காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  நேற்று(வியாழக்கிழமை) பேசிய  ஆட்சியர் பொன்னையா “காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது முக்கிய பிரமுகர்கள் தரிசனத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதியுடனும், பொது தரிசனத்தை வரும் 16ஆம் தேதி நள்ளிரவுடன் முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலை யத் துறை மற்றும் அர்ச்சகர்களுடன் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி தரிசனத்தை ரத்து செய்வது பற்றி முடி வெடுக்கப்பட்டது.

17ஆம் தேதி சம்பிரதாயப்படி அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்க வேண்டி இருப்பதால் அதற்கான நடவடிக்கை எடுக் கப்பட உள்ளது. 16ஆம் தேதி இரவு 10 மணிக்குள் கிழக்கு கோபுரத்துக்குள் எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.

அத்திவரதரை கடந்த 38 நாட்களில் சுமார் 70 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகரில் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகையை பொறுத்து ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு 11 மணிவரை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி ஆகம விதிப்படி உரிய பூஜைகளைச் செய்து அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என்றார்.

மேலும் அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்கு வாசம் செய்ய உள்ள அனந்த சரஸ் குளம் தூர் வாரப்பட்டு, உள் மண்டபம் சீரமைப்பு பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.