அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் முதல்முறையாக மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை யார் நடத்துவது என்பது தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்களிடையே பிரச்னை எழுந்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து விழாவை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் பரிசுப் பொருள்கள் கொடுப்பதற்கு என தனி அலுவலகம் அமைத்து அதில் முறையாக ரசீதுகள் வழங்கி பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும் தங்கக் காசு கொடுப்போரிடம் நகை மதிப்பீட்டாளர் மூலம் காசுகளை சோதனையிட்டே பெற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் 596 மாடுபிடி வீரர்கள், 691 காளைகள் பங்கேற்கின்றன.

மாவட்ட நிர்வாகம் சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு மாநகராட்சி சுகாதார துறையினர் மருத்துவ சோதனையுடன், காப்பீடு வசதியும் செய்துள்ளனர். மத்திய அரசின் சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 12 செலுத்தினால் ரூ. 1 லட்சம் காப்பீடும், ரூ. 300-க்கு ரூ. 2 லட்சத்திற்கும் காப்பீடு செய்யப்பட்டது. மாடுபிடி வீரர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களது வங்கிக் கணக்கில் காப்பீடு தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வரும் காளைகளை மருத்துவ பரிசோதனை செய்ய கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அவனியாபுரம் கால்நடை மருத்துவர் சரவணன் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 நடமாடும் மருத்துவக் குழுக்களும், காயமடையும் காளைகளுக்கு 2 ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல காயமடையும் மாடுபிடி வீரர்களின் வசதிக்காக மருத்துவர் ஆனந்த் தலைமையில் 10 மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் 15 வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுளளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்கும் வண்ணம் பெரிய அளவிலான திரைகள் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பான விழாவாக நடைபெறவுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆலோசனைக் கூட்டம் : அவனியாபுரம் மாநகராட்சி அலுவலக அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன், விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன், குழு உறுப்பினர்கள் மற்றும் விலங்குகள் நலவாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ்.கே. மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் எஸ்.கே. மிட்டல் செய்தியாளர்களிடம் கூறியது: வெளியூரில் இருந்து காளைகளை துன்புறுத்தல் இல்லாமல் கொண்டு வரவேண்டும். கொம்புகளில் எதுவும் கட்டக் கூடாது. மாடுகள் வாடிவாசலில் இருந்து வெளிவரும் போது பார்வையாளர்கள் மீது பாயாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here