அஸ்ஸாம் என்ஆர்சி இறுதிப் பட்டியல்: “நாங்கள் இங்கு பிறந்தவர்கள். வேறு எங்கு செல்வோம்?” – கவலையும் கண்ணீரும்

0
351

தனது கையில் ஒரு காகிதத்தை வைத்துகொண்டு 45 வயதான அப்துல் ஹலீம் மஜூம்தார் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தார். ஐந்து பேர் கொண்ட அவரது குடும்பத்தில் இருந்து 4 பேரின் பெயர்கள் இன்று வெளியான தேசிய குடியுரிமை பதிவுப் பட்டியலில் (என்ஆர்சி) இல்லை.

அஸ்ஸாமிலுள்ள காம்ருப் மாவட்டத்தின் துக்டாபாடா கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ள என்ஆர்சி மையத்தில், அதிர்ச்சியோடும், அச்சத்தோடும் இருந்த இவரை பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் அவர் முன் கூடினர்.

நேற்று இரவிலிருந்து தான் அனுபவித்த துன்பத்தை பற்றி அப்துல் திணறியபடி சொல்லத் தொடங்கினார்.

“2017ம் ஆண்டு என்ஆர்சி வரைவு அறிக்கையில் எனது குடும்பத்திலுள்ள அனைவரின் பெயரும் இருந்தன. 2018ம் ஆண்டு என்ஆர்சி வரைவில் எனது மனைவியின் பெயரை தவிர, அனைவரின் பெயர்களும் இருந்தன. மனைவியின் பெயர் பற்றிய சிக்கல் இருந்ததால், அதற்கான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்திருந்தோம். இன்று காலை, கவலையோடும், குழப்பத்தோடும், பதற்றத்தோடும் எழுந்தேன். என்னையோ, எனது குழந்தைகளையோ பற்றியல்ல, எனது மனைவி பற்றி அதிக கவலை என்னை ஆட்கொண்டிருந்தது. ஆனால், தந்போது எங்கள் நால்வரின் பெயர் சேர்க்கப்படாமல் இருப்பதை இந்த என்ஆர்சியின் கடிதம் தெரிவிப்பதால், எப்படி உணர்வது என எனக்கு தெரியவில்லை” என்று அப்துல் கூறினார்.

முகமது காதிம் அலி
முகமது காதிம் அலி

இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு அஸ்ஸாமின் என்ஆர்சி பட்டியல் வெளியானது. குடியுரிமை ஆவணத்தில் தங்களின் பெயர் உள்ளதா என்பதை உறுதிசெய்ய பக்கத்தில் அமைந்திருக்கும் என்ஆர்சி மையங்களின் முன்னால் விண்ணப்பதாரர்கள் கூட தொடங்கினர்.

அவ்வாறு விண்ணப்பம் செய்தோரில் ஒருவர்தான் முகமது காதிம் அலி. இவர் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். என்ஆர்சி வெளியிட்டுள்ள இறுதிப் பட்டியலில் இவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் உள்ளன. என்ஆர்சி பட்டியலின் ஆவணத்தை என்னிடம் காட்டி, “நீண்டகாலத்திற்கு பின், நான் அமைதியாக உணர முடியும், நிம்மதியாக சுவாசிக்க முடியும்” என்று கூறினார்.

ஆனால், காதிம் அலி போல எல்லோரும் அதிஷ்டசாலிகள் அல்ல. 19 லட்சம் பேரின் பெயர்கள் இந்த என்ஆர்சி இறுதிப்பட்டியலில் இல்லை.

அத்தகையோரில் ஒருவர்தான் 20 வயதான மொய்னுல் ஹக். துக்டாபாடா என்ஆர்சி மையத்திற்கு வெளியே தனது கையில் ஒரு கட்டு ஆவணங்களோடு அவர் நின்று கொண்டிருக்கையில் நான் அவரை சந்தித்தேன்.

மொய்னுல் ஹக்
மொய்னுல் ஹக்

“எனது குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆறு பேரின் பெயர்களும் இந்த இறுதிப்பட்டியலில் இல்லை” என்று கூறிக்கொண்டு முகத்தில் வடிந்த கண்ணீரையும், வேர்வையையும் அவர் துடைத்தார்.

120 நாட்களில் வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் விண்ணப்பம் செய்வதற்கு மாநில அரசு வழங்கியிருக்கும் அறிவிப்புகள் இவரை இதுவரை சென்றடையவில்லை. மாவட்ட சட்ட சேவைகள் நிர்வாகத்தின் வழியாக, இந்தப் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு அரசு வழங்கிய சட்ட உதவி பற்றிய எந்த தகவலையும் இவர் அறியவில்லை.

மொய்னுலோடு என்ஆர்சி இறுதிப் பட்டியலில் தனது மனைவி ரபியா கட்டூனின் பெயர் இல்லாத அன்சார் அலியும் கலக்கத்தோடு நின்று கொண்டிருந்தார், எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி அன்சாருக்கு எதுவும் தெரியவில்லை.

வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் விண்ணப்பம் செய்வது பற்றி நான் அவரிடம் கேட்டபோது, அது பற்றி கேள்விப்பட்டுள்ளதாகவும், அவற்றை எவ்வாறு அணுக வேண்டுமென எந்த வழிமுறையும் தெரியவில்லை என்றும் கூறினார்.

என்ஆர்சி அதிகாரிகள்

இந்தப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளோருக்கு அரசின் அறிவிப்புகள் இன்னும் கீழ்மட்ட அளவுக்கு சென்றடையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. வெளிநாட்டு தீர்ப்பாயங்களை அணுகும் செயல்முறை குறித்த விழிப்புணர்வு இல்லாததும் தெளிவாக தெரிகிறது.

அஸ்ஸாம் முழுவதும் பலந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளின் பொறியில் சிக்கிவிட வேண்டாம் என்று பரவலான வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை எந்த வன்முறையும் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் இல்லை.

சமூக ஊடக செயல்பாடுகளை போலீஸ் மிகவும் உற்றுநோக்கி வருவதாக மாநில போலீஸ் டிஜிபி குலாந்தர் சாய்கியா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்.

“சமூக ஊடகங்களை பயன்படுத்தி வதந்திகள், வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள், வகுப்புவாத கருத்துக்களை பரப்ப முயல்வோரை விடப்போவதில்லை” என்று அவர் கூறினார்.

இந்தப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வெளிநாட்டவர்கள் என்று கருதப்படமாட்டார்கள் என்றும், வெளிநாட்டு தீர்ப்பாயங்கள் தீர்ப்பு அளிக்கும் வரை கைதுசெய்யப்படமாட்டார்கள் என்றும் இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பெண்கள்

இந்தப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், வெளிநாட்டு தீர்ப்பாயங்களிடம் முறையிட்டு குடியுரிமையை உறுதிசெய்து கொள்வதற்கு இருந்த 60 நாட்கள் என்கிற காலக்கெடு 120 நாட்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தீர்ப்பாய முடிவால் திருப்தி அடையாவிட்டால், தங்களின் குடியுரிமையை உறுதிசெய்ய கோரி இந்தியாவின் உயர் நீதிமன்றங்களை விண்ணப்பத்தாரர்கள் நாடலாம்.

ஆனால், அப்துல் ஹலீம் போன்றோருக்கு, என்ஆர்சி பட்டியலில் பெயர் இல்லாமல் இருப்பது என்பது, ஒரு துண்டு காகிதத்தில் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பதைவிட மேலான விடயமாகும்.

முகத்தில் கவலையோடு அவர் தொடர்ந்தார். “நான் அஸ்ஸாமில் பிறந்தேன். எனது தந்தையும் இங்குதான் பிறந்தார். எனது குழந்தைகளும் கூட இங்குதான் பிறந்தார்கள். பாரம்பரியமாக இங்குதான் வாழ்கிறோம். நான் வங்கி ஒன்றில் வேலை செய்கிறேன். எனது குழந்தைகள் படித்தவர்கள். அவர்கள் தங்களின் வேலை மற்றும் எதிர்காலம் பற்றி கவலை கொள்ள வேண்டியுள்ளது. இந்நேரத்தில், இப்போது நாங்கள் நீண்ட சட்டப்போராட்டத்திற்கு எங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், நம்பிக்கை இழந்துபோகவில்லை. நாங்கள் வெளிநாட்டு தீர்ப்பாயத்திற்கு செல்வோம். எங்கள் பெயர்கள் இந்தப் பட்டியிலில் சேர்க்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். காரணம் நாங்கள் இந்த இடத்தை சேர்ந்தவர்கள். வேறு எங்கு போவோம்?”

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here