உத்தர பிரதேச மாநிலங்களான அலகாபாத் மற்றும் ஃபயிஸாபாத் ஆகியவற்றுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்யா என பெயர் மாற்றம் செய்தார். இந்நிலையில் தொடர்ந்து பல இடங்களுக்கு பெயர் மாற்ற வேண்டும் என்று பாஜக-வினர் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

பாஜக-வின் மக்கள் பிரதிநிதியான ஜகன் பிரசாத் கார்க், ‘ஆக்ராவுக்கு அக்ரவால் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஆக்ரா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் இருக்கிறது. அது குறித்து எங்கு வேண்டுமானாலும் தேடிப் பாருங்கள். முன்னர் இங்கு அடர்ந்த காட்டுப் பகுதி இருந்தது. அப்போது அகர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். எனவே, இந்த இடத்துக்கு அக்ர-வன் அல்லது அக்ர-வால் என்று தான் பெயர் சூட்டப்பட வேண்டும்’ என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து, பாஜக மக்கள் பிரதிநிதியான சர்தானா சங்கீத் சோம், ‘முசாஃபர்நகரை லக்‌ஷிமி நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்’ என்று கருத்து கூறியுள்ளார்.

சங்கீத் சோம் மேலும், ‘பாஜக, விடுபட்டுப் போன இந்திய கலாச்சாரத்தை மீட்கவே இந்த பெயர் மாற்றங்களை செய்து வருகிறது. இங்கு வந்து ஆட்சி புரிந்த முகலாய மன்னர்கள், இந்துத்துவ கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டனர். அதைத் திருத்தும் நோக்கில் தான் நகரங்களுக்கு மீண்டும் அதற்குரிய பழைய பெயர்களை சூட்டி வருகிறோம். உத்தர பிரதேசத்தில் இன்னும் பல நகரங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்படும்’ என்று விளக்கத்தை கூறியுள்ளார்.

உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தேர்தல் வரப் போகும் சமயத்தில் இதைப் போன்று வேலைகளில் ஈடுபடுவது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றது. அதே நேரத்தில், உத்தர பிரதேச அரசின் பெயர் மாற்றத்தை வரவேற்றுள்ளது பாஜக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here