(December 10, 2015)

செம்பரம்பாக்கம் ஏரியை மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக சொல்லாமல் 50,000 கன அடி நீரை 2-ஆம் தேதி திறந்து விட்டதுதான் சென்னை வெள்ளத்துக்குக் காரணம் என்றும், அதிகமான ஆக்கிரமிப்புக்கள்தான் காரணம் என்றும், பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் ஆகியவைதான் முக்கிய காரணங்கள் என பல அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள், நகர் வடிவமைப்பு அதிகாரிகள் ஆகியோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இன்னும் சில தமிழ் பத்திரிக்கைகள் மக்களுக்கு முன்னெச்சரிக்கையின்றி 50,000 கன அடி நீரை திறந்து விட்டதுதான் காரணம் எனவும் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். ஆனால், உண்மையில் சென்னை வெள்ளத்துக்கான காரணம் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்டதுதான் காரணமா? அல்லது அதை சுற்றி அரசாங்கமும், மக்களும் ஆக்கிரமித்தது காரணமா? பருவநிலை மாற்றம் காரணமா? உண்மை என்ன? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஜனகராஜன், சென்னை நகர வளர்ச்சி மைய ஆலோசகர்: (MIDS)

ஜனகராஜன்
ஜனகராஜன்

”சென்னைக்கு மூன்று முக்கிய ஆறுகள் உள்ளன. மத்திய சென்னைக்கு கூவம் நதி, தென் சென்னைக்கு அடையாறு, வட சென்னைக்கு கொசஸ்தலை ஆறு. இது மூன்றையும் சரியாக பிரித்து அனுப்புவது பக்கிங்காம் கால்வாய். ஆனால், அதனுடைய நிலைமை ஆக்கிரமிப்புகளால் சீரழிந்து விட்டன. அதனுடைய பரப்பளவு மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள அத்தனை ஐ.டி.நிறுவனங்கள் அனைத்தும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. அதை ஆக்கிரமித்து விட்டதால் வெள்ளத்துக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீரை அதிக அளவு திறந்து விட்டது மட்டும் வெள்ளத்துக்கான காரணம் அல்ல. அடையாறுக்கு 25 குளங்கள் தண்ணீரை கொடுக்கின்றன. டிசம்பர் 2-ஆம் தேதி 30,000 கன அடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்டது. ஆனால், சைதாப்பேட்டையில் 50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால், 2005-இல் 72,000 கன அடி நீரை திறந்து விட்டபோது கூட இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படவில்லை. இதற்கு காரணம் 10 வருடங்களில் ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. அப்போ இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு இல்லையா?”

சத்யேந்திரன், ஓய்வு பெற்ற அதிகாரி, பொதுப்பணித்துறை:

”செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீரை கனமழைக்கு முன்பே திறந்து விட்டிருக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். அப்படி சொல்வதே தவறு. அவங்க சொல்ற மாதிரி முன்பே தண்ணீரை திறந்து விட்டிருந்தால், போதுமான அளவு மழை பெய்யாதிருந்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அப்படி ஏற்பட்டாலும் பொதுப்பணி துறையைத்தான் குற்றம் சொல்லியிருப்பார்கள். நீர்நிலைகள் எல்லாத்தையுமே ஆக்கிரமிச்சாச்சு. அடையாறு, கொசஸ்தலை எல்லாமே ஆக்கிரமிப்புகள்தான். ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், போரூர் ராமச்சந்திரா ஆகியோர் எல்லோரும் கல்வி நிறுவனங்களுக்காக ஏரிகளை ஆக்கிரமிச்சுட்டாங்க. மழைநீர் போகுறதுக்கான வழியே இல்லாம பண்ணிட்டோம். அரசியல்வாதிகள் ஓட்டுக்களுக்காக குடிசைகளை அங்கெல்லாம் போட்டுட்டாங்க, பட்டாவே இல்லாம. பண வசதி படைத்தவர்களும் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஏரிகளில் பிளாட் கட்டிட்டாங்க. ஏரிகளில் இருக்கிற தண்ணீரை குறைக்கவே கூடாது. ஆக்கிரமிப்புக்களை மீட்கணும். ஏரியை திறந்து விடுவது மக்களுக்கு போய் சேரவில்லை. தொடர்பு கொள்ளவே எந்த சாதனங்களும் இல்லை. ஏரி, அணை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வயர்லஸ் ரேடியோ கொடுத்தாங்க. அது இப்ப இல்லை. இந்த பாதிப்புக்களுக்கு காரணம் தொடர்பு சாதனங்கள் செயலற்று போனதுதான். மக்களுக்கு இந்த பிரச்சனைகளை உணர்த்தியதே இந்த வெள்ளம்தான். குடிசைகளை அப்புறப்படுத்தணும். அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். நீர்ப்பிடிப்பில் ஆக்கிரமிப்புக்கள் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது. ஆனால், அதை யார் கண்டுகொண்டுள்ளார்கள்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்