அஸ்ஸாம் அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் மோசடியில் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாஜக எம்.பி. ஆர்பி ஷர்மாவின் மகள் மற்றும் 18 அரசு உயரதிகாரிகள் நேற்று (ஜூலை 18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திப்ரூகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரஜ் சிங் பனேசர் கூறுகையில், ”அஸ்ஸாம் தேர்வாணைய பணிநியமன ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக , 8 பெண் அதிகாரிகள் உள்பட , 19 உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இது தவிர, அஸ்ஸாம் போலீஸ் சர்வீஸ் கமிஷனில் 2015 நியமனத்தில் ஊழல் புரிந்ததாக 25 உயரதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே போலீஸ் வேலைக்காக தேர்வு எழுதியவர்களிடம் பணம் பெற்று விடைத்தாள்களில் திருத்தம் செய்வதற்கு உடந்தையாயிருந்தவர்கள்.

மேலும் அந்த 25 உயரதிகாரிகளில் 13 பேர் அஸ்ஸாம் சிவில் சர்வீஸ் தேர்வுக்காகவும், 7 பேர் அஸ்ஸாம் போலீஸ் சர்வீஸ் நியமனத்திற்காகவும், மீதியுள்ளவர்கள் சிவில் சேவைக்கு இணையான அரசுப் பணி நியமனத்திற்காகவும் மோசடியில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம் அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் நடந்துள்ள மாபெரும் ஊழலில் பாஜக எம்.பி.யின் மகள் ஒருவருக்கு முக்கியத் தொடர்பு இருப்பது வெட்கக்கேடானது, ஊழலைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்