அறம் என்ற சத்கர்மம்: நயன்தாரா தோழரானது எப்படி?

உண்மை ஒரு நாள் ஜெயித்தே தீரும்

0
533
நயன்தாரா

அபயம் தேடியபடி மேல்நோக்கி நீளுகின்ற ஏராளமான கைகள்; அவர்களுக்கு நேராக கீழ்நோக்கி வருகிற ஒரு தைரியம் மிக்க கை – அறம்.

இந்தப் படம் தலைப்பிலேயே தன் அரசியலைப் பேசித் தொடங்குகிறது; கோபி நயினார் திரைக்கதை எழுதி, இயக்கிய இந்தப் படம், நமது மனங்களைப் பிடித்து உலுக்குவதற்குக் காரணம், அதனுடைய தீவிரமான கதை சொல்லும் முறைமட்டுமல்ல. அது கையாளுகின்ற சமகால இந்தியாவின் வெம்பிப்போன அரசியல் விஷயங்களும்தான்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை மீட்க, ஊர் மக்கள் எல்லாரும் ஒன்றுகூடுவதுதான் இந்தப் படத்தின் கதை. மதிவதனி என்ற மாவட்ட ஆட்சியர், இந்த மீட்பு நடவடிக்கைக்குத் தலைமையேற்கிறார். 90 அடி ஆழத்தில் உள்ள துளைக்கிணற்றில் சிக்கி, தனது உயிரையே கையில் பிடித்தபடி ஹன்சிகா என்ற சிறுமி போராடிக் கொண்டிருக்கிறாள். அன்பு மகளின் ஒவ்வொரு சுவாசத்தையும் கண்காணித்து, அவளுடன் வேதனையைக் குரலில்கூட வெளிக்காட்டாமல் துடித்தபடி, பேசிக்கொண்டே இருக்கும் தந்தை, மகன், சகோதரன் என இவர்களெல்லாரும் மேலே இருக்கிறார்கள்.
அப்போது அங்கே இருக்கும் மருத்துவர் இப்படிச் சொல்கிறார். “அந்தச் சிறுமியின் மனோதிடம் அபாரமானது. எனவே, அவள் நாம் எதிர்பார்த்த நேரத்தைவிடவும் தனது உயிரைத் தற்காக்க போராடுவாள் என்பது மட்டும் உறுதியான ஒன்று”

இந்த உறுதிதான் மாவட்ட ஆட்சியருக்கும் தேவையாக இருந்தது. உயிரின் கடைசி நாளமும் கைவிட்டுப் போகும் முன்பாக எப்படியாகிலும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக, அனைத்து வழிகளிலும் முயல்கிறார் ஆட்சியர் மதிவதனி. ஆனால் அரசியல்வாதிகளிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த ஆழக்குழிக்குள் நடப்பது என்ன என்பதைப்பற்றி புரியாத நிலையில், சுற்றி நின்றுகொண்டிருந்த ஊர்ப்பொதுமக்களைக் கட்டுப்படுத்துவது, அங்கே மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.
கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறவர்கள் மூலமாகவே உண்மையான பிரச்சினைகள் வெளியே கொண்டுவரப்படுகின்றன. அந்த உண்மையானது, அத்தனை நாட்களும் அடக்கி வைக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். இழப்பதற்கு இனியும் ஒன்றும் இல்லை என்றால், இனி யாருக்காக பயப்பட வேண்டும்?. கோபி நயினாரின் கதை சொன்ன முறையும் இதுபோன்ற பல வெடித்துக்கிளம்பும் விஷயங்களாக இருந்தன.

கிராமம் மிகவும் தொலைவில் உள்ளது என்ற காரணத்தினாலும், அந்தக் கிராமத்திற்கு நல்ல சாலையோ, பாலமோ இல்லாததால், வழியில் நின்றுவிடும் தீயணைப்பு வாகனம் இதற்கு உதாரணம். “ஓட்டு வாங்குவதற்காக நீங்கள் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் நடந்தே வருவீர்கள்; ஆனால் எங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது உங்களுக்குத் தூரம் ஒரு பிரச்சினையாகிவிட்டது இல்லையா?” என்று கேட்கும் ஊர் மக்களின் உள்ளத்தில் நிலைகொண்டிருக்கிறது அரசியல்வாதிகள் மீதான ஒட்டுமொத்த கோபமும்.

ஆனால் மீட்புப்படை வீரர்களுக்குச் சாக்கு சொல்வதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. நவீனமாக எந்த உபகரணமும் அவர்கள் கையில் இல்லை. வெறும் 30 ஆயிரம் ரூபாயில் இளைஞர் ஒருவர் கண்டுபிடித்த ரோபோ கருவி மட்டுமே உண்டு. ஆனால் அதுவும்கூட நமது மீட்புப்படையினருக்குக் கையில் கிடைக்கவில்லை. போலீசார் தங்களைச் சம்பவ இடத்திற்கு அருகில் விடவில்லை என்ற பிரச்சினை, ஊடக நண்பர்களுக்கு வேதனையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குச் சொந்தக்காரர்களுக்கோ, நம் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயுமோ என்ற பயம். இப்படி, அனைத்து வேதனைகளும், பயங்களும், சங்கடங்களும், ஆவலும் மாவட்ட ஆட்சியராக வரும் மதிவதனி என்ற கதாபாத்திரத்தை மையம் கொள்கிறது. அனைவருக்கும் பதில் சொல்வதும், பதில் சொல்ல வேண்டியவரும் அவர்தான்.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை, ஜனநாயகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிவதனியின் மூலம், பார்வையாளருக்குக் கொண்டுபோய் சேர்க்கிறார் இயக்குநர். ஒரு புறம் 90 அடி ஆழத்தில் விழுந்து துடித்துக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்க எந்தவொரு வழியும் இல்லாமல் அதிகாரிகள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் அந்தக் கிராமத்திற்கு அக்கரையில், லட்சக்கணக்கான அடி உயரத்தை நோக்கி சீறிப்பாய்வதற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது இந்திய ராக்கெட். பல லட்சங்களுக்கு உதவி புரியும் ஒரு திட்டம் என்று கூறிக்கொண்டு கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், பூமிக்கடியில் ஒரு பிஞ்சுக் குழந்தையின் கடைசி மூச்சுகளின் எண்ணிக்கையும் தொடங்குகிறது. சாதனைக்கும் வேதனைக்கும் இடையில், சாமானியத்திலும் சாமானிய மக்கள் திணறிப் போகிறார்கள்.

தமிழ்நாட்டில் அத்துமீறி நடத்தப்படும் தண்ணீர்க் கொள்ளை குறித்தும் இந்தப் படம் பேசுகிறது. அதிகாரிகளை, அலுவலர்களை அவர்களின் கடமையைச் செய்வதற்குக்கூட விடாமல் தடுத்து அமர்த்தும் அரசியல்வாதிகளின் முகத்தில் துப்பும் அனுபவத்தையும் இந்தப் படத்தில் காணலாம்.

ஒரு பெண் மாவட்ட ஆட்சியராகலாம். அது எப்போதும் நிகழ்கின்ற ஒன்றுதான். ஆனால் தொடர்ந்து ஒரு அதிகாரத் தலத்திற்கு எட்டும்போது, பெண் என்ற நிலையில் அவள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாகுபாட்டை மிகவும் தெளிவாக பார்க்க முடிந்தது எனக்கூறுகிறது மதிவதனியின் கதாபாத்திரம்.

மனைவியின் உயிரைக் காக்க, அவளைத் தூக்கிக்கொண்டு ஓடும் கணவன் துரைராஜிடம், டாக்டர் அது குறித்துக் கேட்கிறார். “சார் இவள் இறந்துவிட்டால் நானும், என் மகனும் அநாதையாகிவிடுவோம்” எனக்கூறி அவர், தனது மனைவியைக் கட்டியணைத்துக் கதறியழுகிறார். ஆணின் நிழலாக அல்ல; அவனை முன்னோக்கி நடத்திச் செல்லும் ஒரு தலைமையாக பெண் இருக்கிறாள் என்பதை இதைவிட எப்படி அழகாக பார்வையாளனுக்குக் கொண்டுபோய் சேர்க்க முடியும்?

துரைராஜாக வாழ்ந்து காட்டிய நடிகர் ராமச்சந்திரன் இத்தனை நாட்களாக நடித்த வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறி, முக்கிய நட்சத்திரமாக வருவதற்கான மிகப்பெரிய பலனாக மாறியிருக்கிறது அறம். குழந்தை ஹன்சிகாவின் அம்மாவாக சுனு லட்சுமி வருகிறார். மகளைத் தேடும் அலைச்சலுக்கு இடையே, அவரின் ஒவ்வொரு கால்தடத்திலும் அவரின் முகத்தில் நிறையும் வேதனையும் வியாகுலமும் போதும் சுனுவின் இந்த நடிப்புக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் அளிக்க…
காக்காமுட்டை படத்தின் சிறுவர் நட்சத்திரங்களான விக்னேஷும், ரமேஸும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் வருகின்றனர். தமிழ் சினிமாவின் விளிம்பில் நின்றுகொண்டு அதிகமாய் மின்னித்துலங்கும் நடிப்புத் தலைமைகளை அறம் படத்திலும் காண முடியும்.

ஒரு விடியற்காலையில் தொடங்கி காலையில் முடிவடையும் இந்தப் படத்தின் கதையில், படத்தை முழுமையாக நகர்த்திக் கொண்டு போகிறவர் நயன்தாரா என்பதை நாம் சொல்ல முடியும்.
தன்னுடைய கவர்ச்சியால் தமிழகத்தை பிடித்து அடக்கி வைத்திருக்கிறார் நயன்தாரா என்று அவரைப் பற்றி கூறுகிறவர்கள், இனி அதை மாற்றிச் சொல்ல வேண்டியது வரும். கவர்ச்சியில் மின்னும் எந்த ஒரு காட்சியும் படத்திலும் இல்லை; நயன்தாராவுக்கும் இல்லை. கிளைமேக்ஸில் கடைசி நிமிடங்களில் நம்மால் ஒருபோதும் மறக்க இயலாத ஒரு ஆகச்சிறந்த நடிப்பை நமக்கு அர்ப்பணிக்கிறார் நயன்தாரா.

தமிழ்நாட்டுக் கிராமத்தின் வெக்கையையும், அழகையும் பார்வையாளன் கண் முன்னால் அப்படியே அள்ளி முன் வைக்கிறது ஓம் பிரகாஷின் கைவண்ணம். கட்டுப்பாட்டை உடைக்கும் கூட்டங்கள், எதிர்பாராத விதமாக ஏற்படுத்தும் மோதல்களும் படத்தில் உண்டு. அவை, அந்த நிமிடத்தின் வேகத்தில் உருவாகும் காட்சிகள். அதை அப்படியே பதிவு செய்வதில்தான் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. இந்தப் படத்தில் பீட்டர் ஹெய்னின் சண்டைப் பயிற்சி புதிய பரிமாணத்தை எட்டுகிறது. இசை ஜிப்ரான். எடிட்டிங் ரூபைன்.

அரசியல் விமர்சனங்களுக்கு இடையில், சொல்ல வேண்டும் என்பதற்காக சில விஷயங்கள், டி.வி. சானல் விவாதங்கள் மூலமாக வலுக்கட்டாயமாக புகுத்த முயன்றது என்பது மட்டுமே இந்தப் படத்தின் போதாமையாக சொல்ல முடியும். அதுவும்கூட, கமர்சியல் அல்லாத ஒரு படத்தில் ஒரு நகைச்சுவை உணர்வை உண்டாக்குகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

அறம் என்ற பதத்தை சத்கர்மம் (புனிதமான செயல்) என்று மலையாளத்தில் வியாக்யானம் செய்யலாம். நல்ல சினிமாக்களை விரும்புகின்ற; இந்தத் தேசத்திற்கு உறுதியான கருத்துக்களை, அபிப்ராயங்களை வழங்கும் சினிமாக்களை விரும்புகின்ற ரசிகர்களுக்கு, கோபி நயினார் செய்த சத்கர்மமும் கூடத்தான் இந்த அறம் படம் என நிச்சயமாக நாம் சொல்லலாம்.

நன்றி: மலையாள மனோரமா

தமிழில்: குஞ்சம்மாள்

இதையும் படியுங்கள்: ஆப்பிள் போனும் பிராடா கேன்டியும்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்