சிபிஐ இயக்குநர்களுக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் இயக்குநர் அலோக் வர்மா பணிவிடுப்பில் அனுப்பப்பட்ட முடிவை இரவோடு இரவாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனிடம், தேவைப்பட்டால் சிபிஐ இயக்குநரை உச்ச நீதிமன்றமே நியமனம் செய்ய வழிவகை உள்ளதா? என்று கேட்டார்.

அரசியல் சாசனத்தின் இறுதி விளக்கதாரராக உச்ச நீதிமன்றம் தனது அதிகாரங்களை செயல்படுத்துவதன் மூலம் செய்யலாம் என்று ஃபாலி நாரிமன் பதில் அளித்தார்.

பிறகு மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி )வழக்கறிஞர் துஷார் மேத்தாவை நோக்கி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அக்டோபர் 23ஆம் தேதி இரவோடு இரவாக அலோக்வர்மாவை பணிவிடுப்பில் அனுப்ப வேண்டிய அவசியம்தான் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய கண்காணிப்பு ஆணையத்தை இப்படி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் சூழல் இருந்திருக்கிறது என்றால் அது ஓர் இரவில் நடக்கக் கூடியதாக இருந்திருக்காது. நீங்கள் அலோக் வர்மாவை 2 மாதங்கள் பொறுத்துக் கொண்டீர்கள். இப்படியிருக்கையில் ஒர் இரவில் அவரை விடுப்பில் அனுப்பும் முடிவை எடுக்க வேண்டிய தேவை என்ன?” என்று கேள்வி எழுப்பினார் தலைமை நீதிபதி.

இதற்குப் பதில் அளித்த சிவிசி வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிபிஐயின் 2 மூத்த அதிகாரிகள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பிவிட்டனர். ஒருவர் மீது ஒருவர் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் வரைக்கும் சென்றாகிவிட்டது. அவர்கள் சாட்சிகளை கலைக்கலாம். இது உண்மையில் ஒரு திடீர்ச் சூழல்தான் என்றார்.

சிவிசி – யும் மத்திய அரசும் இது தொடர்பாக பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழுவிடம் ஏன் அனுமதி பெறவில்லை? என்று கேள்வி எழுப்பினர் அதற்கு துஷார் மேத்தா பிரதமர் தலைமை குழுவை ஆலோசிக்க வேண்டிய தேவையில்லை என்று பதில் அளித்தார்.

அலோக் வர்மாவுக்கு 2 ஆண்டுகால பதவிக்காலம் உள்ளது, அதற்கு முன்னரே அவரை அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் ஏன் கமிட்டியை ஆலோசிக்கவில்லை? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார் தலைமை நீதிபதி .

இதன் பிறகு விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் .

சிபிஐ அமைப்பில் தலைமை பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகளும் மோதலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மத்தியில் அந்த அமைப்பு கேலிக்குள்ளானது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி இந்த வாதங்களை முன்வைத்தார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் அந்த அமைப்பின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக மத்திய அரசு தலையிட்டது.

அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடுத்தார்.

அதில், அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்வைத்த வாதம்:

“சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் ஆகியோருக்கு இடையிலான மோதலால் அந்த அமைப்புக்கான கௌரவமும், மரியாதையும் குறைந்து விட்டது. இத்தகைய உயர் பதவிகளில் இருந்த அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் சண்டையிட்டு வந்ததால் பொதுமக்கள் மத்தியில் சிபிஐ அமைப்பு கேலிக்குள்ளானது.

இந்தச் சண்டை என்பது முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை உருவாக்கியதுடன், தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்திவிட்டது. இந்த இரு அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

இறுதியாக, அந்த அதிகாரிகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசின் தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒருவேளை, அரசு அதைச் செய்திருக்காவிட்டால், இரு அதிகாரிகளின் சண்டை எங்கு போய் முடிந்திருக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார் அவர் .

இதைத்தொடர்ந்து, சிவிசி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி நீண்ட வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்ட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here