அழுதுக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளி; மனதை நெருடும் இந்த ஒளிப்படத்தின் செய்தி இதுதான்

0
547

சமீப நாள்களில் செய்திகளைப் படித்தவர்களும், பார்த்தவர்களும் இந்த  புகைப்படத்தை நிச்சயம் பார்க்கத் தவறியிருக்க முடியாது.

புலம்பெயர் தொழிலாளி ஒருவர் அழுதபடி செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தை எடுத்தவர் பிடிஐ புகைப்படக் கலைஞர் அதுல் யாதவ். 

இவரது புகைப்படம் கடந்த சில நாள்களாக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வந்தது. இதன் காரணமாக இவர் சொந்த ஊர் செல்ல உதவி கிடைத்துள்ளது.

இதுபற்றி புகைப்படத்தை எடுத்த பிடிஐ புகைப்படக் கலைஞர் அதுல் யாதவ் கூறுகையில், தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளிகளின் அவல நிலையை விளக்கும் வகையில் புகைப்படங்களை எடுத்து வந்தேன். கடந்த வாரம் தில்லி சாலையில் அவரைப் பார்த்தேன். அவர் தனது செல்லிடப்பேசியில் அழுதபடியே பேசிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அப்படியே சென்றுவிட முடியவில்லை. 

நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டேன். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கையை நீட்டி அங்கே என்று கூறினார். 

தனது மகன் இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், ஒரு வேளை கடைசி வரை தான் அவனை பார்க்க முடியாமலேயே போய்விடுமோ என்றுக் கூறி கதறினார். அவருக்கு கொஞ்சம் பிஸ்கட்டும், தண்ணீரும் கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன். அவருக்கு உதவ முன் வந்த போதும், காவலர்கள் அதனை அனுமதிக்கவில்லை. அவர் சொந்த ஊர் செல்ல உதவி செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர்.

வீட்டுக்குத் திரும்பிய பிறகுதான் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. அவரது பெயரையோ செல்லிடப்பேசி எண்ணையோ நான் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் சொந்த ஊர் சென்றாரா, அவரது மகனை சந்தித்தாரா என்று தெரிந்து கொள்ளக் கூட வழியில்லாமல் போய்விட்டதே என்று வருந்தினேன்.

ஆனால் நான் எடுத்த புகைப்படம் செய்தி தளங்களிலும், வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவின. சில ஊடகங்கள் அவரது செய்தியை வெளியிட ஆர்வத்தோடு, அவரைப் பற்றிய தகவல்களை தேடின

அப்போதுதான், அவர் ராம்புகார் பண்டிட் என்றும், அங்கே என்று சொன்னது 1200 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பிகார் மாநிலம் பரியார்புர் கிராமம் என்றும் எனக்குத் தெரிய வந்தது. நஜாஃப்கர் அருகே அவர் வேலை செய்து வந்துள்ளார். போக்குவரத்து முடக்கப்பட்டதால், தன்னைப் போலவே லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுடன் சொந்த ஊரை நோக்கி நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஆனால் அவர்களது பயணம் நிஜாமுதீன் பாலம் அருகே காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. 3 நாட்களாக அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

அது மட்டுமல்ல, அவர் சொந்த ஊர் செல்லும் முன்பே அவரது மகன் இறந்துவிட்டார் என்பதும் தெரிய வந்தது. என் இதயம் உடைந்தது என்கிறார் அதுல் யாதவ்.

 https://www.dinamani.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here