மொகலாய மன்னர் அவுரங்கசீப்பை தீவிரவாதி என பாரதிய ஜனத கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சமீபத்தில், மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியெற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் கட்டியார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் டெல்லியிலுள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில், ”அவுரங்கசீப்-தாரா ஷிகோ: இரு சகோதரர்களின் கதை” என்ற கருத்தரங்கமும், “மறக்கப்பட்ட முஸ்லிம் இளவரசர்-தாரா ஷிகோ” கண்காட்சியும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய டெல்லி கிழக்கு தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிரி, மொகலாய மன்னர் அவுரங்கசீப்பை ஒரு தீவிரவாதி எனப் பேசினார். மேலும் அவுரங்கசீப்பின் சகோதரரான தாரா ஷிகோவை, கற்றறிந்தவர் எனவும் பாராட்டி பேசினார்.

மேலும் அவர் பேசும்போது, ஒவ்வொரு முறையும் டெல்லியிலுள்ள அவுரங்கசீப் சாலையைக் கடக்கும்போதும் தான் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியிருந்ததாகவும், ஒரு கொடுங்கோல் மன்னரின் பெயரை இந்திய சாலைக்கு சூட்டியுள்ளது இந்தியாவின் விருப்பத்திற்கு எதிரானது என்றே தான் கருதியதாகவும் தெரிவித்தார். அதன் காரணமாகவே அவுரங்கசீப் சாலையின் பெயரை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என மாற்ற முயற்சி எடுத்ததாகவும், அதில் வெற்றிபெற்றதாகவும் தெரிவித்தார்.

பள்ளிகளில் வரலாறு கற்பிக்கும்போது மொகலாய மன்னர் அவுரங்கசீப் மட்டுமல்லாது அவரது சகோதரர் தாரா ஷிகோ பற்றியும் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். அவுரங்கசீப் பற்றி மட்டுமே கற்றுக்கொடுத்தால் அது வரலாற்றைப் பிழையுடன் கற்பிப்பது போலாகி விடும் எனவும் தெரிவித்தார்.

நன்றி: deccan chronicle

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்