சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் அஸ்வானி குமார். 2008-2010-ல் அவர் இந்த பொறுப்பை வகித்தார். இந்தியாவை உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் பல திருப்பங்களை வெளிக் கொண்டு வந்தபோது அவரது பெயர் அகில இந்திய அளவில் அதிகமாக உச்சரிக்கப்பட்டது.
பின்னாளில் நாகாலாந்து மாநில கவர்னராகவும் பதவி வகித்தவர். சிம்லாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அதிகாரி அஸ்வானிகுமார் நேற்று(புதன்கிழமை சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 69.
அஷ்வானி குமார் தற்கொலைசெய்து கொண்டதை சிம்லா மாவட்ட கண்காணிப்பாளர் மொஹித் சாவ்லாஉறுதி படுத்தியுள்ளார். அவரது வீட்டில் இருந்து தற்கொலை குறிப்பை கைபற்றியுள்ளபோலீசார், “இந்த வாழ்க்கையில் அதிகமான துக்கத்தை சந்தித்துவிட்டதால், தனது அடுத்த பயணத்திற்கு புறப்பட்டதாக” அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர் துணைவேந்தராக இருந்து வந்த ஏ.பி.ஜி. பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 19 உறுப்பினர்கள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
இது தொடர்பான விவகாரங்களால் அவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.வீட்டிலேயே முடங்கியிருந்த அவர் திடீரென தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.
அஸ்வானி குமார் 1950 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இமாசலபிரதேசத்தின் நகான் என்ற இடத்தில் பிறந்தார். 1971-ல்பட்டப்படிப்பை முடித்த அவர், 1973-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக இமாசல் பிரதேசத்தில் பணியில் சேர்ந்தார்.
இமாசல பிரதேச மாநிலத்தின் டி.ஜி.பி. ஆகவும் (2006-2008) கவுரவம் பெற்றார். சி.பி.ஐ.யின் இயக்குனராகவும் உயர்ந்தார். தொடர்ந்து பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்த அவர், பணி ஓய்வுக்குப்பின், 2013-ல் நாகாலாந்தின் கவர்னராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.