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது முக்கியமா?

சுருக்கமாகச் சொன்னால் : ஆமாம்.

“சரியான” அல்லது “குறிப்பிட்ட தகுதிநிலை உள்ள ஆங்கிலம்” என்ற கருத்தும்கூட பிடிபடாமல் போகும். கடந்த காலங்களில், ஒருங்கிணைக்கப்படாத கருத்தொற்றுமை உருவாகியிருக்கிறது. தகவல் தொடர்புக்கு அது உதவுகிறது என்ற அம்சத்தில் அது நடக்கிறது.

தெளிவான மற்றும் சரியான உரைநடையில் எழுத வேண்டியது முக்கியம். “குறிப்பாக தொழில்முறை நிலையில் நீங்கள் தொடர்பு கொள்கிறபோது” இது முக்கியம் என்கிறார் டிரேயர். ஆனால் “மற்றவர்கள் அதைப் படித்து நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அல்லது நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என புரிந்திருக்கிறீர்கள் என பெரும்பாலும் நினைத்துக் கொள்வார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்களுடைய எழுத்து நடையை நம்பிக்கையுடன் மேம்படுத்திக் கொள்வதற்கான எளிய வழி என்பது “வார்த்தைகளில் எழுத்துகள் சரியாக இருக்க வேண்டும்” என்பதும், “ஒப்பொலித்தல்: ஒரே மாதிரியான ஒலி வரக் கூடிய, ஆனால் வெவ்வேறு அர்த்தம் தரக் கூடிய வார்த்தைகளில்” கவனம் செலுத்துவது பற்றியதுமாக இருக்கும்.

பயிற்சி 1: நேரடியாக நல்ல ஆங்கிலத்தில் எழுதத் தொடங்குங்கள்

உலகளாவிய விதிமுறைகள் ஏதும் இல்லை என்றாலும், “பெரும்பாலான மக்களின் எழுத்துகளை, குப்பையாக்கும் சில வார்த்தைகளைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் நல்ல ஆங்கில எழுத்தாளராக மாற முடியும்” என்று டிரேயர் கூறுகிறார்.

very, rather, really, quite, just மற்றும் in fact என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஒரு வாரத்துக்கு நிறுத்துங்கள்.

உண்மையில் ‘actually’ என்ற வார்த்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். அது என்னுடைய மோசமான குற்றம். actually என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு நான் அடிமையாகிவிட்டேன்.

இதைச் செய்ய நீங்கள் பழகிவிட்டால், “உங்களுடைய ஆங்கில எழுத்து நடை உடனடியாக இருபது சதவீதம் மேம்பட்டுவிடும்” என்கிறார் டிரேயர்.

பயிற்சி 2: சில `விதிமுறை அல்லாத’ விஷயங்களை மீறுவதன் மூலம் மேம்படுதலை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்

சில `விதிமுறைகள்’ தன்னிச்சையான மற்றும் நம்ப முடியாத தொடக்கத்தைக் கொண்டதாக இருக்கும் என்றும், உங்கள் எழுத்துகளுக்கு அது எந்த உதவியும் செய்யாது என்றும் டிரேயர் கூறுகிறார்.

இதில் சிலவற்றை நாம் `விதிமுறை அல்லாவதை’ என்று கூறிக் கொள்ளலாம். நீங்கள் வளரும்போது அல்லது பள்ளிக்கூடத்தில் உங்கள் மூளையில் இந்த வார்த்தைகள் திணிக்கப் பட்டிருக்கும்.

டிரேயரின் அறிவுரை தெளிவானது: அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, அவற்றைத் தொடர்ந்து புறக்கணித்து விடுங்கள்.

“and அல்லது but என்ற வார்த்தைகளுடன் ஒரு வரியை எழுதத் தொடங்குவது தவறு என்று உங்களுக்கு சொல்லப் பட்டிருக்கலாம். ஆனால், அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்றாலும், அவ்வாறு தடை விதித்திருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை” என்கிறார் அவர்.

துணிச்சலாக இருங்கள். “ஆங்கில மொழியின் அற்புதமான விஷயங்கள் பலவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தத் தொடக்கத்துடன் ஒரு வரியை எழுதத் தொடங்குவது எப்போதுமே நல்லதாக இருக்காது என்றில்லை. ஆனால் அது தவறு கிடையாது.”

முன்னிடைச் சொல்லுடன் (preposition) ஒரு வரியை ஒருபோதும் முடிக்கக் கூடாது என்ற கடுமையான விதியில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று டிரேயர் விரும்புகிறார்.

இருந்தாலும், சில சமயங்களில் அது“அவ்வளவு தீவிரமானதாக இருக்காது,” ஆனால் அது தவறில்லை.

[நீங்கள் நன்கு எழுதக் கூடியவர் என்று கருதினால், வினையெச்சங்களை (infinitives) பிரிக்கக்கூடாது என்ற `விதிமுறை அல்லாத’ விஷயத்தையும் நீங்கள் புறக்கணிக்கலாம் – உதாரணமாக “to boldly go” என்று சொல்வதில் தவறில்லை.]

பயிற்சி 3: எழுத்தின் உரையில் ஆழ்ந்திடுங்கள்

`நல்ல எழுத்தாளராக விரும்புபவர்களுக்கு நான் கூற விரும்பும் சிறிய அறிவுரையாக இருக்கும் விஷயம் என்னவென்றால், எளிமையான அருமையான இந்தப் பரிசோதனையை செய்யுங்கள்: நீங்கள் பெருமையாக நினைக்கும் அல்லது அழகாக எழுதியிருப்பதாக நீங்கள் நினைக்கும் ஒரு படைப்பை எடுத்துக் கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே காப்பி செய்யுங்கள்” என்பதாக இருக்கும்.

நீங்கள் கையால் எழுதலாம் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்யலாம். ஆனால் இன்னொருவருடைய படைப்பை மீண்டும் உருவாக்குவதால் “அவர்களுடைய வாக்கிய அமைப்பின் உணர்வு மற்றும் நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாடு பற்றி நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய விரல்கள் மூலமாக மூளைக்கு அது சென்றடையும்; அந்த முறையில் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.”

“நல்ல எழுத்து எப்படி இருக்கும் என்பதைக் கற்றுக் கொள்வதற்கு இது எளிதான மற்றும் அருமையான வழிமுறை” என்கிறார் டிரேயர்.

ஆன்லைனில் இலக்கண உதவி இருக்கும் போது, காப்பி எடிட்டர் யாருக்குத் தேவை?

ஆங்கில இலக்கணத்துக்கான மென்பொருள்கள், அவற்றை உருவாக்கியவர்கள் சொல்கிறபடி சிறப்பானதாக இருக்குமானால், எனக்கு வேலையே இருக்காது” என்று டிரேயர் கூறுகிறார். “ஆனால், விஷயம் என்னவென்றால், அந்த அளவுக்கு அவை இல்லை.”

என்ன பிரச்சனை? “என்ன செய்ய வேண்டும் என்று உத்தேசிக்கப் பட்டதோ அதை உண்மையில் அவற்றால் செய்ய முடியாது. அவை வளைந்து போகாது, மிகவும் உறுதியாக விதியை கடைபிடிக்கும். சில நேரங்களில், `இலக்கணத்தின் புனித விதிகள்’ என கருதப்படும் அம்சங்கள் மீறப்படுவதை அவற்றால் அறிய முடியாது. உங்கள் எழுத்தில் நீங்கள் செய்ய விரும்பாததை அந்த மென்பொருளால் அறிய முடியாது.”

எழுத்துப் பிழைகளைக் கண்டறியும் மென்பொருளும் கூட நம்பகமானது அல்ல.

“நீங்கள் கவனமாக இருந்தாலும், அதற்கு பின்புலமாக சில விஷயங்கள் இருப்பது நல்லது” என்று இதை பயன்படுத்துவது குறித்து டிரேயர் ஒப்புக்கொள்கிறார்.

ஆனால் உங்களுடைய சுயபாதுகாப்பை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். எழுத்துப் பிழை கண்டறியும் மென்பொருள்கள் “ஒப்பொலி வார்த்தைகளில் எந்த வகையிலும் உதவியாக இருக்காது: reign மற்றும் rain வார்த்தைகளுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தைக் கூறக் கூடிய மென்பொருள் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”

bbc.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here