அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கரூரில் உற்பத்தியாகும் பாரம்பரிய கொசுவலைத் தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் உற்பத்தியாளர்கள்.

உலகளவில் கரூர் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி தொழிலுக்கு அடுத்தபடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரக் கூடியாக இருந்து வந்தது பாரம்பரிய கொசுவலை உற்பத்தி தொழில். நாடு முழுவதும் ஆண்டுக்கு ரூ.40 கோடி வரை கரூரில் கொசு வலை மூலம் வர்த்தகம் நடைபெற்று வந்தது. 

பாலி எத்திலின் என்றழைக்கப்படும் பிளாஸ்டிக் குருணை மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கொசுவலைகள் நாட்டின் மேற்குவங்கம், உத்தரபிரதேசம், குஜராத், பிகார், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களுக்கு அதிகளவிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா போன்ற கடுமையான காய்ச்சல்களை உருவாக்கும் கொசுக்கள் கடிப்பதை தடுக்கும் வகையில் நேர்த்தியாக உற்பத்தி செய்யக்கூடிய வகையாக கரூர் கொசுவலைகள் இருப்பதால் மற்ற நாடுகளின் கொசுவலைகளைவிட கரூர் கொசுவலைக்கு என்றுமே தனியொரு இடமுண்டு. மேலும், தோட்டக்கலைத் துறையில், விதைப் பண்ணைகளில் சூரிய ஒளியைத் தடுக்கும் வகையிலும், பட்டுப்பூச்சி வளர்ப்பு போன்ற பயன்பாட்டில்இவற்றின்பங்கு மகத்தானது.

இவற்றைத்தவிர, மெடிக்கல் பேக்கிங் பயன்பாட்டிலும் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்தத் தொழிலில் நேரிடையாக சுமார் 20,000 பேரும், மறைமுகமாக சுமார் 15,000 பேருக்கும் பணி வாய்ப்பைக் கொடுத்த இந்தத் தொழில் தற்போது அடியோடு முடங்கிப்போயுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாகப் புறக்கணித்து வருவது, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மாநில அரசின் விலையில்லா கொசுவலை வழங்கும் திட்டத்தில் கைவிட்டது, தரமற்ற கொசுவலையில் முன்னணியில் வகிக்கும் வங்கதேச கொசு வலைகள் எல்லைப்புறமாக கள்ளச்சந்தையில் ஊடுருவது உள்ளிட்ட காரணங்களால், கரூரில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய கொசுவலைகளின் உற்பத்தி முடங்கி, அதனை நம்பியிருந்த தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கும் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். 

இதுதொடர்பாக பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கே.கருணாநிதி கூறியது: மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியில் மேக்இன் இந்தியா திட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றனர். ஆனால் சிறு, குறு தொழில் பட்டியலில் உள்ள பாரம்பரியகொசுவலை உற்பத்திக்கு முன்பு ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது கிடையாது. மூலப்பொருளான பாலிஎத்திலினுக்கு மட்டும் 12 சதவீதம் வரி செலுத்தி வந்தோம். ஆனால், இப்போது வரியையும் செலுத்தச் சொல்கிறார்கள். ஆனால் (ரீபண்ட்) திருப்பித்தரும் தொகையானது 2018-இல் தான் பெரும்பாலனோருக்கு கிடைத்தது. இன்னும் சிலருக்கு கிடைக்கவில்லை. இதேபோல, அடர்ந்த வனப்பகுதியில் எல்லையை காத்து வரும் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கும் மத்திய அரசு ஒப்பந்தப் புள்ளிகள் பெற்று அதிக அளவில் கொசுவலைகளை வாங்கும். 

அதாவது, 2,000 பேல்கள் முதல் 3,000 பேல்கள் வரை ராணுவத்துக்கு மட்டும் விநியோகம் செய்வோம். இதன்மூலம், ரூ.5 கோடி வரை வர்த்தகம் கிடைத்து வந்தது. அதுவும் கடந்த 2012-ஆண்டுக்குப் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனிடையே வங்கதேசத்தில் உற்பத்தியாகும் தரமற்ற கொசுவலைகள் நம்நாட்டிற்குள் கள்ளத்தனமாக ஊடுருவி வருகின்றன. சில அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக கொசுவலைகளை நம் நாட்டிற்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள். இங்கு கள்ளச்சந்தையில் மிகவும் குறைந்த விலையில் விற்கிறார்கள். 

நம் பாரம்பரிய கொசுவலைகள் கிலோ ரூ.200-க்கு விற்கும் நிலையில், கள்ளச்சந்தை பொருள் ரூ.70-க்கு விற்பதால் நம் நாட்டுத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்த கொசுவலைகள் தேக்கமடைந்து வருகின்றன. முன்பு இருந்ததுபோல, ஜிஎஸ்டி இல்லாத நிலையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். வங்கதேசத்திலிருந்து மறைமுகமாக நம்நாட்டிற்குள் ஊடுருவும் கொசுவலைகளை தடுத்து நிறுத்தி, உரிய வரிவிதிப்பை அந்த கொசுவலைகளுக்கு அமல்படுத்த வேண்டும்.

அழிந்துவரும் சிறு, குறு தொழில்கள் பட்டியலில் கொசுவலை உற்பத்தி நிறுவனங்களும் இணைந்துவிடாமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here