காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வலியுறுத்தி அதிமுக, திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என அதிமுக எம்பிக்கள் கூறியுள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று (மார்ச்.5) காங்கிரஸ், தெலுங்குதேசம், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

par1

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்றும் (மார்.6) எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு, பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

lok-sabha-adjou12017

அதேபோன்று, தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்களும் காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, திமுக மற்றும் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் நாடாளுமன்றத்திலும் தமிழக எம்பிக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்