பச்சிளங்குழந்தைகள் இறந்த வழக்கில் கைதான மருத்துவர் ஆக்ஸிஜன் தீர்ந்ததால் பெரியவர்களும் இறந்திருக்கலாம் என்றும் வெற்றுத்தாள்களில் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது என்றும் எட்டுமாத சிறைவாசத்திற்கு பிறகு பிணையில் வெளிவந்துள்ள மருத்துவர் கஃபீல் கான் Scroll.in டிஜிட்டல் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

சென்ற ஆகஸ்டு மாதம் உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்புர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்ததால் 63 பச்சிளங்குழந்தைகள் இறந்த வழக்கில் அரசாங்கத்தின் தவறை மறைக்க தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார் மருத்துவர் கஃபீல் கான். சரியாக பணம் கட்டாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி
மற்றும் மருத்துவமனையில் மூளை சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் கர்ப்பிணிகளும் கூட இறந்துள்ளதாக கூறும் அவர், அந்த 48 மணிநேரத்தில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். ”அன்று இரவு மருத்துவ பிரிவில் 10 பேர் இறந்ததாக நினைவில் உள்ளது,” என்றார் அவர்.

எட்டு மாத சிறைவாசத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம் பிணையில் வந்த கஃபீல் கான் முன்னதாக இம்மாதம் தனது சகோதரர் சுடப்பட்டது ஒரு ”கொலை முயற்சி” என்கிறார். சிகிச்சை அளிக்க மாநில காவல்துறை தாமதித்ததாக குற்றம்சாட்டிய அவர், தனது சகோதரர் இறந்திருப்பார் என்றார். “அதனால் தான் அது உத்திர பிரதேச காவல்துறையின் இரண்டாவது கொலை முயற்சி
என்கிறேன்,” என்றார்.

குழந்தைகள் இறந்த பிறகு உத்திர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துடன் நடந்த உறையாடலை நினைவு கூறுகிறார் குழந்தை மருத்துவ வல்லுனரான கஃபீல் கான். தான் ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தது குறித்து கேள்வி எழுப்பிய ஆதித்யநாத், “சிலிண்டர் வாங்கி கொடுப்பதன் மூலம் ஹீரோ ஆகிவிட்டதாக நினைக்கிறாயா? உன்னை கவனித்துக்கொள்கிறேன்,”
என்று சொன்னதாக சொல்கிறார் கஃபீல் கான்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணையை சந்தித்து வரும் கஃபீல் கான் தான் தொடர்ந்து குழந்தைகளுக்கு மருத்துவம் செய்ய விரும்புவதாகவும், மூளை அழற்சி நோய்க்கு எதிராக தொடர்ந்து போராட விரும்புவதாகவும் சொல்கிறார்.

அவருடனான நேர்காணலின் சில பகுதிகள்:

பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அன்றிரவு நடந்தது என்ன?

அது ஒரு படுகொலை என்கிறேன். மருத்துவமனைக்கு திரவ ஆக்சிஜன் வழங்கும் வணிகருக்கு அரசாங்கம் ரூ. 68 லட்சம் செலுத்தாததால் 48 மணிநேரத்தில் 63 குழந்தைகள் இறந்துள்ளன. அன்று ஆகஸ்டு 10ஆம் தேதி எனக்கு விடுமுறை. அதிகாலை 2 மணிக்கு திரவ ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாகவும் சேமித்து வைத்திருந்த சிலிண்டர்களும் விரைவில் தீர்ந்துவிடும் என்றும் தகவல் வந்தது. நான் மருத்துவமனைக்கு விரைந்தேன். அருகிலிருக்கும் மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளிடம் வாங்க முயற்சித்தோம். ஆனால் அது போதவில்லை.

எனவே எல்லை பாதுகாப்பு படையிடம் சென்றோம். சில ராணுவ வீரர்களின் உதவியால் ஒரு பெரிய சரக்கு வாகனத்தில் 110 சிலிண்டர்கள் கிடைத்தது. இரண்டு நாட்களில் 500 சிலிண்டர்களை திரட்டினோம். ஆனால் அச்சமயம் மருத்துவமனையில் 400 குழந்தைகள் இருந்ததால் அது போதவில்லை. அவர்கள் ஏன் என்னை பலிகடா ஆக்கினர் என்பது எனக்கு தெரியவில்லை. தங்களது தவறை மறைக்க முழு சம்பவத்தையும் அரசு மறைக்க நினைக்கிறது. லக்னௌவில் அமர்ந்திருக்கும் அவர்களுக்கு, பணம் செலுத்தவில்லை என்றால் விநியோகம் துண்டிக்கப்படும் என்று ஆக்சிஜன் வியாபாரியான புஷ்பா சேல்ஸ் நிறுவனம் 14 முறை நினைவூட்டியுள்ளது . முதல்வரின் உறவினர் என சொல்லப்படும் கோரக்புர் மாவட்ட குற்றவியல் நடுவர், மருத்துவ கல்வி தலைமை இயக்குனர் மருத்துவர் கே.கே. குப்தா, முதன்மை செயலாளர் அனிதா ஜெயின் பட்னகர், சுகாதாரத்துறை அமைச்சர் அஷுதோஷ் சந்திரா ஆகியோர் அதில் அடக்கம். முதலமைச்சருக்கும் நினைவூட்டப்பட்டுள்ளது. ஆனால், நிலைமையை புரிந்துகொள்ளாமல் கடிதங்களை மட்டும் மேலே அனுப்பிக்கொண்டிருந்தனர். எனவே தங்களை தற்காத்துக்கொள்ள நான்
எளிதான குறியாகிவிட்டேன். எனக்கு எதிரான பொய் பிரச்சாரம் துவங்கியது. அதன் பிறகு முதல் தகவலறிக்கை தயார்செய்யப்பட்டது. பிறகு நான் சிறைக்கு சென்றேன்.

Baba Raghav Das Medical College Hospital

ஏன் ஒவ்வொறு ஆண்டும் கோரக்புரில் மூளை அழற்சி நோய் (Japanese Encephalitis) வெடிக்கிறது?

இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. உத்திர பிரதேசம் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். 2 கோடி மக்களுக்கு உள்ள ஒரே மருத்துவ கல்லூரியாக பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. பீகார் மாநிலத்தில் பாதியும், நேபாளத்தில் பாதியும், கிழக்கு உத்திர பிரதேசத்தில் பாதியும் இந்த 2 கோடியில் அடங்கும். குழந்தைகளை கதகதப்பாக வைக்கும் ’வார்மர்’ கருவிக்கு இங்கு கடும் பற்றாற்குறை நிலவுகிறது. அதனால் நான்கு ஐந்து குழந்தைகளை ஒரே கருவியில் வைத்திருந்தோம். ஒரு கருவியில் ஒரு குழந்தைக்கு மேல் வைக்க முடியாது. குழந்தையின் உடல் வெப்பநிலைக்கு ஏற்ப அக்கருவியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் சுற்றுப்புற வெப்பநிலையை சரிசெய்யும். நான்கு ஐந்து குழந்தைகளை வைத்தால் சென்சார்கள் சரியாக வேலை செய்யாது. போதுமான வசதிகள் இல்லாததால் எங்களுக்கு வேறு வழியில்லை. மூளை அழற்சி வறுமையின் காரணமாக வரும் நோய். கூட்டநெரிசல், மோசமான சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர் இல்லாதது தான் இந்நோய் வர காரணம். சமூக நிலை பெரிய பங்காற்றுகிறது. வசதியான
குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள் மூளை அழற்சி வந்து இறப்பதில்லை. இந்நோயால் இறக்கும் 98% குழந்தைகள் மோசமான சமூக-பொருளாதார நிலையில் இருப்பவர்கள் தான்.

ஜப்பானிய மூளை அழற்சி நோய் ஜப்பானில் தோன்றியது. ஆனால் அதற்கான தடுப்பூசிகள் அந்நாட்டில் இருந்ததால் அந்நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு 90 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசாங்கம் சொல்கிறது. இருப்பினும் ஜப்பானிய மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் உள்ளனர். ஒன்று அவர்கள் தடுப்பூசிகள் போடவில்லை அல்லது தடுப்பூசிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை அல்லது வெறும் காகித்தில் தான் நடக்கிறது.
அக்யூட் என்சிஃபாலிடிஸ் சின்ட்ரோம் (Acute Encephalitis Syndrome) என்கிற நோய் குடும்பத்தின் ஒரு பகுதி தான் ஜப்பானிய மூளை அழற்சி.

2016இல், எலி எச்சிலில் உள்ள ஸ்கிரப் டைஃபஸ் (scrub typhus) எனும் பாக்டீரியாவின் காரணமாகத் தான் மூளை அழற்சி நோய் பரவுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியது. மழைக்காலத்தில் குடிசை வீடுகளுக்குள் எலிகள் புகுந்து குழந்தைகளை கடிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். ஏனெனில், ஸ்கிரப் டைஃபஸ் பாக்டீரியாவினால் வரும் மூளை அழற்சி மிகவும் அறிது. 0.1% ஸ்கிரப் டைஃபஸ் பாதிப்புகள் தான் மூளை அழற்சி நோய்க்கு தள்ளும். மேலும், ஸ்கிரப் டைஃபஸுக்கு எதிராக மிகவும் வலிமையான மருந்து நம்மிடையே உள்ளது – அவை
அசிதிரோமைசின் மற்றும் டாக்சிசைலின். எனவே காரணங்கள் குறித்து நீங்கள் கேட்டால், ஜப்பானிய மூளை அழற்சி ஒரு காரணம். ஸ்கிரப் டைஃபஸ் மற்றொரு காரணமாக இருக்கலாம். மூளை அழற்சி நோய் வெடிப்பதற்கான 60% காரணங்கள் நமக்கு இன்னும் தெரியாது. எதிரி யாரென்று தெரியாவிட்டால் சண்டையிட முடியாது.

தொடர்ந்து ஐந்து முறை கோரக்புர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போது முதலமைச்சராக உள்ளவரும் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த எதாவது வகையில் உதவினாரா?

66 மூளை அழற்சி சிகிச்சை மையங்கள் கோரக்புர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளன. அவற்றில் சுவாசக்கருவிகள், படுக்கைகள், இயந்திரங்கள் எல்லாம் உள்ளன. ஆனால் போதுமான பணியாட்கள் இல்லை. மேலும், மதியம் 2 மணிக்கே தினமும் மூடப்படுகின்றன. சில சமயங்களில், ஒரே மருத்துவர் 24 மணிநேரமும் இருப்பார். பல நாட்களில் மருத்துவரே இருக்கமாட்டார். இது சரிபட்டு வராது. பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கூட,
எந்நேரமும் 300-400 குழந்தைகள் இருக்கும் நிலையில், வெறும் ஆறு நிரந்தர மருத்துவர்கள் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். என்னை கைது செய்து ஒரு வருடம் ஆகப்போகிறது. இன்னும் அங்கே ஒரு மருத்துவர் கூட பணியமர்த்தப்படவில்லை.

இச்சம்பவம் நடந்த போது, தான் பொறுப்பேற்று வெறும் ஆறு மாதங்களே ஆனதென்றும், தான் இதற்கு பொறுப்பல்ல என்றும் கூறினார் யோகி ஆதித்யநாத். ஆனால் இத்தனை ஆண்டுகளில் தனது தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தி அவர் ஏதாவது செய்திருக்கலாம். குழந்தையை கதகதப்பாக வைக்கும் ’வார்மர்’ கருவி வெறும் ரூ. 40,000. அந்த இரவு, 16 வார்மர் கருவிகள் பயன்பாட்டில் இருந்தன, 68 பச்சிளங்குழந்தைகள் இருந்தன.

இந்த ஆண்டுக்காக அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்துள்ளதா? இந்த மழைக்காலத்திலும் மூளை அழற்சி நோய் வெடிக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஏற்கனவே இந்த ஆண்டு பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 700 குழந்தைகள் இறந்துள்ளன. எனவே நாம் எதை நோக்கி செல்கிறோம் என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். நான் முன்பு கூறியது போல இது வறுமையால் வரும் நோய். அதனால் யாரும் கவலைப்படுவதில்லை. அந்த இரவில் 63 குழந்தைகள் இறந்தபோது அதனை
மூடி மறைப்பதில் தான் அவர்கள் கவனம் செலுத்தினர். இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. நான் சிறையிலிருந்து திரும்பியதும், உன்னுடைய மகன் கிடைத்துவிட்டான் என்று என் தாயிடம் சொன்னேன். ஆனால், குழந்தையை இழந்த பெற்றோருக்கு? நீங்கள் கோரக்புர் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை இழந்த பெற்றோருடன் பேசினால், அச்சம்பவம் குறித்து பேசவே தயங்குவார்கள். புலனாய்வு அதிகாரி அப்பெற்றோரிடம் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கி தங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி எழுதிக்கொண்டனர். அவர்கள் எழுதியதாவது: திரவ ஆக்சிஜன் பற்றாற்குறை இருந்தது, ஆனால் மருத்துவர்கள் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்தனர். என் குழந்தை நோயினால் இறந்தது, ஆக்சிஜன் பற்றாற்குறையால் அல்ல. ரூ. 10,000 மதிப்புள்ள பத்திரத் தாளில் இதற்கு கையெழுத்து பெறப்பட்டு நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பலை கிளம்பியது, பிறகு ஊடகங்களில் நீங்கள் ஹீரோவைப் போல சித்தரிக்கப்பட்டீர்கள். அதன் பிறகு மருத்துவமனைக்கு முதலமைச்சர் வந்தார். அவர் உங்களோடு என்ன பேசினார்?

நான் மட்டுமல்ல, 16 இளநிலை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் இருந்தனர். குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற மட்டுமே நாங்கள் முயற்சித்தோம். சிலிண்டர் ஏற்பாடு செய்தோம், அவ்வளவு தான். அக்குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டியிருந்தது. என்ன மருந்து கொடுப்பது என முடிவுசெய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு அரைமணி
நேரத்திற்கும் ஒரு குழந்தை இறந்தது. பெற்றோர்கள் கடுஞ்சினம் கொண்டு எங்களை தாக்க முற்பட்டனர். நாங்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினோம். எங்களால் முடிந்ததை செய்தோம் என்று விளக்கினோம். அடுத்த நாள், ஆகஸ்டு 13ஆம் தேதி, முதல்வர் என்னைத் தேடி வந்தார். “யார் மருத்துவர் கஃபீல்?” என்றார். நான் முன்னேறி வந்தேன். பணியாளர்கள், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, சட்டமன்ற உறுப்பினர்கள், காவலர்கள், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் என அனைவர்
முன்னிலையில் அவர் சொன்னார், “சிலிண்டர் வாங்கி கொடுப்பதன் மூலம் ஹீரோ ஆகிவிட்டதாக நினைக்கிறாயா? உன்னை கவனித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அது தான் அவருடன் எனக்கு நடந்த உரையாடல். அதன் பிறகு அனைவரும் எனக்கு ஆறுதல் கூறினர். யோகி கோபமாக இருப்பதால் என்னை வெளியேறக் கூறினர். அதன் பிறகு எனக்கு எதிராக முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வந்தது. காவல்துறையினர் எனது குடும்பத்தை நோட்டம் விட துவங்கினர்.
அப்போது தான் நான் சரணடைய முடிவு செய்தேன்.

நீங்கள் கல்லூரிகளில் இருந்து சிலிண்டர்கள் திருடியதாகவும், தனியாக மருத்துவம் பார்த்து வந்ததாகவும் செய்திகள் வந்ததே?

பாபா ராகவ் தாஸில் பிரச்சனை திரவ ஆக்சிஜன் குறித்து தான், சிலிண்டர்கள் குறித்தல்ல. அவசரநிலையில் பயன்படுத்துவதற்கு தான் சிலிண்டர்கள் இருந்தன. மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வந்தது. 200 அடி தொட்டியில் 30,000 முதல் 40,000 லிட்டர் வரை திரவ ஆக்சிஜன் நிரப்பும் வசதியுள்ளது. அது எல்லா பிரிவுகளுக்கும் குழாய் வழியே செல்கிறது.
குழாயிலிருந்து எப்படி பிராணவாயு திருட முடியும்? இரண்டாவதாக, திரவ ஆக்சிஜன் பற்றாற்குறை இல்லை என்றால் அதை
விநியோகிப்பவரான மனீஷ் பந்தாரியை ஏன் சிறைக்கு அனுப்பினர்? உண்மை என்னவென்றால் ஆக்ஸிஜன் பற்றாற்குறை ஏற்பட்டு அந்த மூன்று நாட்களில் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. அந்த இரவில் அவசரநிலைக்காக 52 சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவு 7:30 மணிக்கு திரவ ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது. இரவு 11:30 அந்த 52 சிலிண்டர்களும்
தீர்ந்துவிட்டன. தவிர , திரவ ஆக்சிஜன் குழந்தைகள் பிரிவுக்கு மட்டுமல்லாமல் எல்லா பிரிவுகளுக்கும் வழங்கப்படுகிறது. பிரசவ பிரிவில் எத்தனை கர்ப்பிணிகள் இறந்தார்கள் என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. மருத்துவ பிரிவில் எத்தனை பெரியவர்கள் இறந்தனர்? தீவிர சிகிச்சை பிரிவில் எத்தனை பெரியவர்கள் இறந்தனர்? மருத்துவ பிரிவில் அன்றிரவு 10
உயிரிழப்புகள் ஏற்பட்டதாக என் நினைவில் உள்ளது.

ஆக்ஸிஜன் பற்றாற்குறையினாலா?

ஆம், ஏனெனில் மத்திய விநியோகம் முடிந்துவிட்டால், மொத்த மருத்துவமனையும் பாதிக்கப்படும். மூளை அழற்சி பிரிவில் மட்டும் தான் ஊடகங்கள் கவனம் செலுத்தினர். அச்சம்பவத்திற்கு ஒரு ஆண்டு பின்பும் மொத்தமாக மருத்துவமனையில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. எனவே இந்த உயிரிழப்புகளுக்கெல்லாம் யார் பொறுப்பு? பாபா ராகவ் தாஸில் ஆகஸ்டு 8, 2016இல் நான் இணைந்தேன். அதற்கு முன் நான் தனியாக மருத்துவம் பார்த்து வந்தேன். அச்சமயத்தில் வெளியான ஒரு விளம்பரத்தை வைத்துக்கொண்டு பொய் கதைகள் அவிழ்க்கப்பட்டன.
அலாகாபாத் உயர் நீதி மன்றம் கூட நான் தனியாக மருத்துவம் பார்த்ததற்கு சாட்சி இல்லை எனக் கூறியுள்ளது.

சிறை எப்படி இருந்தது?

சிறை நரகம் போல் இருந்தது. கோரக்புர் சிறையின் கொள்ளளவு 800. ஆனால் 2,000 கைதிகளுக்கு மேல் இருந்தனர். என்னை வைத்திருந்த கட்டிடத்தின் கொள்ளளவு 60. ஆனால் 180 கைதிகள் இருந்தனர். நான் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர். எனவே ’பி’ தர வசதிகளுக்கு உரிமையுண்டு. ஆனால் என்னை தீவிர குற்றவாளிகளுடன் வைத்தனர். மருத்துவமனை குறித்த உண்மையை நான் வெளியே சொன்னால் இக்குற்றவாளிகள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று வதந்திகள் பரவின.

உங்கள் சகோதரர் தாக்கப்பட்டார். என்ன நடந்தது? யார் அதற்கு பொறுப்பு என்று நினைக்கிறீர்கள்?

கோராக்நாத் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நடந்தது. அப்பொது முதலமைச்சர் அங்கு உறங்கிக்கொண்டு இருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் என் சகோதரரை சுட்டனர். என் சகோதரரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவர் கீழே விழுந்து தப்பிக்க நினைத்த போது மீண்டும் இரண்டு முறை சுடப்பட்டது.
மூன்றாம் முறை அவரது நெற்றிக்கு குறி வைக்கப்பட்டது. சுடும்போது என் சகோதரர் விலகியதால் அவர் கையில் குண்டு பாய்ந்தது. முதலில், முதலமைச்சர் இருக்கும் பகுதியில் என்ன மாதிரியான பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது? இச்சம்பவம் நடந்து இடண்டு வாரங்கள் கழித்தும் சுட்டது யாரென தெரியவில்லை என்றனர் காவல்துறையினர். யாரும் கைது செய்யப்படவில்லை. பான்ஸ்கௌன் மக்களவை தொகுதியின் உறுப்பினர் கம்லேஷ் பஸ்வானின் பெயரை என் சகோதரர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு முதல் கொலை முயற்சி. இரண்டாவது கொலை முயற்சிக்கு பின்னால் உத்திர பிரதேச காவல்துறை உள்ளது. அவசர அறுவை சிகிச்சையை உள்நோக்கத்தோடு தாமதித்தனர். ஸ்டார் ஹோஸ்பைஸ் என்கிற தனியார்
மருத்துவமனையை வந்தடைந்தபோது, அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் வஜாஹத் கரீம் சட்ட-மருத்துவ சிகிச்சை செய்தார். ஆனால் காவல் அதிகாரிகள் பிரவின் குமார், சிறப்பு செயல் அதிகாரி மற்றும் வினய் குமார் சிங், நகர காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அரசு மருத்துவமனையில் இன்னொரு சட்ட-மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

என் சகோதரருக்கு அதிகமான இரத்தம் கசிந்துகொண்டிருந்தது, வலியில் அழுதுக்கொண்டிருந்தார். அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்று ஒரு மணிநேரம் சட்ட- மருத்துவம் செய்தனர். அது போதவில்லை. அதிகாரி ஒருவருக்கு அழைப்பு
வந்தது. சட்ட-மருத்துவத்தில் திருப்தி இல்லை எனக்கூறி அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரிக்கு செல்லவேண்டியிருந்தது. அதன் பிறகு தான் சிகிச்சை மேற்கொள்ள முடிந்தது. கழுத்தில் உறக்கநாடி அருகே ஒரு குண்டு சிக்கியுள்ளதென்றும், சகோதரரை காப்பாற்றவேண்டும் என்றால் உடனடியாக அதனை நீக்கவேண்டும் என்றும் நிரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கூறினார். உச்ச நீதி மன்ற வழியுறைப்படி முதலில் உயிரைக் காப்பாற்ற வேண்டும், பிறகு
முறைப்படி செய்யவேண்டியதை செய்யவேண்டும். நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றபோதும் 40 முதல் 50 காவலர்களைக்
கொண்டு வலுக்கட்டாயமாக பாபா ராகவ் தாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அதிகாலை 1:30 அங்கு சென்று சேர்ந்தோம். ஏற்கனவே சட்ட-மருத்துவம் செய்தாகிவிட்டதால் புதிதாக செய்யத் தேவையில்லை என்றனர் மருத்துவர்கள்.

அச்சமயம் குண்டு நீக்கக்கூடிய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் யாரும் இல்லை என்றனர். லக்னௌ அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் படி கூறினர். இரவு 11 மணிக்கு நடைபெற வேண்டிய அறுவைசிகிச்சை அதிகாலை 3 மணிக்கு நடந்தது. 4 மணிநேரம் வீணாக்கப்பட்டது. என் சகோதரர் இறந்திருப்பார். அதனால் தான் அது காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி என்கிறேன்.

38

உங்கள் வழக்கின் நிலை என்ன?

தற்போது தான் பிணை கிடைத்துள்ளது. இன்னும் நிறைய போராட வேண்டியுள்ளாது. அரசாங்கம் எனது பணியிடை நீக்கத்தை திரும்பப்பெறவும் இல்லை பணியிலிருந்து நீக்கவும் இல்லை. என் கைகள் கட்டப்பட்டுள்ளன. துறை ரீதியான விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. எனக்கு எதிராக ஒரு சாட்சியை கூட உத்திர பிரதேச அரசால் சமர்ப்பிக்க முடியவில்லை என உயர் நீதி மன்றம் கூறியுள்ளாது. மருத்துவ கல்வி தலைமை இயக்குனரை மூன்று முறை சந்தித்தேன், முதன்மை செயலாளர் ஹிமான்ஷு குமாரையும் சந்தித்தேன், ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. கேரளாவில் நிபா வைரஸ் பரவியபோது அம்மாநில முதல்வர் (பினராயி விஜயன்) என்னை கேரளாவிற்கு அழைத்தார், ஆனால் அதற்கும் இவர்கள் எனது இடைநீக்கத்தை காரணம் காட்டி முட்டுக்கட்டை போட்டனர். என்னால் சேவை செய்யமுடியாது, பாபா ராஜவ் தாஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைய முடியாது, பொருளாதார ரீதியாக நொறுங்கிவிட்டேன்.

அடுத்ததாக என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?

எனது இடைநீக்கத்தை திரும்பப்பெற்றால் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை செய்து குழந்தைகளுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அதே பகுதியில் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை பணியாற்றியுள்ளேன். எனது இடைநீக்கத்தை திரும்பப்பெறவில்லை என்றால் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். சிலர் என்னை அணுகி மூளை அழற்சி சிகிச்சை மையம் ஒன்றை கோரக்புரில் தொடங்கி, அரசு சாரா தொண்டு நிறுவனமாக எல்லோருக்கும் இலவச சிகிச்சை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு ஆக்ஸிஜன் பற்றாற்குறை இருக்காது. கோரக்புரை விட்டு செல்ல மாட்டேன் என்பதை
என்னால் உறுதிபடக் கூற முடியும். நான் இங்கேயே இருந்து மூளை அழற்சி நோயை எதிர்த்து போராடப்போகிறேன்.

Courtesy : Scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here